உடல் பாகங்களில் திடீரென தோன்றும் மாறுபாடுகள் | தினகரன்

உடல் பாகங்களில் திடீரென தோன்றும் மாறுபாடுகள்

உலகில் பல்வேறுவிதமான நோய்கள் காணப்படுகின்றன. அந்நோய்களில் புற்றுநோய்கள் முக்கிய இடத்தைப் பெற்று விளங்குகின்றன. இந்நோய்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வாய்ப்புற்று நோய், சுவாசத் தொகுதி புற்றுநோய், உணவு கால்வாய்த்தொகுதி புற்றுநோய், மார்பு புற்றுநோய், கருப்பை கழுத்து புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலவாசல் புற்றுநோய், ஆண்களுக்கு ஏற்படும் சுக்கிலச்சுரப்பி புற்றுநோய், தைரொய்ட் சுரப்பி புற்றுநோய் என்பன குறிப்பிடத்தக்கவை.  

என்றாலும் ஆண், பெண் வேறுபாடுகள் இன்றி எல்லா மட்டத்தினரையும் பாதிக்கக் கூடியதே புற்றுநோய்கள். இருப்பினும் இப்புற்றுநோய்களைப் பொறுத்தவரை அவற்றில் மூன்றில் ஒரு பகுதியை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளவும், மற்றொரு மூன்றிலொரு பகுதியை ஆரம்ப பகுதியிலேயே இனம் கண்டால் முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளவும் முடியும். இது மருத்துவத் துறையினரின் நிர்ணயமாகும். இருந்தும் இந்த உண்மையைப் பெரும்பாலானவர்கள் அறியாதுள்ளனர்.  

இதன் காரணத்தினால் தான் புற்றுநோய்கள் இன்றைய உலகில் பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது. இப்புற்றுநோய்கள் காரணமாக வருடமொன்றுக்கு 8.2மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் 04மில்லியன் பேர் 30முதல் 60வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.  

இலங்கையிலும் கூட புற்றுநோய்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்தே செல்கின்றது.  

அதாவது கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் இவ்வாறு அதிகரித்து வந்துள்ள இப்புற்று நோய்களுக்கு இப்போது வருடா வருடம் புதிதாக உள்ளாவோரின் எண்ணிக்கை 15,000முதல் 20,000வரை எனக் காணப்படுகின்றது.   அதேநேரம் இந்நாட்டில் வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதி புற்றுநோய். உணவுக் கால்வாய் மற்றும் குதவாசல் புற்றுநோய் ஆகியவற்றுக்கு அதிகளவில் ஆண்களும், மார்பு புற்றுநோய், கருப்பை கழுத்து புற்றுநோய். உணவு கால்வாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கு அதிகளவில் பெண்களும் உள்ளாவதும் பரவலாக அவதானிக்கப்படுகின்றது.   

அந்தவகையில் வாய்ப்புற்றுநோய்க்கு உள்ளானவர்களாக சுமார் 2.000பேரும், மார்பு புற்றுநோய்க்கு உள்ளானவர்களாக சுமார் 2.500பேரும், கருப்பை கழுத்து புற்றுநோய்க்கு உள்ளானவர்களாக சுமார், 1,000பேரும் என்றபடி வருடாந்தம் இந்நாட்டில் இனம் காணப்படுகின்றனர்.  

அத்தோடு புற்றுநோய்கள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வருடா வருடம் இந்நாட்டில் அதிகரித்தே வருகின்றது. 2005ஆம் ஆண்டில் 9403பேர் புற்றுநோய்கள் காரணமாக உயிரிழக்க, 2009ஆம் ஆண்டில் அது 11,286பேர் வரை அதிகரித்தது. தற்போது இந்நாட்டில் 11.000முதல் 12.000பேர் வரையானோர் இந்நோய்களினால் வருடாந்தம் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  

பொதுவாக மனிதனின் நடத்தைகளும் உணவு உள்ளிட்ட பழக்கவழக்கங்களும் தான் இப்புற்றுநோய்களுக்கு பெரும் பங்களிப்பு செய்கின்றன. குறிப்பாகப் புகையிலை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கமானது சுவாசத் தொகுதி புற்றுநோய்கள் உள்ளிட்ட பல புற்றுநோய்களுக்குத் துணை புரிகின்றன.

