மக்களின் ஆரோக்கியத்துக்கு மது பாவனை உகந்ததல்ல | தினகரன்

மக்களின் ஆரோக்கியத்துக்கு மது பாவனை உகந்ததல்ல

இலங்கையில் மதுப்பாவனை வேகமாக அதிகரித்துச் செல்கின்றது. இதனை புள்ளிவிபரங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இந்த மதுப்பாவனையானது பொழுதுபோக்கில் தொடங்குகிறது.பின்னர் அதற்கே அடிமையாகும் நிலைமை ஏற்படுகின்றது.

இப்பாவனையூடாக சமூக, கலாசார சீர்கேடுகள் ஏற்படுவதோடல்லாமல் அவற்றின் பாவனைக்கு பழக்கப்படுபவர்கள் உடல், உள ரீதியான பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகின்றனர். அத்தோடு இப்பாவனைக்கு உள்ளாவோரில் பெரும்பகுதியினர் வறுமையின் பிடிக்குள்ளும் தள்ளப்படுகின்றனர். இவ்வாறான பாதிப்புகளையும் சீர்கேடுகளையும் கொண்டிருப்பதால் மதுப்பாவனையை தவிர்ந்து கொள்ளுமாறு ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மதுப் பாவனையானது போதையளிக்கக் கூடியதாகும். மனிதனின் இயல்பான செயற்பாடுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தி அவனது செயற்பாடுகளில் மாற்றங்களையும், வித்தியாசங்களையும் இப்பாவனை தோற்றுவிக்கும். மதுவை அருந்தும் போது அதனைப் பயன்படுத்துபவர்கள் இயல்பான செயற்பாடுகளிலிருந்து வெளியேறி விடுவர்.

ஏனெனில் மதுபானத்தில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களின் வெளிப்பாடே அதுவாகும். அதாவது மதுபானத்தில் காணப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் மனிதனின் உடல், உள இயக்கத்தைப் பேணிப் பராமரிக்கின்ற அல்லது இயக்குகின்ற மூளையின் மூளிப் பகுதியை நேரடியாகத் தாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாகவே மனிதன் மது அருந்துவதால் இயல்பு நிலையிலிருந்து வெளியேறுகிறான். ஆனால் தொடர்ந்து மது அருந்தும் போது இந்த மூளி உடல், உள உறுப்புக்களின் செயற்பாடுகளை பேணிப் பராமரிக்கும் தன்மையில் பலவீனத்துக்கு உள்ளாகும். இதனால்தான் மதுபாவனைக்குள்ளானவர்கள் சிறிது காலம் செல்லும் போது உடல் உறுப்புக்களின் நடுக்கங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

இதற்கான காரணம் என்னவெனில் மூளி அவ்வுறுப்புகளை நிர்வகிக்கும் திறனை இழந்திருப்பதன் வெளிப்பாடே அதுவாகும். அதேநேரம் மதுபானத்தில் காணப்படும் சில இரசாயனங்கள் சிறுநீரகத்துக்கும் ஆபத்தானவை. அவை சிறுநீரகத்தையும் பாதிக்கவே செய்யும். அத்தோடு உடலின் இயல்பான உஷ்ணநிலையை பேணுவதிலும் சீர்குலைவுகளை எதிர்கொள்ளும்.

இவ்வாறு உடல் உறுப்புக்களின் இயக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மதுபானம் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொற்றா நோய்களுக்கும் பக்கத்துணையாக அமையும். அந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெரும்தொகை நிதியை செலவிட நேரிடும்.

இலங்கையானது, இலவச சுகாதார சேவை அளிக்கும் நாடாக விளங்குவதால் மதுபாவனையால் தோற்றம் பெறுகின்ற நோய்களுக்கு உள்ளாகின்றவர்களில் பெரும்பாலானோர் அரசாங்க வைத்தியசாலைகளில்தான் சிகிச்சை பெற செல்கின்றனர். ஏனெனில் இவர்கள் தாம் வியர்வை சிந்தி உழைத்த பணத்தைக்கொடுத்து மது அருந்திய போதிலும், அதன் மூலம் ஏற்படுகின்ற நோய்களுக்கு அரசாங்க செலவில் சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர்.

அரசாங்கம் நாட்டு மக்களுக்காக இலவச சுகாதார சேவையை முன்னெடுத்து வருகின்ற போதிலும் தமது தவறானதும் பிழையானதுமான செயற்பாடுகள் ஊடான மதுப்பாவனை மூலம் தோற்றம் பெறுகின்ற நோய்களுக்கு உள்ளாகின்றவர்கள் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வது- நியாயமானதல்ல. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு தம் பணத்தைக் கொடுத்து மதுப்பாவனைக்கு உள்ளானவர்கள் நோய்களுக்குள்ளாகி சிகிச்சை பெற வரும் போது அவர்களிடம் அச்சிகிச்சைக்கான கட்டணங்களை அறவிடுவதில் கவனம் செலுத்துவது கூட தவறாக அமையாது என்பதுதான் மக்கள் கருத்தாக உள்ளது.

இதேவேளை சமூக, கலாசார சீர்கேடுகள் ஏற்படவும் மதுப்பாவனை காரணமாக அமைகின்றது. குடும்பச் சச்சரவுகள் தோற்றம் பெறவும், குடும்பங்கள் சிதைவடையவும், யாதும் அறியா அப்பாவி குழந்தைகள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகவும் கூட இப்பழக்கம் துணைபுரிகின்றது. அத்தோடு மதுப் பழக்கத்துக்கு உள்ளானோர்களில் பெரும்பகுதியினர் வறுமையின் பிடிக்குள்ளும் தள்ளப்படுகின்றனர். இதன் விளைவாக குடும்ப ரீதியான பலவிதமான நெருக்கடிகளும் தோற்றம் பெறவே செய்கின்றன.

இவை இவ்வாறிருக்க, வீதி வாகன விபத்துகள் ஏற்பட மதுபாவனையுடன் வாகனம் செலுத்தல் அதிகம் பங்களிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, அண்மையில் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் மேல் மாகாணத்தில் நடத்திய திடீர் தேடுதல்களில் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு குடும்ப, சமூக கலாசார சீரழிவுகளுக்கு மாத்திரமல்லாமல் உடல், உள ஆரோக்கியத்துக்கும் கெடுதல்களை ஏற்படுத்தக் கூடிய மதுபாவனையை ஒழிப்பதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது விடயத்தில் அதிக கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், தற்போது நாட்டில் 3000 மது விற்பனை நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும், அவற்றில் 1200 மதுவிற்பனை நிலையங்கள்தான் சட்டபூர்வ அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான் பிரதேசத்தில மதுபான உற்பத்திச்சாலையை அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிக்கும் ஓமந்தையில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கும் எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் மதுபாவனையின் விளைவுகளை எடுத்துக் கூறுவதாயுள்ளன.

ஆகவே நாட்டில் மதுப்பாவனையைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான நற்பண்புகள் நிறைந்த வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அதுவே நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கும் பொருளாதார சுபிட்சத்துக்கும் மனித வளத்தை உச்சளவில் பயன்படுத்துவதற்கும் பக்கபலமாக அமையும்.


Add new comment

Or log in with...