Friday, March 29, 2024
Home » “வார்த்தை மனுவுருவானார்”

“வார்த்தை மனுவுருவானார்”

by Rizwan Segu Mohideen
December 25, 2023 11:48 am 0 comment

கிறிஸ்து பிறப்பின் திருவிழாவானது நம் கடவுளின் அளவில்லா கருணையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது .

“குழந்தையைத் துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். கடவுள் தமது சாயலிலும் பாவனையிலும் மனிதனைப் படைத்தார்” (தொட.நூல் 1:27)என்று பார்க்கிறோம்.

ஆனால் கடவுள் உலகினர் மேல் கொண்ட அளவிட முடியாத அன்பை வெளிப்படுத்த விரும்பி தம் மகனை மனித சாயலில் பிறக்க திருவுளம் கொண்டார்.

இதையே “வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்”
(யோவான்1: 14)

கடவுள் மனிதன் மீது கொண்ட நிலையான அன்பை நித்தியத்திற்கும் வெளிப்படுத்தும் பெருவிழாதான் கிறிஸ்து பிறப்பு நத்தார் பெருவிழா.

கடவுள் மனிதனை மட்டும் கிறிஸ்து இயேசுவில் தன்னோடு இணைத்துக் கொள்ளவில்லை. உலக சடப் பொருட்களையும் தன்னோடு இணைத்துக் கொள்ள வேண்டி அப்பத்தை தன் உடலாகவும் இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றுகின்றார்.

நாம் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உண்டு பருகும் போது பாவத்தினால் இழந்த பரிசுத்தம் நிறைந்த மனித சாயலை மீண்டும் நாம் கிறிஸ்து வழியாக பெற்றுக் கொள்கின்றோம்.

உலக படைப்புகளும் கிறிஸ்துவில் புனிதம டைகிறது.

இன்றைய தினத்தில் நாம் கேட்கும் நற்செய்தியிலிருந்து இயேசு கிறிஸ்து யூதேயா நாட்டில் உள்ள பெத்லகேமில் பிறந்தார் என்பது புலனாகிறது.

‘பெத்தலகேம்’ என்பதற்கு’உரொட்டியின் இருப்பிடம்’ என்பது பொருள்.

இயேசு பிறந்த ஊரானது உணவாகக் கருதப்படும் உரொட்டித்துண்டு தயாரிக்கப்படும் இடம்.

இயேசுவின் பிறப்பானது”குழந்தையை துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள்”(லூக்கா 2:12) என்று வானதூதர் அறிவிக்கின்றார்.

தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்ட இயேசு நமக்கு உணவாகப் போகிறார் என்பதை எடுத்துக்காட்டும் வண்ணமாக அமைந்துள்ளது.

உணவு என்பது மக்களுடைய வாழ்க்கைக்கு ஆதாரமானது. தமிழரின் தமிழ் மக்களின் விருந்தோம்பல் உணர்வு அதற்கு ஒரு உதாரணமாகும்.

‘செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவருக்கு’ என்று நிரூபிக்க வள்ளுவர் உணவுப் பழக்கத்தை அழகாக கூறியுள்ளார்.

மேலை நாடுகளில் உணவுப் பழக்கமானது அவர்களின் உறவை வளர்ப்பதாக உள்ளது. அவர்களது அன்பின் அடையாளமாகவும் அது கருதப்படுகிறது.

இந்த அழிந்து போகும் உணவுக்கு இவ்வளவு சக்தி என்றால் கடவுள் தன்னையே உணவாகத் தருவது அவரது அன்பின் வெளிப்பாடு.” அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். அழியாத உணவுக்காக உழையுங்கள் அவ்வுணவை மானிட மகன் உங்களுக்கு கொடுப்பார்” என்கிறார் இயேசு (யோவான் 6:27).

ஏசாயா இறைவாக்கினர் அன்பின் வெளிப்பாடு எப்படிப்பட்டது என்பதை மனநிலைக்கு ஏற்ப எடுத்துரைக்கின்றார்.

கடவுள் இஸ்ரேல் மக்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பானது விடுதலையையும் மகிழ்ச்சியையும் அக்களிப்பையும் தருவதாகக் கூறுகின்றார். இத்தகைய அன்பானது அறுவடை நாளில் மக்கள் மகிழ்ச்சியுறுவது போலவும் கொள்ளைப் பொருட்களை பங்கிடுவோர் அடைகின்ற மகிழ்ச்சியைப் போலவும் உள்ளது.’மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது’ என புனித பவுல் கூறுகின்றார்.

இந்த அன்பின் வெளிப்பாடானது எல்லோரையும் சொந்த மக்களாகவும் இம்மையில் நாம் பெரும் மகிழ்ச்சியை பெரும் பொருட்டு தன்னையே எமக்காக ஒப்படைத்தார்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை யூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற மகிழ்ச்சியின் செய்தியை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்க முடியும்.

நம் கடவுளின் பரிவுளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது (லூக்கா1: 78,79)

என்று செக்கரியா இறைவாக்கு உரைக்கின்றார்.

‘இந்த மீட்பு பிரவினத்தாருக்கும் வெளிப்பாடு அருளும் ஒளி’ என்று சிமியோன் இறைவாக்கு உரைக்கின்றார்.

மக்கள் அனைவரது மீட்புக்காகவும் இயேசு கொண்டு வந்த அன்பின் வெளிப்பாடு அவருடைய பிறப்பு இதை அறியும் விதமாக வானதூதர் இடையர்களுக்குத் தோன்றி நற்செய்தி அறிவித்தார் என்பதை லூக்கா 2:8ஆம் வசனத்தில் பார்க்கின்றோம்.

அக்காலத்தில் இழிவாக கருதப்பட்ட புறந் தள்ளப்பட்ட இடையர்களுக்கு இறைவனின் அன்பு வெளிப்படுகின்றது.

நம் இறைவனின் அருள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பலியின் போதும் ‘பிறப்பு’ வெளிப்படுகிறது.

அவர் நமக்கு உணவாகப் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்கின்றார் இயேசு. (யோவான் 6:35)

நாம் இறையன்பின் வெளிப்பாட்டைப் புரிந்து கொள்வோம்.

இந்தோனேசியாவில் பூகம்பம் இடர்பாடுகளின் நடுவே ஒரு குழந்தை உயிரோடு மீட்கப்பட்டது. அந்த குழந்தையின் அருகில் ஒரு கையடக்கத் தொலைபேசி கிடந்திருக்கின்றது.அதில் ஒரு செய்தி’’கண்ணே நீ உயிரோடு இருந்தால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்

உன் அம்மாவிற்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்” என்ற செய்தி இருந்தது.

நம் கடவுளுக்கு நம்மை ரொம்பப் பிடிக்கும் அதனால்தான் அவர் நமக்காக இன்று இந்த மண்ணுலகில் பிறந்திருக்கின்றார் அவரை சந்திப்பதற்கு விரைவோம்.

அம்புறோஸ் பீற்றர்
(மறையாசிரியர் – பிரான்ஸ்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT