துரித உணவுகள் தேக ஆரோக்கியத்துக்கு தீங்கு | தினகரன்

துரித உணவுகள் தேக ஆரோக்கியத்துக்கு தீங்கு

தானிய உணவுப் பழக்கம் சிறந்தது

மிகவும் பரபரப்பு நிறைந்த தற்போதைய வாழ்க்கை முறையில் பெருமளவானோர் துரித உணவுகளை விரும்பி உட்கொள்வதுடன், அதனையே நாகரிகமெனவும் எண்ணுகின்றனர். துரித உணவுகள்  பசியை மாத்திரமே போக்கவல்லன. ஆனால், இத்துரித உணவுகளிலிருந்து தேக ஆரோக்கியத்துக்கு தேவையான  போஷாக்குக் கிடைப்பதில்லை.

துரித உணவுகளுக்கு பணத்தைச் செலவழித்து, இறுதியில் அவ்வுணவுகளினால் நோய்களைக் காவிக்கொண்டு வைத்தியச் செலவினங்களுக்காகவும் பணத்தைச் செலவழிக்கின்றோம். இவற்றினால் எஞ்சுவது ஒன்றுமில்லை.

எமது நாளாந்த வாழ்க்கையில் இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை நாம் உட்கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியுமென்பதுடன், நோய்த் தாக்கங்களிலிருந்தும் தப்பிக்க முடியும்.

சிலர் தானிய வகைகளை தமது உணவிலிருந்து புறந்தள்ளுகின்றனர். ஆனால், இத்தானிய உணவுகளே  எமது ஆரோக்கியத்துக்கு மிகச் சிறந்தவை என்பதுடன், ஊட்டச்சத்து நிறைந்தவையுமாகும்.

மேலும், இத்தானிய வகைகளிலும் முளைகட்டிய தானியங்களை எமது உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும் தன்மையும் முளைகட்டிய தானியங்களுக்கு அதிகம் உண்டு.

பாசிப்பயறு, கொண்டைக் கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, மைசூர் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சிவப்புக் காராமணி   உள்ளிட்ட தானிய வகைகளை முளை கட்டச் செய்து எமது நாளாந்த உணவில் பயன்படுத்த முடியும்.

இத்தானியங்களை நன்றாகக் கழுவி 8மணிநேரம் ஊறவைத்து பின்னர் ஈரமான பருத்தித் துணியில் சுற்றி வைத்தால், தானியங்கள் முளை கட்டியிருக்கும். இவற்றை கறியாக சமைத்தோ அல்லது அவித்தோ உட்கொள்ள முடியும். 

முளைகட்டிய பாசிப்பயறு உட்கொண்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிலிருக்குமென்பதுடன், முளைகட்டிய எள்ளு உட்கொண்டால் உடற்பருமன் குறைந்தவர்களின் எடை கூடுவதற்கான வாய்ப்புண்டு. முளைகட்டிய கொண்டைக்கடலையை உட்கொண்டால் எமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். இவ்வாறாக ஒவ்வொரு தானிய வகைகளிலும் எமது தேக ஆரோக்கியத்துக்கு தேவையான போஷாக்குக் கிடைக்கின்றன. எனவே, எமது நாளாந்த உணவில் சுவையைக் கைவிட்டு, தேக ஆரோக்கியத்துக்கு தேவையான போஷனைமிக்க உணவுகளை உட்கொள்ள எம்மை பழக்கப்படுத்த வேண்டும்.


Add new comment

Or log in with...