பிற சமூகங்களுடன் ஒன்றித்து வாழ்வோம் | தினகரன்

பிற சமூகங்களுடன் ஒன்றித்து வாழ்வோம்

இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாக பிற சமூகங்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள், தொடர்ந்தும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நாட்டின் அபிவிருத்தி, ஒருமைப்பாடு என்பவற்றுக்கு அவர்கள் கணிசமான பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஆனால், பிற சமூகங்களுக்கும் அவர்களுக்குமிடையிலான உறவில் இரண்டு தீவிரங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

முஸ்லிம்களிற் சிலர் முஸ்லிம் அல்லாதவர்களுடன் ஒன்றித்து இரண்டரக்கலந்து தனித்துவங்களை இழந்து மார்க்கத்தில் மீற முடியாத  வரையறையைக்கூட மீறி வாழுகின்றார்கள் இது ஒரு தீவிரமாகும். இன்னும் சிலரோ முஸ்லிம் அல்லாதவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் வைத்துக்கொள்ளாது ஒதுங்கி வாழுவதுடன் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாம் அனுமதிக்காத கடும் போக்கில் தீவிரமாக வாழுகிறார்கள்.

இந்த இரண்டு போக்குகளையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.  தனித்துவங்களைப்  பேணிய நிலையில் பிற சமுதாயத்தவர்களது உரிமைகளை மதித்து அவர்களுடன் அன்பாக, பரஸ்பர ஒத்துழைப்புடன் ஐக்கியப்பட்டு வாழும்படிதான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இஸ்லாம் சாந்தி  சமாதானத்தின் மார்க்கமாகும்.

அது உலகில் அமைதியை, சுபீட்சத்தை அபிவிருத்தியை ஏற்படுத்த வந்த மார்க்கமாகும். வன்முறை, அநீதி, அடக்குமுறை, என்பவற்றை இல்லாதொழிக்க வந்த மார்க்கம் இஸ்லாமாகும்.

இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக, சிதறுண்டு வாழுகிறார்கள். அவர்களது பக்கத்து வீட்டவர்களாக , தொழில் கூட்டாளிகளாக, காரியாலய ஊழியர்களாக முஸ்லிம் அல்லாதவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.

அவர்களது உறவும், தொடர்பும், உதவியும், ஒத்தாசையுமில்லாமல் முஸ்லிம்களால் இந்நாட்டில் எப்படியுமே வாழ முடியாது.

அரசியல், கல்வி, பொருளாதாரம், சமூக உறவுகள் போன்ற அனைத்துத் துறைகளிலும்  முஸ்லிம் அல்லாதவர்களுடன் முஸ்லிம்கள் ஒட்டியுறவாட வேண்டியிருக்கின்றது. அவர்களது மனதை வெல்லாமல், அவர்களுடன் பகைத்த நிலையில் வாழுவது சாத்தியமல்ல.

எனவே, இஸ்லாம் வலியுறுத்தும் பிற சமயத்தவர்களுடனான உறவுகள் பற்றித் தெரிந்துகொள்வது மார்க்கக் கடமையும் காலத்தின் தேவையுமாகும்.     


Add new comment

Or log in with...