போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பலப்படுத்தப்படுவது அவசியம் | தினகரன்

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பலப்படுத்தப்படுவது அவசியம்

எல்லை மீறியபடி சென்று கொண்டிருக்கின்றது போதைப்பொருள் கடத்தல்! நேற்றும் பெருமளவு போதைப் பொருள் மொரட்டுவை பிரதேசத்திலுள்ள ராவத்தாவத்தையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் அளவு 160 கிலோ கிராம்.

நாட்டில் இடம்பெறுகின்ற போதைவஸ்து கடத்தல் தொடர்பாக ஊடகங்களில் அடிக்கடி வெளிவருகின்ற செய்திகள் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் அடிக்கடி கைப்பற்றப்படுகின்ற போதைவஸ்துகளின் அளவைப் பார்க்கின்ற போது அதிர்ச்சி இயல்பாகவே எமக்கெல்லாம் ஏற்படுகின்றது.

முன்னரெல்லாம் கிராம்கள் அளவில் கடத்தப்படுகின்ற போதைப்பொருட்கள், இப்போதெல்லாம் கிலோகிராம் எடையைத் தாண்டி விட்டன. ஓரிடத்தில் கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருளின் பெறுமதி ஐம்பது, அறுபது கோடி ரூபாவைத் தாண்டியபடி சென்று கொண்டிருக்கின்றது.

இத்தனை பாரிய தொகையான போதைப்பொருள் ஒரே சமயத்தில் கைப்பற்றப்படுவதும், இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் அடிக்கடி இடம்பெறுவதும் அதிர்ச்சியும் அச்சமும் தருகின்ற விடயங்களாகும்.

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்கின்ற அதிகாரிகளின் கடமையை இவ்விடத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது. அரவர்கள் தங்களது பணியில் அசமந்தமாக இருந்திருப்பார்களேயானால், கைப்பற்றப்பட்ட அத்தனை தொகை போதைப்பொருட்களும் எமது நாட்டுக்குள் தாராளமாக பிரவேசித்திருக்கும் என்பதை நாமெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆனாலும் மறுபுறத்தில் பல்வேறு வினாக்கள் எமக்குள் எழாமலில்லை.

நாட்டுக்குள் பெருமளவு போதைப்பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்படுவதனால் ஏற்படுகின்ற நிம்மதி ஒருபுறம் இருக்கட்டும்... போதைப்பொருள் இவ்வாறு அடிக்கடி கைப்பற்றப்படுவதைப் பார்க்கின்ற போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது.

முன்னரைப் போன்று இல்லாமல் நாட்டுக்குள் போதைப் பொருள் கடத்தல் இப்போது அதிகரித்து விட்டது என்பதே அந்த உண்மை!

அவ்வாறானால் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரின் கண்காணிப்பையும் தாண்டி பெருமளவு போதைவஸ்துகள் நாட்டுக்குள் நுழைந்து விடுவதற்கான சந்தர்ப்பமும் உள்ளதல்லவா?

எமக்கெல்லாம் அச்சம் தருகின்ற முக்கியமானதொரு சந்தேகம் இது! அவ்வாறு பொலிஸாரின் கண்காணிப்பையும் தாண்டி போதைப்பொருட்கள் நாட்டுக்குள் நுழைவது சாத்தியமானால், ஏற்படப் போகின்ற பாதிப்புகளை நினைத்தால் அச்சம் ஏற்படுகிறது. எமது சமுதாயத்தின் எதிர்காலப் பாதிப்பை நினைத்துப் பார்க்க முடியாமலிருக்கின்றது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, சமீப காலமாக இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தல்கள் அதிகரித்திருப்பதற்கான காரணம் என்ன?

நாட்டிலுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களை இலக்கு வைத்து போதைப்பொருளைக் கடத்துகின்றனரா? இல்லையெனில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பெருந்தொகைப் போதைப்பொருள் கடத்தப்படுவதற்கான இடைத்தங்கல் தளமாக கடத்தல்காரர்கள் எமது நாட்டைப் பயன்படுத்துகின்றனரா?

இவ்வாறெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன. சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை அவர்கள் பல்வேறு நாடுகளையும் தளமாகப் பயன்படுத்துவது வழக்கம். அந்தந்த நாடுகளில் யாரேனுமொரு உள்ளூர் முகவரையும் இக்கடத்தலுக்கு உதவியாக அவர்கள் வைத்திருப்பதுண்டு.

விமானம், கப்பல் ஆகியவற்றின் மார்க்கமாகக் கடத்தப்படுகின்ற பெருமளவு போதைப் பொருளை கையாள்வதற்கென சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கி அவர்கள் செயற்படுகின்றனர்.

நடுக்கடலில் பயணம் செய்கின்ற கப்பலில் இருந்து சிறு படகில் போதைப்பொருளை ஏற்றிக் கொண்டு கரைக்கு வந்து சேருகின்ற திகில் நிறைந்த காரியத்தையெல்லாம் செய்யத் துணிந்தவர்கள் இவர்கள்!

பாரிய போதைவஸ்து கடத்தல் முறியடிப்பொன்று சமீபத்தில் பேருவளையில் இடம்பெற்றமை அனைவருக்கும் நினைவிருக்கலாம். கடல் வழியாக பெருமளவு போதைப்பொருள் படகு மூலம் கரைக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே கைப்பற்றப்பட்டது.

சர்வதேச கடத்தல் கும்பல்கள் இவ்வாறான பலவிதமான உத்திகளையும் கையாண்டு கொண்டேயிருப்பார்கள். இலங்கைக்குக் கடத்தி வரப்படுகின்ற போதைப்பொருட்களில் பெருமளவானவை பாகிஸ்தான்,பங்களாதேஷே் போன்ற நாடுகளில் இருந்தே கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. போதைவஸ்து கடத்தல் முறியடிப்பின் போது கைதானவர்களில் அநேகம் பேர் பாகிஸ்தான் நாட்டவராக உள்ளனர். அவர்கள் இலங்கைக்கு அதனைக் கடத்துகின்றனரா அல்லது எமது நாட்டை இடைத் தளமாகப் பயன்படுத்துகின்றனரா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அந்நாடுகளின் பிரஜைகளே அடிக்கடி அகப்பட்டுக் கொள்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் சமீப காலமாக இவ்விதம் அதிகரித்திருப்பதனால், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டுமென்பது புரிகின்றது. அப்பிரிவு மேலும் வினைத்திறனுடன் செயற்படும் வகையில் போதுமான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அப்போதுதான் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும்.

அதேசமயம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பணிப்புரை விடுத்திருப்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது அவசியம்.

போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை முறியடிக்க, முப்படைகளையும் களத்தில் இறக்குவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்தாகுமென்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது அவசியம். போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு விடயத்தில் மக்கள் வழங்குகின்ற சிறிய தகவல் கூட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவினருக்கு பெரும் ஒத்தாசையாக இருக்கக் கூடும். மக்களின் விழிப்புணர்வும் இவ்விடத்தில் முக்கியம்.


Add new comment

Or log in with...