Home » டவர் நாடக விழா இன்று

டவர் நாடக விழா இன்று

சங்கவி பிலிம்ஸ் நிறுவனம் ஜுரி விருது வழங்கல்

by Gayan Abeykoon
December 28, 2023 8:35 am 0 comment

கல்வி அமைச்சும், டவர் மண்டப அரங்க மண்டபமும் அகில இலங்கை ரீதியாக சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இடையே நடத்திய நாடகப்போட்டியின் பரிசளிப்பு விழா ஐடிஎம் நேஷன்ஸ் கெம்பஸ் நிறுவனத்தினதும் சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தினதும் அனுசரணையுடனும் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் இன்று 28ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வருடாந்தம் நடத்தப்படும் இந்நாடகவிழாவில் இம்முறை முதன் முறையாக தமிழ், சிங்கள நாடகங்களின் பரிசளிப்பு விழா ஒரே மேடையில் ஒரே நேரத்தில் நடாத்தப்பட இருக்கிறது. அதுமாத்திரமல்ல இந்த மேடையில் முதன் முறையாக தமிழ் நாட்டியக் குழுவொன்றின் நடனம் அரங்கேற இருக்கிறது.

பரத நாட்டியக் கலையில் 30 வருட கால அனுபவம் கொண்ட சாம கலைத்திலகம் திருமதி இளங்கோவன் செல்வராணியை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் வத்தளை கலைத்தென்றல் நாட்டியக் கலா நிலையத்தின் மாணவிகளின் நடனம் தான் இங்கு அரங்கேற இருக்கிறது. கிருஷ்ண தீபன் கௌசல்யா, கலைவாணி வினோத், காந்த் கவிஷ்கா, செனன் ஏன்ஜல் சுரேஷ் குமார், விஜேகுமார் நித்தியகலா, விஜேகுமார் சிந்துஜா, குமாரவேலு பவித்ரா, ஹரிஹரன் மாத்யா ஆகியோரின் நடன நிகழ்வு இங்கு மேடையேற இருக்கிறது.

டவர் மண்டப அரங்க மன்றத்தின் தலைவர் பிரதமர் தினேஸ் குணவர்தனவின் தலைமையில் புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும்அமைச்சின் செயலாளர்கள் பலரின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறவுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர், ஐடிஎம் நேஷன்ஸ் கெம்பஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி வி. ஜனகன், சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி துரைராசா சுரேஸ், தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், டவர் மண்டப மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி. எம். எஸ். திசாநாயக்க ஆகியோரும் இதில் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளார்கள்.

மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த விழாவில், ஆசிரியர்கள், பாடசாலை மாணவ, மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இவ்விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பணப்பரிசில்கள், விருதுகளும் வழங்கப்படவுள்ளன. தேசிய ரீதியாக நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட சகல பாடசாலைகளுக்கும் ஒரு தொகுதி நுால்களும் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. இம்முறை பணப்பரிசில்கள் வழங்குவதற்குரிய அனுசரணையை ஐடிஎம் நேஷன்ஸ் கெம்பஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

அதேபோல் 61 ஜுரி விருதுகளுக்கான அனுசரணையை சங்கவி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இம்முறை விருது வழங்கும் விழாவை அரச துறையினர் மட்டுமன்றி தனியார் துறையினரையும் இணைத்துக் கொண்டு நடத்துவது சிறப்பம்சம் என டவர் மண்டப அரங்க மன்றம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சும், டவர் மண்டப அரங்க மண்டபமும் மேடை நாடகக் கலையை முன்னேற்றுவதற்காகவும் குறு நாடகக் கலை மற்றும் நீண்ட நேர நாடகக் கலையை சீராக உயர்வ டையச் செய்து செளந்தர்ய கலைகளை அனுபவித்து பார்த்து, கண்டு ரசித்து களிப்படைகின்ற சமுதாயத்தை மேம்படுத்துகின்ற நோக்கத்துக்காக வருடாந்தம் பாடசாலை மாணவ மாணவிகளிடையே இந்த நாடகப் போட்டியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியை நடத்துவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் மறைந்து கிடக்கும் பாட்டு பாடும் திறமை, இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை, நடிப்புத் திறமை ஆகியவற்றை வௌி க் கொணர்வதுடன் அவர்கள் இத்துறையில் கொண்டுள்ள ஆற்றலை இனங்காண்பதற்கும் உதவியாக இருக்கிறது. இலங்கையின் நாடக பாரம்பரியம் தொடர்பான அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கும் இது உதவியாக இருக்கிறது.

டனுஜனி சிதாரி,

டவர் மண்டப நாடக விழா

ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT