மாணவர்கள் கல்வியில் வெற்றியடைய பெற்றோரின் அன்புதான் அவசியம் | தினகரன்

மாணவர்கள் கல்வியில் வெற்றியடைய பெற்றோரின் அன்புதான் அவசியம்

மாணவர்கள் சிறப்பாகக் கற்பதில் ஆசிரியர் மட்டுமல்லாது அவர்களது பெற்றோரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெற்றோர் சிறந்த மனப்பாங்குடன் தமது பிள்ளைகளின் கல்வியைக் கவனிக்கும் போதுதான் அந்தப் பிள்ளையின் கல்வி வெற்றி பெறுகின்றது.

மாணவர்கள் வினைத்திறனாகக் கற்க, அவர்களது உடல் மற்றும் உள ஆரோக்கியம் மிக முக்கியமானது. இவற்றைப் பராமரிப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது. ஆரோக்கியமான மாணவரிடத்தே ஆரோக்கியமான அறிவும் சிந்தனையும் காணப்படுகின்றது. வினைத்திறனுள்ள கற்றல் செயற்பாட்டில் மாணவரின் மனத் தயார் நிலை முக்கியமானது.பசியுடன் வகுப்பறை செல்லும் மாணவர்கள் கற்கின்றார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கக் கூடிய போசாக்கான உணவுகளை பெற்றோர் உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோரின் அன்பு பிள்ளைப் பருவ மாணவர்களுக்கு அவசியமாகும். பிள்ளைகள் மீதான பெற்றோரின் அன்பு வெளிப்படுத்தப்பட வேண்டும்.மாணவரின் மனவெழுச்சி சமநிலையைப் பராமரிப்பதில் ஆசிரியர்களின் பொறுப்பை விட பெற்றோரின் பொறுப்பு முக்கியமானது. ஆனால் தற்காலத்தில் குடும்பங்களில் ஏற்படக் கூடிய பிணக்குகள், மாணவர்களின் கற்றலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே குடும்பங்களில் இயன்றளவு பிணக்குகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் மனமுறிவுகளையும் பதற்றங்களையும் குறைப்பதற்கு பெற்றோர் உதவும் பட்சத்தில் கற்றலுக்கு ஏற்ற சூழலை இலகுவாக உருவாக்க முடியும்.

கற்கும் சூழல் முக்கியமானது, கற்றலுக்கு இயைபான பௌதிக சூழல் வாய்க்கும் போது கற்றல் வினைத்திறன் உள்ளதாக அமையும். பெற்றோர் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.அதாவது அமைதியானதும் பொருத்தமானதும் சுகாதாரமானதுமான இடம், காற்றோட்டமும் போதியளவு வெளிச்சமும் உள்ள இடம் மற்றும் கற்றலுக்குத் தேவையான சாதனங்களைப் பெற்றுக் கொடுத்தல் என்பனவாகும்.

மாணவர்களின் நேர்மனவெழுச்சிகளைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதாவது, அனைத்து மாணவர்களும் கற்கும் ஆற்றலுடையோர் என்பதை அங்கீகரித்தல், மாணவர்களின் தனியாள் பேறுபாடுகளுக்கு மதிப்பளித்தல், மாணவர்கள் தாம் அறிந்தவற்றை வெளிப்படுத்துவதற்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பங்களை உருவாக்குதல் மற்றும் கற்றல் செயற்பாட்டை வாழ்வின் உயர் இலக்குகளோடு இணைத்தல் என்பன நேர்மனவெழுச்சியைப் பேணுவதற்கு சில வழிகளாகும்.

மனவெழுச்சிகளைப் பாதிக்கும் விடயங்களைப் பெற்றோர் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளை மோசமான வார்த்தைகளால் திட்டுதல், மட்டம் தட்டிப் பேசுதல், நச்சரித்தல், பிள்ளைகளைப் பக்கச் சார்பாக அணுகுதல், ஏமாற்றுதல் போன்ற விடயங்களைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

செவிமடுத்தல், பாராட்டல், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றல், சேர்ந்து விளையாடுதல், கேள்விகளுக்கு பதிலளித்தல் மற்றும் அன்புடன் உரையாடல் போன்ற செயற்பாடுகளில் பெற்றோர் ஈடுபட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளினூடாக பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பதோடு கற்பதை இலகுவாக விளங்கவும் அதிக விடயங்களை ஞாபகத்தில் வைத்திருக்கவும் அவசியமான உள இங்கித நிலையைப் பெறுகின்றனர்.

கற்றலிலிருந்து மாணவர்களின் இயல்பான கவனத்தைத் திசை திருப்பும் காரணிகள் அநேகம் உள்ளன. அத்தகைய கவனக் கலைப்பான்களைப் பெற்றோர் இயன்றளவு அகற்ற வேண்டும். கணினி, தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி மற்றும் இலத்திரனியல் கருவிகள் போன்றன மாணவர்களின் கற்றலுக்குத் தடையாக அமையலாம். இவற்றின் பாவனையைப் பெற்றோர், மாணவர்களின் கல்விக்குத் தடையற்ற விதத்தில் நெறிப்படுத்த வேண்டும்.

பெற்றோர் நன்றாகவும் தொடர்ச்சியாகவும் பராமரிக்கும் பிள்ளைகள் ஆரம்ப நிலை வகுப்புகளிலேயே நல்ல பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளமை ஆய்வுகளின் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு பராமரிப்பு என்பது பெற்றோரது அன்பின் செயல் விளைவாகும்.

பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் போன்று உடல் சுத்தமும் பேணப்பட வேண்டும். மாணவப் பருவத்திலுள்ள பிள்ளைகளின் சுத்தத்தைப் பராமரிக்கும் வேலையை பிள்ளைகளிடம் மட்டுமே விட்டுவிட முடியாது. ஒவ்வொரு நாளும் குளித்தல், சுத்தமான ஆடைகளை அணிதல்,பற்களின் பராமரிப்பு என்பவற்றில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, ஆரம்ப நிலையிலுள்ள மாணவர்கள் மீதான பெற்றோரின் கவனம் முக்கியமானது. ஏனெனில் இந்நிலை மாணவர்களுடன் ஆசிரியர் மிக நெருக்கமான இடைவினையில் ஈடுபடுவர்.

சில ஆசிரியர்கள் மாணவர்களின் வியர்வைத் துர்நாற்றம் காரணமாக அவர்களை அணுக விரும்புவதில்லை. எனவே ஆசிரியர்கள், பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக மாணவர்கள் உணரத் தலைப்படுவர். இதனால், காலப் போக்கில் ஆசிரியரிடம் கற்பதற்கு அப்பிள்ளைக்கு வெறுப்பு ஏற்படும். மாணவர்களின் கற்றல் தளர்ச்சிக்கு இதுவும் ஓர் காரணமாகும். எனவே பெற்றோர் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறான உத்திகளைப் பெற்றோர் கையாளும் போது மாணவர்களின் கற்றலில் சீரான ஒரு வளர்ச்சிப் போக்கைக் காணலாம்.

 

எம்.ஆர்.பெரோசா பேகம்
கல்விப் பீடம்
கொழும்பு பல்கலைக்கழகம் 


Add new comment

Or log in with...