அதேபோன்று வெற்றிலை மெல்லுதல் பழக்கம் வாய்ப் புற்றுநோய்க்கு முக்கிய பங்காற்றுகின்றன. அத்தோடு ஆரோக்கியத்திற்கு உகப்பற்ற உணவுப் பழக்கமும் புற்றுநோய்கள் ஏற்பட பெரிதும் உதவுகின்றன.   ஆகவே உணவு உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்களை தவிர்த்து உடலாரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் உணவு உள்ளிட்ட பழக்கவழக்கங்களை அமைத்துக் கொண்டு உடற்பயிற்சிகளிலும் முறையாக ஈடுபட்டால் புற்றுநோய்கள் பலவற்றை வருமுன் தவிர்த்துக் கொள்ள முடியும்.  

அதேவேளை புற்றுநோய்களை முன் கூட்டியே இனம் கண்டால் அவற்றை உரிய சிகிச்சைகள் மூலம் முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளவும் முடியும். அதனால் உயிராபத்தை ஏற்படுத்தும் இப்புற்றுநோய்கள் தொடர்பாக ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உடலிலும் உருவத்திலும் ஏதாவது மாற்றங்களும் வித்தியாசங்களும் ஏற்படுமாயின் தாமதியாது மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் புற்றுநோய்கள் பலவற்றை ஆரம்பத்திலேயே குணப்படுத்திக் கொள்ளவும் முடியும்.  

வாய்ப் புற்றுநோய்  

அதாவது ஒருவருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுமாயின் அதற்கு முன்னர் சில முன்னறிகுறிகள் வெளிப்படும். அவற்றில் உள்பக்க கடைவாயில் நீண்ட காலம் நீடித்து காணப்படும் வெள்ளை மற்றும் சிகப்பு நிறத் தழும்புகள், வாயினுள் அசாதாரண எரிவு, நீண்ட காலமாக குணமடையாது வாயினுள் காணப்படும் புண் என்பன குறிப்பிடத்தக்கவை.  

உணவு கால்வாய் புற்றுநோய்  

இவ்வகைப் புற்றுநோய் ஏற்படுமாயின் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும். இச்சிரமம் படிப்படியாக அதிகரித்து உணவு உண்ணும் போது வலி தோன்றக் காரணமாக அமையும். அத்தோடு உடல் நிறையும் குறைவடையும்.  

பெருங்குடல் மற்றும் மலவாசல் புற்றுநோய்  

இவ்வகைப் புற்றுநோய் ஏற்படுமாயின் மலத்துடன் குருதி வெளிப்படும், மலம் கழிக்கும் முறையில் மாற்றம் எற்படும், அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதுடன் மலவாசலில் குருதி வெளிப்படும், வழமைக்கு மாறாக மலம் மிக மெல்லியதாக வெளியேறும், மலம் கழித்த பின்பும் மலம் கழித்த திருப்தியில்லாத உணர்வு ஏற்படும், வயிற்றில் வலி. ஏற்படுவதுடன் எதிர்பாராதபடி உடல் நிறையும் குறையும்.  

மார்பு புற்றுநோய்  

இவ்வகைப் புற்றுநோய் ஏற்படுமாயின் மார்பகத்தின் உருவில் அண்மைக் காலத்தில் மாற்றம் அல்லது மார்பகத்தில் தெளிவான வித்தியாசம் வெளிப்படும், மார்பகத்தில் கட்டி அல்லது வீக்கம் ஏற்படும். மார்பகத்தில் உட்குழிவு தென்படும், மார்பகத்தில் தோடம் பழத்தின் வெளித்தோலைப் போன்ற வித்தியாசத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கும், முலைக்காம்பு உள்வாங்கப்பட்ட நிலை ஏற்படும், மார்பகத்தில் ஏற்படும் இவ்வாறான மாற்றங்களை சுய பரிசோதனை மூலம் அடையாளம் காணவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

