புற்றுநோய்க் கலங்களை அழிக்கும் பூசணிக்காய் | தினகரன்

புற்றுநோய்க் கலங்களை அழிக்கும் பூசணிக்காய்

இலங்கையில் முதற்தடவையாக பூசணிக்காய்த் திருவிழா அண்மையில் கொழும்பு ஆனந்த குமாரசாமி மாவத்தையில் நடத்தப்பட்டது.

எமது நாட்டுச் செய்கையான பூசணிக்காயின் முக்கியத்துவம், பூசணிக்காயை நாம் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள், உணவுக்காக பூசணிக்காயைப் பயன்படுத்தும் முறை ஆகியவை பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டவே பூசணிக்காய்த் திருவிழா நடத்தப்பட்டது.

எமது நாட்டில் பூசணிக்காய் அதிகமாகச் செய்கை பண்ணப்பட்டாலும், தற்போது பொதுமக்கள் அவற்றை நுகர்வது சற்று அரிதாகவே காணப்படுகின்றது. அத்துடன், தற்போது சந்தையிலும்  பூசணிக்காயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ பூசணிக்காய் 35 ரூபா முதல் 40 ரூபாவரையே விற்பனையாவதாகவும் தெரியவருகின்றது.  

எமது நாட்டு உற்பத்திகளை நாம் கண்டுகொள்ளாமைக்கு முக்கிய காரணமாக அமைவது துரித உணவுப் பொருட்களின் வருகையும், இவற்றின் சுவைக்கு பொதுமக்கள் அடிமையாகியதுமேயாகும். ஆனால், இவ்வாறான துரித உணவுப் பொருட்களினால்  விளையும் தீமைகளைப் பற்றி எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. 

பூசணிக்காய், அதன் விதை, இலையின் குருத்து ஆகிய ஒவ்வொன்றுமே சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டதாகக் காணப்படுவதாக ஆயுர்வேத வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பூசணியில் பச்சை நிறத் தோல் கொண்ட பூசணி, மஞ்சல் நிறத் தோல் கொண்ட பூசணியென பூசணியில் இரு வகைகள்; காணப்படுகின்றன. இவற்றில்; பச்சை நிறத் தோல் கொண்ட பூசணியே மிகச் சிறந்ததெனவும் ஆயுர்வேத வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பூசணிக்காயில் அல்பா (Alfa) பீற்ரா (Beta), கிரிப்டோ சன்டின் (Crypto Xanthine) என 3 வகையான கரோட்டின் பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இவை சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக விளங்குகின்றன.

இது தவிர விட்டமின் ஏ, பி12, பொட்டாசியம், கொப்பர், லுட்டின் (Lutein) ஆகிய பதார்த்தங்களும் காணப்படுகின்றன. பூசணியில் காணப்படும் கிரிப்டோ சன்டின் எனும் பதார்த்தமே மிகவும் சக்திவாய்ந்த பதார்த்தமாகும். மனித உடம்பில் காணப்படும் கழிவுகளை வெளியேற்ற இப்பதார்த்தம் உதவுகின்றது. மேலும், இப்பதார்த்தமானது புற்றுநோய்க் கலங்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளதென புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக புகைப் பிடிப்போர், போதைப்பொருள் பாவிப்போர், மதுபானம் அருந்துவோருக்கு அருமருந்தாக பூசணிக்காய் விளங்குகின்றது. இவ்வாறான தீய பழக்கங்களுக்கு அடிமையானோரின் உடம்பில் படிந்துள்ள அழுக்குகளை, நச்சுப் பதார்த்தங்களை பூசணிக்காயை உட்கொள்வதன் மூலம் படிப்படியாக வெளியேற்ற முடியும்.

அத்துடன், பூசணியில் காணப்படும் பொட்டாசியம் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து, இயத்தைப் பாதுகாத்துச் சீராக இயங்கச் செய்யவும், எமது உடம்பில் படியும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்யவும், குருதியைச் சுத்தமாக்கவும்  உதவுகின்றது. அத்துடன், சிறுநீரகங்களின்; செயற்பாடுகளை சீராக்கி இயங்கச் செய்யவும், சிறுநீரக நோய்கள் அண்டாவண்ணம் தடுக்கவும் பூசணிக்காய் உதவுகின்றது. 

இதில் காணப்படும் லுட்டின் எனும் பதார்த்தம் தாய்ப்பால் சுரப்பதற்கு வழிசெய்வதுடன், இதிலுள்ள நார்ச்சத்து சருமத்தின் பளபளப்புக்கும் பெண்களின் முகங்களில் பருக்கள் வராமலும் தடை செய்கின்றது.

இவ்வாறிருக்க, பூசணிக்காயின் விதையும் சிறந்த நிவாரணியாகும். பூசணிக்காய்; விதையினுள் காணப்படும் பருப்பை உட்கொள்வதன் மூலம் எமது உடம்பினுள் பரவியுள்ள பூச்சிகளை அழிக்க உதவுகின்றது. 

பூசணிக்காயுடன் பச்சை மஞ்சள் சிறிது, மிளகு சிறிது சேர்த்து கறியாக சமைத்தோ, அல்லாவிடின் ஒருவேளை உணவாக அவித்து தேங்காய் பூ அல்லது சம்பலுடன் உட்கொள்ளலாம். பாணமாகவும் தயாரித்துப் பருக முடியும்.

எனவே, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பால்மணம் மறந்து உணவை உட்கொள்ளத் தயாராகும்போது, பூசணிக்காயிலிருந்து உணவு உட்கொள்வது சிறந்ததெனவும் ஆயுர்வேத வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

எனவே, எமது நாட்டில் மலிவான விலையில் கிடைக்கும் பூசணிக்காயை அன்றாட உணவில் தவிர்க்காது உட்கொள்வதால் எமது தேக ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பேணிப் பாதுக்க முடியும்.

(ஆர்.சுகந்தினி)

(படம்:- கயான் புஷ்பிக)

 

 

 

 


Add new comment

Or log in with...