தவக்காலம் வாழ்வின் வசந்தம் | தினகரன்

தவக்காலம் வாழ்வின் வசந்தம்

தவக்காலம் கிறிஸ்தவ வாழ்வில் ஒரு வசந்தம். நம்மை நாம் உற்றுப் பார்த்து நம் குறைகளைத் தீர்த்துக்கொள்ளும் காலமாக இது அமைகிறது. நம்மவர்கள் மத்தியில் இந்நோக்கத்தோடு பல்வேறு பழக்க வழக்கங்களும் பக்தி முயற்சிகளும் நிலவுகின்றன. 

தவக்காலம் திருநீற்றுப் புதனுடன் தொடங்குகின்றது. அன்றைய தினம் ஒரு சந்தியும் சுத்தபோசனமுமான ஒரு தினமாகும். தவக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் அதனைச் சேராது என்றபடியால் திருநீற்றுப் புதனிலிருந்து பெரிய வெள்ளி வரை 49நாட்கள் இது நீடிக்கும்.  பொதுவாக நம் மக்கள் அனைவருமே திருநீற்றுப் புதன் காலையிலேயே ஆலயத்துக்குப் போய் ‘திருப்பலியில் கலந்து நெற்றியில் திருநீற்றினால் சிலுவை அடையாளம் அணிந்து கொள்வார்கள்.  ஒரு சந்தி என்பது அன்றைய தினம் ஒரு வேளை மட்டுமே உண்பதைக் குறிக்கும். முற்காலங்களில் திருச்சபை மிகப் பெரும் பாரங்களை விசுவாசிகள் மீது திணித்திருந்தது. ஆனால் இன்றோ மொத்தம் இரண்டு நாட்களையே அது உபவாசத்திற்கு அழைக்கின்றது. திருநீற்றுப் புதனும் பெரிய வெள்ளிக்கிழமையுமே அந்த நாட்கள். 

ஒரு சந்தி கட்டுப்பாடு சிறிய குழந்தைகளுக்கும் அறுபது வயதைத் தாண்டிய முதியவர்களுக்கும் கிடையாது. 

இதனால் உணவே கிடைக்காமலிருக்கும் ஆயிரக்கணக்கானோருடன் நாம் ஒன்றிணைகின்றோம். நாம் ஒவ்வொரு நாளும் உணவு உண்பதே ஆண்டவரின் பெரும் கருணை மிகு செயலாகும்.

 நாம் பசியோடு இருக்க வேண்டும் என்பது அவர் சித்தமல்ல. பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மன்னா எனப்படும்  வானக அப்பத்தைக் கொடுத்து பசியாற்றினார் இறைவன்.   மனிதர் தம் வாழ்வில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிகழலாம். ஏதோ ஒரு காரணம் ஏற்பட்டு ஆண்டு முழுவதுமே உண்ணா நோன்பிருக்கும் ஒரு காலம் வரலாம்.  

சுத்தபோசனம் என்பது இறைச்சி தவிர்த்து உண்பதாகும். ஆடு, மாடு போன்ற மிருகங்கள், கோழி போன்ற பறவையினங்களின் இறைச்சி ஆகியவை ஆண்டின் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் திருநூற்றுப் புதன் அன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.

சிலர் எதையும் எப்போதும் எங்கேயும் சாப்பிடுவர். இதற்காகத்தான் தொடக்க காலத்திலிருந்து வெள்ளிக்கிழமைகளில் திருமணமும் தவிர்க்கப்பட்டது. இப்போதெல்லாம் சுத்தபோசன நாட்களில் கூட மரித்துப்போன ஆத்மாக்களுக்கு துக்கப் பூசை வைத்து அதன் பின் கோழி, பன்றி, ஆடு, மாடு என சாப்பிடுகிறார்கள்.

 நாம் கண்டதையும் வகை தொகையில்லாமல் தின்று வளரும் ஆடு, மாடுகள் அல்லவே. 

ஒரு காலத்தில் கத்தோலிக்கப் பெண்கள் கறுப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் மட்டுமே தவக்காலத்தில் ஆடைகள் அணிவர். தற்போது சிலர் மட்டுமே இவ்வாறான ஆடைகளை பெரிய வெள்ளி அன்று அணிகிறார்கள். 

தவக்காலத்தில் ‘சிலுவைப்பாதை’ பக்தி அநேக பங்குகளில் வாரந்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பல மொழிகளில் நடைபெறும். இதில் வேடிக்கை என்னவென்றால் வருடம் முழுவதும் அதைப்பற்றி யோசிக்காத மக்கள் திடீரென இதற்காகப் படையெடுப்பர். 

இதற்காக சில சமூகங்கள், மொழி சார்ந்தோர், பக்தி சபைகள் மத்தியில் மோதல்கள் கூட நடைபெறலாம். ஹினிதுமை கல்வாரி, தலவில்லு என பல்வேறு வெளியூர்களுக்கு சாரிசாரியாக பஸ்கள் செல்லும். எந்த அளவிற்கு இவற்றினால் பலனுண்டு என்பது அதனை ஒழுங்கு செய்கின்றவர்களைச் சார்ந்ததாயினும் அதில் கலந்துகொள்கின்றவர்களையே அது அதிகம் தங்கியிருக்கின்றது என்பதே உண்மை.  

சில வேளைகளில் கத்தோலிக்கரல்லாதவர்கள் (வெளிநாட்டிலிருந்து வந்திருப்போர் கூட) அதனை மலிவான விலையில் கிடைக்கும் ஒரு உல்லாச பயணமாகக் கருதி செல்வார்கள். 

பெரிய வெள்ளிக்கிழமை நெருங்கும்போது ‘பாஸ்கு’ திருப்பாடுகள் நாடகங்கள் நடத்துவார்கள். ஆண்டவர் பூங்காவனத்தில் இரத்த வியர்வை சிந்திய காட்சி முதல் அவர் மரணிக்கும் நிகழ்வு வரை கிராமங்களில் நடத்திக் காட்டுவார்கள்.  

இதற்காக பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட பயிற்சிகள் இருக்கும். நடிகர்கள் தம் உடலை ஒறுத்து, புனிதத்தைக் கடைப்பிடித்து வருவார்கள். அநேகமாக அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள மட்டுமே அதில் இருப்பார்கள்.  இறுதிக் காட்சிகளில் மட்டும் சுரூபங்கள் இருக்கும். அது நடந்து முடிந்த பின் பெரிய வெள்ளிக்கிழமை ஆராதனை தொடரும். ஆண்டவரைக் கசையால் அடிக்கும் வேளையில் நேர்த்திக்கடனாக பல இளைஞர்கள் தங்களைத் தாங்களே முட்கம்பிகளினால் அடித்துக்கொள்வர்.  

நீர்கொழும்பில் ‘தூவ’ என்ற இடத்தில் நடக்கும் பாஸ்கு பிரபலமானது. கப்புக்கொடை, பிற்றிப்பன, போருதோட்டை போன்ற இதர இடங்களிலும் இவை நிகழ்த்தப்படும். வடக்கே பேசாலையில் நடத்தப்படும்.           


Add new comment

Or log in with...