அநுராதபுரம் வைத்தியசாலையில் ரூ.70 இலட்சம் திருட்டு | தினகரன்

அநுராதபுரம் வைத்தியசாலையில் ரூ.70 இலட்சம் திருட்டு

அநுராதபுரம்  போதனா வைத்தியசாலையின்  கணக்காளரது  அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு பெட்டகம்  (சேப்பு ) உடைக்கப்பட்டு  அங்கிருந்த  70 இலட்சம்  ரூபா பணம்  திருடப்பட்டுள்ளதாக  அநுராதபுரம்  பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (03 ) இரவு  இடம்பெற்றுள்ளதென  விசாரணைகளை  மேற்கொண்டுவரும்  பொலிசார்  தெரிவித்தனர்.குறித்த அலுவலக அறையிலிருந்த  ஆவணங்கள் சிலவற்றையும்  எரித்து நாசப்படுத்தியுள்ளதாக  பொலிசார்  மேலும்  தெரிவித்தனர்.

வைத்தியசாலையின்  சுத்திகரிப்பு  ஊழியர்கள் குறித்த தினம் வழமைபோன்று  அலுவலக  அறையினை துப்புரவு  செய்வதற்காக சென்றிருந்த போது அலுவலக அறைக்குள்  புகை வெளிவருவதை  கண்டுள்ளனர்.

உடனே   அது குறித்து  வைத்தியசாலை  பொலிசாருக்கு  அறிவித்ததை  அடுத்து  சம்பவ  இடத்துக்கு  வந்த  அநுராதபுரம்  தலைமையக  பொலிசார்,    குறித்த அறையினை  சோதனைக்குற்படுத்திய போது  அங்கிருந்த  பணம்  வைக்கப்பட்டிருந்த  சேப்பு  உடைக்கப்பட்டு  பணம்  திருடப்பட்டுள்ளமை  தெரியவந்துள்ளது.

சம்பவம்   தொடர்பான  மேலதிக  விசாரணைகளை  அநுராதபுரம் வலயத்திற்குப்  பொறுப்பான  பொலிஸ்  அதிகாரி  திலின ஹேவாபத்திரனவின்  ஆலோசனைப்படி  அநுராதபுரம் தலைமையக  பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு  பிரிவினர்   தீவிர விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.   

(அநுராதபுரம் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...