Friday, March 29, 2024
Home » சமூக ஊடகங்களை நம்பி செயற்படுவதன் விபரீதம்!

சமூக ஊடகங்களை நம்பி செயற்படுவதன் விபரீதம்!

by Gayan Abeykoon
December 28, 2023 1:00 am 0 comment

ன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் அதிக செல்வாக்குப் பெற்றவையாக உள்ளன. குறிப்பாக இளம் பராயத்தினரில் பெரும்பகுதியினர் இந்த ஊடகங்களின் பிடிக்குள் சிக்குண்டுள்ளனர். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவையாக விளங்குகின்றன சமூக ஊடகங்கள்.

இந்த ஊடகங்களினதும் அவற்றில் வெளியாகும் தகவல்களினதும் உண்மைத்தன்மை, சட்டபூர்வத்தன்மை குறித்து சந்தேகங்களும் பலமாகவே நிலவி வருகின்றன. அவ்வாறு இருந்தும் இந்த ஊடகங்களை பெரும்பாலானவர்கள் நம்பி செயற்படக் கூடியவர்களாக உள்ளனர்.

அதேநேரம் சமூக ஊடகங்களின் விளைவாக சமூகத்தில் ஏற்படும் தாக்கங்களும் பாதிப்புக்களும் குறைத்து மதிப்பிடக் கூடியனவாகவும் இல்லை. அதனால் ஒழுங்குவிதிகளையும் நெறிமுறைகளையும் பின்பற்றாத சமூக ஊடகங்களை சட்டரீதியில் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையை உலகின் பல நாடுகளும் உணர்ந்துள்ளன. அவற்றில் இலங்கையும் ஒன்றாகும்.

இவ்வாறான சூழலில் சமூக ஊடகங்களில் வெளியான வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற விளம்பரங்களில் ஒன்றை நம்பிய இலங்கையைச் சேர்ந்த 41 ஆண்களையும் 15 பெண்களையும் உள்ளிடக்கிய 56 இளைஞர், யுவதிகள் மியன்மாரின் பயங்கரவாதக் குழுவொன்றிடம் சிக்குண்டுள்ளனர். சுற்றுலா விஸாவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ள இவர்கள் குறித்த பயங்கரவாதக்குழுவின் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும் என்று அழைத்துச் செல்லப்பட்டுள்ள இவர்கள் மியன்மார் – தாய்லாந்து எல்லையில் உள்ள சைபர் குற்றப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பகுதியில் தடுத்து வைக்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களின் போலிக் கணக்குகளைப் பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் இருக்கும் செல்வந்தர்களை இலக்காகக் கொண்டு அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி பணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இவர்களுக்கு குறித்த பயங்கரவாதக் குழு பணித்துள்ளது. இப்பணியை மேற்கொள்ளாவிட்டால் இவர்களுக்கு வெவ்வேறு விதமான தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த இலங்கையர் சிக்குண்டிருக்கும் பிரதேசம் மியாவெட்டி நகரில் இருந்து சுமார் 25 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இது முற்றிலும் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள பிரதேசம்.

ஆனாலும் இவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதன் நிமித்தம் மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகம் குறித்த குழுவினருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தையை மேற்கொண்டது. இருப்பினும் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றுள்ள நிலையில் ஏனைய தரப்புக்களோடும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ்விளைஞர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மியன்மார் நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கான தூதுவர் ஜனக்க பண்டார, இந்த இளைஞர், யுவதிகளை மீட்கும் வகையில் மியன்மார் இராணுவத்தினருடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருவதாகவும் இந்தியா, பங்களாதேசம், பூட்டான், மியன்மார், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய ஆறு நாடுகளுடன் இணைந்தும் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியான விளம்பரத்தை நம்பி செயற்பட்டதன் விளைவாகவே இந்நாட்டு இளைஞர்கள் இவ்வாறான நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கின்றனர். இந்த துர்ப்பாக்கிய நிலை சாதாரணமாக நோக்கப்படக் கூடியதுமல்ல. ஏனெனில் இவர்களை மீட்டெடுப்பதற்காக ஆறு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறக்கூடிய நிர்ப்பந்த நிலைக்கு நாடு உள்ளாகியுள்ளது.

இவ்வாறான சூழலில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பொலிஸ் துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என சில சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளதோடு, “அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வெளிநாடுகளுக்கு செல்லுங்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிக்கல்களுக்கு உள்ளாவோரின் விவகாரங்கள் தொடர்பில் தலையீடு செய்ய முடியும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் நிறைந்துள்ள இன்றைய சூழலில் மக்கள் பொறுப்புடனும் முன்னவதானத்துடனும் செயற்படுவது இன்றியமையாததாகும்.

அதனால் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள், விளம்பரங்கள் தொடர்பில் ஒன்றுக்கு இரண்டு தடவை சரிபார்க்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த 56 இளைஞர்கள் முகம்கொடுத்துள்ளது போன்ற துர்ப்பாக்கிய நிலையையும் ஏனைய பிரச்சினைகள் நெருக்கடிகளையும் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT