உணவு புறக்கணிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் | தினகரன்

உணவு புறக்கணிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள்

உணவு உட்கொள்வதில் ஏற்படும் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாரமாக பிப்ரவரி 25தொடங்கி மார்ச் 3அன்று வரையுள்ள ஒரு வார காலம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஏனெனில் உலகலாவிய ரீதியில் ஏழு கோடிப் பேர் இக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த விழிப்புணர்வு வாரம் முன்னெடுக்கப்படுகின்றது.  

இன்றைய காலகட்டத்தில் உணவு உட்கொள்வதில் ஏற்படும் கோளாறுகள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக இளம் வயதுப் பெண்கள் இப்பாதிப்புக்கு அதிகம் உள்ளாகின்றனர்.  

இவர்கள் தங்களது உடல் எடை சீராக இருக்க வேண்டுமெனச் சிரமம் எடுத்துக்கொள்வர். சரியான எடையுடன் இருந்த போதிலும் தாங்கள் அதிக எடையுடன் இருப்பதாகவே எப்போதும் எண்ணுவர். இதனை அடிப்படையாகக் கொண்டு உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுவர். உடல் எடையைக் குறைக்க வேண்டும். மிக ஒல்லியாக இருக்க வேண்டுமென இவர்கள் விரும்புவர். இதற்காக உணவு உட்கொள்வதைத் தவிர்த்துக் கொள்வர். சில வேளைகளில் குறைந்த நேரத்திற்குள் அதிக உணவைச் சாப்பிட்டு பிறகு தாங்களே வாய்க்குள் கையைவிட்டு வாந்தி எடுப்பர். இவர்களது எடை குறைந்து ஆரோக்கியம் குன்றிக் காணப்படும். அத்தோடு இவர்களது உடலில் நீர்ச்சத்து, தாது உப்பு சத்துக்கள் குறைவடைந்திருக்கும். அதனால் போதிய உணவு சத்துக்கள் கிடைக்காததால் இவர்கள் எலும்பும் தோலுமாக காணப்படுவர். பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். தோல் வறண்டு போகும். எலும்புகளிலும் தேய்மானம் தொடங்கி, பல்வேறு பிரச்சினைகளையும் இது கொண்டு வந்துவிடும். 

இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்கள் அளவுக்கு அதிகம் உணவைக் கட்டுப்பாடின்றி உட்கொள்வர். அதன் விளைவாக உடல் பருமன் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இவர்கள் பசி இல்லாதபோது கூட இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக உணவு அல்லாத, உடலுக்குத் தேவையான சத்துக்கள் இல்லாதவற்றை இவர்கள் உண்பர். களி மண், கற்கள், காகிதம், கூர்மையான பொருட்கள், சுண்ணாம்பு, முடி, ஐஸ், கண்ணாடி என எதை வேண்டுமானாலும் இவர்கள் உட்கொள்வார்கள். சில கர்ப்பிணிப் பெண்கள் சாம்பல் சாப்பிடுவதுகூட இந்த வகையில் தான் சேரும். இவ்வகைக் கோளாறு, கர்ப்பமான பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் மனப்பாதிப்பு உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் ஏற்படும். 

அதேநேரம் உணவு உண்பதில் விருப்பமோ ஈடுபாடோ இல்லாத கோளாறுக்கு முகம் கொடுப்பதும் ஒரு வகை உடல் உபாதை தான். இவர்கள் உணவு உண்பதைத் தவிர்த்துவிடுவார்கள். சிறிது உட்கொண்டாலும் அதை வாந்தி எடுத்துவிடுவார்கள். குடல் பிரச்சினைகளாலும் உணவு எதிர்க்களித்து வாய்க்கு வந்துவிடும், அதை இவர்கள் துப்பிவிடுவர். இவர்களுக்கு உணவு உண்பதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதுடன், நிறைய உணவு வகைகளைப் பிடிக்கவில்லை எனத் தவிர்ப்பர். உணவின் நிறம் பிடிக்கவில்லை, மணம் பிடிக்கவில்லை, சுவை பிடிக்கவில்லை, செய்த விதம் பிடிக்கவில்லை எனக் குறை சொல்லித் தவிர்த்துவிடுவார்கள். 

மீன் சாப்பிட்டால் முள் தொண்டையில் குத்திவிடும், மாமிச உணவு சாப்பிட்டால் எலும்பு தொண்டையில் சிக்கிக்கொள்ளும் என்று பயப்படுவார்கள். இப்படிப் பல்வேறு உணவு வகைகளையும் தவிர்ப்பதால் இவர்களது உடல் சத்துக்களை இழந்து நலிவடையும். 

இதன் விளைவாக உடலின் நோய் எதிர்ப்புத்திறன் குறையும், பல்வேறு தொற்று நோய்களுக்கு உட்பட நேரிடும்,  

விட்டமின், தாது உப்புகள் குறைபாடு ஏற்படும், பதற்றம், பயம் அதிகரிக்கும். இறப்புகூட சில நேரம் சம்பவிக்கலாம். 

சிலர் போதை மருந்துகளுக்கும் அடிமையாகலாம். 

இவ்வாறான பாதிப்புக்களைத் தவிரப்பதற்காக தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து வளர்ச்சிக்கு ஏற்ற உணவை உட்கொண்டு உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக உணவின் போதுமான ஊட்டச்சத்துக்களை உறுதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு முறையான உணவுப் பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களை நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. மனக்கசப்பு, மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் ஊட்டச்சத்து மற்றும் மனநல மருத்துவ நிபுணர்களின் ஆலொசனைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அப்போது இக்கோளாறுக்கு தீர்வு கண்டுவிடலாம். 


Add new comment

Or log in with...