வெப்பகாலத்தில் எம்மை பாதுகாப்பது எவ்வாறு? | தினகரன்

வெப்பகாலத்தில் எம்மை பாதுகாப்பது எவ்வாறு?

குளிர் காலம் முடிந்து வெப்ப காலம் தொடங்கிவிட்டாலே, பலரும் வெப்பத்தை தாங்க முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அத்துடன், வெப்ப காலத்தில் பல்வேறு வகையான நோய்களும் எம்மைத் தாக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆகவே, இவ்வெப்ப காலத்தில் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள அதற்குரிய வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

வெப்ப காலம் முழுதுமே எம்மைச் சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலும் வீசும் அனல் காற்றும் எமது தேகத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்கின்றன.

வெப்ப காலத்தில் எவ்வகையான நோய்கள் எம்மைத் தாக்குகின்றன. இவற்றுக்குரிய நிவாரணம் என்னவென்பது பற்றி நாம் நோக்குவோம்.

வெப்ப காலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம். பித்தம் உடலில் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து,  உடலின் நீர்ச்சத்தை தோலின் வழியாக இழக்கச் செய்கின்றது. இதனால் உடற்சோர்வு, தாகம், நாக்கு வரட்சியாதல், களைப்பு,  சருமத்தில் வியர்க்குரு தோன்றுதல், சிறுநீர் குறைவாகக் கழிதல், மலச்சிக்கல்,  கண் எரிச்சல்,  மஞ்சள் காமாலை, அம்மை நோய் உள்ளிட்ட நோய்கள் எம்மைத் தாக்குகின்றன.

இந்நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின், திரவ ஆகாரங்களையும் பழங்களையும் மரக்கறிகளையும் கீரைகளையும் எமது நாளாந்த உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதேவேளை எமது நாளாந்த உணவில் உறைப்பு, புளிப்பு, மசாலாப் பொருட்கள் சேர்ந்த உணவுகளையும்,  தேநீர், கோப்பி ஆகியவற்றையும் தவிர்த்தால் சிறந்ததாகும்.

பாணம் எனும்போது, தண்ணீர் அருந்துவதே முதலில் சிறந்ததாகும். அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தினசரி 2அல்லது 3லீற்றர் தண்ணீர் அருந்த முடியுமென்பதுடன், கொதித்தாறிய நீரை அருந்த வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது நற்சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க வைத்து அந்நீரை அருந்துவதால் உடலில் குளிர்ச்சியைப் பேண முடியும்.

தயிர், மோர் என்பனவும் வெப்ப காலத்துக்கேற்றவையாகும். அத்துடன், அதிக உடற்சோர்வு உள்ளவர்கள் எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து பகல் வேளைகளில் அருந்தலாம். இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், வர்த்தகப்பழம் மாதுளை, வில்வம் பழம் உள்ளிட்ட பழ வகைகளையும் நாம்; உட்கொள்ளலாம். இவற்றினால் எமது உடலில்  நீர்ச்சத்து சேர்க்கப்படுவதுடன், பித்தமும் குறையும்.

இவ்வாறிருக்க, வெப்பகால நோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள வாரம் இரு தடவைகள் எண்ணெய்க் குளியல் எடுக்கலாம்.  நல்லெண்ணெயைக் கூட, எண்ணெய்க் குளியலுக்கு பயன்படுத்தலாம். இதனால் பித்தமும் குறையும், கண்களும் குளிர்ச்சி அடையும்.

வியர்க்குரு பருக்களை போக்க பனை நுங்கினை உண்பதுடன், சருமத்தின் மீதும் பூசலாம். சரும பாதிப்பு வராமல் தடுக்க சோற்றுக் கற்றாழையை மடல் நீக்கி, சருமத்தில் பூசி வரலாம்.

எனவே, செயற்கையான குளிர்பானங்களையும் நிறமூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்த்து, இயற்கையான உணவுப் பழக்கத்தை நாம் பேணுவதே சிறந்ததாகும். 


Add new comment

Or log in with...