கருப்பைக் கழுத்து புற்றுநோய்  

இவ்வகைப் புற்றுநோய் ஏற்படுகின்றவர்களுக்கு யோனி வழியாக ஒழுங்கு முறையற்ற குருதிப்பெருக்கு ஏற்படும், தாம்பத்திய உறவின் போது குருதி வெளிப்படும், யோனி வழியூடாகத் துர்நாற்றத்துடன் திரவக்கசிவு ஏற்படும், மாதவிடாய் சுற்று வட்டம் நின்ற பெண்களின் யோனி வழியாக குருதி வெளிப்படும். இப்புற்றுநோயை “பப்“ என்ற பரிசோதனை மூலம் நோய் ஏற்பட முன்னரே கண்டறியலாம்.  

சுக்கிலச் சுரப்பி புற்றுநோய்.  

இவ்வகைப் புற்றுநோய் ஏற்படுகின்றவர்களுக்கு தேவை ஏற்பட்ட போதிலும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும், சிறுநீர் கழிக்கும் போதும், ஆரம்பத்திலும் தொடர்வதிலும் சிரமம் வெளிப்படும், சிறுநீர் கழித்த பின்பும் முழுமையாக சிறுநீர் வெளியேறாத உணர்வு ஏற்படும், அடிக்கடி சிறுநீர் வெளிப்படும், இரவில் சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், சிறுநீருடன் இரத்தமும் வெளிப்படும்.  

தைரொய்ட் புற்றுநோய்  

இவ்வகைப் புற்றுநோய் ஏற்படுகின்றவர்களுக்கு தைரொய்ட் சுரப்பி வீங்கும் அல்லது அதன் அளவில் வித்தியாசம் ஏற்படும், கழுத்தின் இரு பக்கங்களிலும் வீக்கம் ஏற்படும்,

காரணமில்லாமல் குரலில் கரகரப்பு தன்மையை அவதானிக்க முடியும். உணவு மற்றும் உமிழ்நீர் விழுங்குவதில் சிரமம் வெளிப்படும், அத்தோடு மூச்செடுப்பதில் சிரமமும் கழுத்தில் வலியும் ஏற்படும்.  

ஆகவே வாயினுள் சிகப்பு அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் வெளிப்படல், கழுத்து அல்லது தைரொய்ட் சுரப்பி வீங்குதல், நீண்ட காலமாக நீடிக்கும் உணவு விழுங்கும் போதான சிரமம் அல்லது உணவு சமிபாடு அடையாத நிலைமை, மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம், அவற்றில் குருதி வெளிப்படல், குரலில் வித்தியாசம், நீண்ட காலம் நீடிக்கும் இருமல் அல்லது இருமல் சளியுடன் இரத்தம் வெளிப்படல், மார்பகங்களிலோ அல்லது உடலின் ஏனைய பாகங்களிலோ கட்டி அல்லது தடிப்பு ஏற்படல், பெண்களின் யோனி வழிகளில் வழமைக்கு மாறான கசிவு அல்லது இரத்தப்பெருக்கு எற்படல், கட்டிகள், தழும்புகள் மற்றும் பாலுண்ணிகளில் திடீர் மாற்றங்களுடன் வேகமான வளர்ச்சி, குணமடையாத காயம் போன்றவாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுகொள்ள வேண்டும்.

இது தொடர்பில் தேசிய புற்றுநோய் ஒழிப்புத் திட்டம் விடுத்துள்ள அறிக்கையில் அவை புற்றுநோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.   அதனால் இவ்வாறான முன்னறிகுறிகளையும் குணாம்சங்களையும் கொண்டிருப்பவர்கள் தாமதியாது மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் அடிப்படையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் போது புற்றுநோய்களை முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் விஷேட கவனம் செலுத்துவது மிக மிக அவசியம்.  

(முஹம்மத் மர்லின்)


Add new comment

Or log in with...