தீயாகப் பரவுகிறது தேர்தல் பரபரப்பு! | தினகரன்


தீயாகப் பரவுகிறது தேர்தல் பரபரப்பு!

ந்தியா மாத்திரமன்றி உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான திகதிகள் அதிகாரபூர்வமாக நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம் திகதி முதல் மே மாதம் 19ம் திகதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்தியா எங்கும் தேர்தல் வேகமாக சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் திகதியன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.தேர்தலின் இறுதி முடிவுகள் மே 23ம் திகதியன்று அறிவிக்கப்படும். முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்க இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ளதால், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

இதேவேளை பா.ஜ.க அரசை எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரதமர் நரேந்திர மோடியே பிரதமராகத் தொடர வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புவதாக இந்திய ரி.வியும்- சி.என்.எக்ஸ் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியா ரி.வியும் சி.என்.எக்ஸும் இணைந்து 38,600 பேரிடம் 193 லோக்சபா தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. இவை கடந்த மார்ச் 1 முதல் 7-ஆம் திகதி வரை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 47 சதவீதம் பேர் விரும்புகின்றனர். 30 சதவீதம் பேரின் தேர்வு ராகுல்காந்தியாக உள்ளது. 'பணவீக்கத்தை கட்டுப்படுத்த பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்கிறதா?' என்ற கேள்விக்கு 46 சதவீதம் பேர் 'ஆம்' என்றும் ,44 சதவீதம் பேர் 'இல்லை' என்றும் வாக்களித்துள்ளனர்.

வேலையின்மை பிரச்சினையால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதாக 46 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ஆனால் இதற்கு ஆதரவாக 45 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். எனினும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு 60 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர்.

தற்போது பாகிஸ்தானுடனான பதற்றமான சூழலை கையாளும் விதத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக 58 சதவீதம் பேரும், திருப்திகரமாக இல்லை என்று 31 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

ஊழலை பொறுத்தவரை பா.ஜ.க அரசு திறமையாக கையாண்டதாக 51 சதவீதம் பேரும் இதற்கு எதிராக 40 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

'வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க மோடி அரசு நடவடிக்கை எடுத்ததா?' என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் 'இல்லை' என்றும் 30 சதவீதம் பேர் 'ஆம்' என்றும் தெரிவித்துள்ளனர். 'பணமதிப்பிழப்பு தேசத்தின் பொருளாதாரத்தை பாதித்ததா?' என்ற கேள்விக்கு 47 சதவீதம் பேர் 'ஆம்' என்றும் 41 சதவீதம் பேர் 'இல்லை' என்றும் தெரிவித்துள்ளனர்.

சோனியா மீண்டும் அதே தொகுதியில்:

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி லோக்சபா தொகுதியில் 5-வது முறையாக போட்டியிடுகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.இத்தொகுதி சோனியா காந்திக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டது.

ரேபரேலி தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. இங்கு 1977-இல் நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்தார். இதையடுத்து நடந்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது.மாமியாரின் தொகுதியான ரேபரேலியில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் சோனியா காந்தி போட்டியிட்டு வருகிறார். தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இவர் தற்போது 5வது முறையாக போட்டியிடுகிறார்.

அண்மையில் சோனியாகாந்திக்கு சுகவீனம் ஏற்பட்டது. இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இவருக்கு பதிலாக அத்தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் எனக் கருதப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை என ஏற்கெனவே தெரிவித்து விட்டார். இதையடுத்து சோனியாகாந்தியே ரேபரேலியில் போட்டியிடுகிறார்.

தமிழகத்தின் தேர்தல் நிலைமை:

தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் தி.மு.க 16 இடங்களில் வெற்றி பெறும் என இந்தியா ரி.வியும் சி.என்.எக்ஸும் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்.

தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 18ம் திகதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தல் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாததால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக் கணிப்பின்படி தி.மு.க 16 இடங்களிலும் , அ.தி.முக 12 இடங்களிலும் , அ.ம.மு.க பாமக 2 இடங்களிலும் மற்ற கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தே.மு.தி.க வழக்கம் போல் இந்தத் தேர்தலிலும் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

கருத்து கணிப்புகளில் கூட வெற்றி பெற முடியாத தே.மு.தி.க இத்தனை நாட்களாக தங்களுக்கு இத்தனை தொகுதி வேண்டும், அத்தனை தொகுதி வேண்டும் என பேரம் பேசி வருவது நகைச்சுவையானது என்று ஏனைய கட்சிகள் பரிகாசம் செய்யத் தொடங்கி விட்டன.


Add new comment

Or log in with...