இஸ்லாத்தின் பார்வையில் அண்டை வீட்டார் | தினகரன்

இஸ்லாத்தின் பார்வையில் அண்டை வீட்டார்

இஸ்லாம் நாம் அண்டைவீட்டாருடன்  எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு உறவாடவேண்டும், அவர்களது உரிமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்  என்பதைதெளிவாக கூறுகின்ற மார்க்கமாகும். அண்டைவீட்டான் ஒரு  முஸ்லிம்  உறவினராக, ஒரு முஸ்லிமாக அல்லது முஸ்லிமல்லாதவராகஇருக்க முடியும்.  அவ்வாறு ஏதேனும் ஒருதரத்தில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாம்  நிறைவேற்றவேண்டிய கடமைகள், உரிமைகள் பற்றி இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

'இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையில்லாதவன். என நபிகளார் மூன்றுமுறை கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே எவன் இறை நம்பிக்கையில்லாதவன்' ? என வினவப்பட்டபோது' எவனது அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டும் பாதுகாப்புப்பெறவில்லையோ அவன்' எனப் பதிலளித்தார்கள்' ஆதாரம் ; புகாரி, முஸ்லிம்

ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்டைவீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளும்படி என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தியவண்ணமேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர் அண்டைவீட்டாரை சொத்தில் கூட வாரிசாக்கிவிடுவாரோ என்று நான் நினைக்கலானேன்.'ஆதாரம் புகாரி, முஸ்லிம்)

'தன் பக்கத்திலிருக்கும் அண்டைவீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்கமாட்டார்.(மிஷ்காத்)

நபி (ஸல்) அவர்கள்  அபூதர் (றழி) அவர்களிடம் பின்வருமாறு கூறினார்கள். 'அபூதரே ! நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்திவிடும். காரணம் உன் அண்டைவீட்டாரையும் சற்று கவனியும்.'           ஆதாரம்; முஸ்லிம்

முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டைவீட்டார் அன்பளிப்பாக ஒருபொருளை தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்தால், அதனை அவர் அற்புதமானதாகக் கருதக் கூடாது. அது ஆட்டின் குழம்பானாலும் சரியே.            ஆதாரம் புகாரி, முஸ்லிம்

எனவே, நாம் அண்டை வீட்டாருடன் சிறுசிறு அன்பளிப்புகளை அடிக்கடி பரிமாறிக் கொள்வது அவர்களுடனுள்ள அன்பை மேலும் பலப்படுத்தும். மேலும் அவற்றைநாம் கொடுக்கும் போதோ அல்லது பெறும்போதோ தரக் குறைவாக எண்ணிவிடக் கூடாது. ஏதேனும் ஒருசர்ந்தப்பத்தில் பிறர் எம்மைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அதற்கு மிகச் சிறந்த ஊடகமாக அமைவதும் நம் அயலவரே.

'எனக்கு இரண்டு அண்டை வீட்டார்கள் உள்ளனர்.

அவர்களில் எவருக்கு நான் அன்பளிப்பு அனுப்புவது? என ஆயிஷா (ரழி) அவர்கள் ஒரு முறைஅண்ணலாரிடம் கேட்டபோது', எவருடைய வாசல் உன் வாசலுக்கு மிக அருகில் உள்ளதோ அந்த அண்டை வீட்டுக்காரருக்கு'எனப் பதிலளித்தார்கள்' (புகாரி)

'எந்தமனிதர் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தன்னை நேசிக்கவேண்டும் என விரும்புகிறாரோ அவர் பேசும் போது உண்மைபேசட்டும். அவரிடம் அமானிதமாக ஓர் பொருள் தரப்பட்டால் அந்தபொருளை தன் உரிமையாளரிடம் பாதுகாப்பாக திருப்பித் தரட்டும். தன் அண்டைவீட்டாருடன் நல்லமுறையில் நடந்துகொள்ளட்டும்.'                                           ஆதாரம் மிஷ்காத்)

தனது அடிப்படைக் கடமைகளுடன், உபரியான, நபிலான கடமைகளை அதிகமாகவே செய்த பெண் தன் அயலாரை நாவினால் வேதனைப்படுத்தியதால் நரகமும், வணக்க வழிபாடுகளை தர்மங்களை குறைவாக செய்த பெண் அயலாரை மகிழ்வுடன் வைத்திருந்ததால் சுவனம் செல்கிறாள் என்ற நபிமொழியும் அயலாரருடன் எவ்வாறு நடந்து கொள்ளல் வேண்டும் என்பதை தெளிவாக்குகிறது.

'இறுதித் தீர்ப்புநாளில் அனைத்துக்கும் முதலாக விசாரணைக்குவரும் இரு மனிதர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.

இரு அண்டைவீட்டார் பற்றியதாகும்.'(மிஷ்காத்)

சிறந்த அயலவர் அமைவது போலவே சிறந்த அயலவராக நாமுமிருப்பது விலைமதிக்க முடியாசெல்வங்களிலொன்று. 'நான்குவிடயங்கள் அதிஷ்டத்தில் அடங்க் கூடியவை; அவை ந ல்ல மனைவி, விசாலமான வீடு, நல்ல அயலவர், சிறந்த வாகனம் என்பனவாகும். (நஸஈ)

ஆகவே,  அயலவர் கடமைகளை நன்கு அறிந்து , அவர்கள் விடயத்தில் இஸ்லாம் கூறுகின்ற அடிப்படையில் நாமும் நடந்து மறுமையில் வெற்றிபெறுவோமாக.

மௌலவியா

ஜெஸீலா ஜலால்தீன் (எம்.ஏ)

சில்மியாபுர.


Add new comment

Or log in with...