'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' | தினகரன்


'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்'

‘உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்’ என்ற சிறந்த வாழ்க்கைப் படிப்பினையை புனித லூக்கா நற்செய்தி நமக்குத் தருகிறது.   நமது வாழ்வில் பழகிப்போன கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை இந்த நற்செய்தி வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது.  

ஆண்டின் பொதுக்காலமான 8ஆம் ஞாயிறு நம்மனதின் உண்மை நிலையை உணர்ந்து  வாழ்வதற்கான அழைப்பை விடுக்கின்றது. பிறரைத் திருத்த முற்படுவதற்கு முன்  நமக்குள் ஏற்படவேண்டியுள்ள மாற்றம் குறித்து சிந்திப்பது அவசியமாகிறது.  

தவறுக்குப் பதில் தவறு, தீமைக்குப் பதில் தீமை என்றில்லாது  பிறரை மன்னிக்கும் உயரிய மன நிலைக்கான அழைப்பையே நம் ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்து நமக்கு விடுக்கின்றார்.  

அத்தகைய மன நிலையைக் கொண்டவர்களே இயேசுவைப் போன்று தூயவர்களாக  மாற முடியும். அதற்கான அழைப்பையே இயேசு நம் அனைவருக்கும் விடுக்கின்றார்.  பிறரில் குற்றம் காணும் நோக்கினை முன்னிறுத்தி நாம் செயற்படாமல் எமது  சகோதரர்களாகிய பிறர் தவறுகளிலிருந்து விடுபட்டு மனம் மாறி வாழ்வதற்கான  நல்ல நோக்கத்தோடு அவர்களை அணுகி திருத்த முயற்சிக்க வேண்டும்.  

‘பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற மற்றவருக்கு வழிகாட்ட இயலுமா?  இருவரும் குழியில் விழுவர் அல்லவா? என பரிசுத்த வேதாகமத்தின் லூக்கா நற்செய்தி எமக்குத் தெரிவிக்கின்றது.  

ஒருவர் எமக்கு ஒரு தவறை செய்துவிட்டால் நாம் அதனை மன்னிக்காது அதனைப் பெரிதுபடுத்தி அவர் பற்றி பலரிடமும் விமர்சித்துத் திரிவோம்.  

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும் அரசியல்வாதிகளுக்கும் அதில் பங்குண்டு என கூறப்படுகிறது. எனினும் போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டுமென்பதில் முன்னின்று குரல் கொடுப்பவர்களும் அரசியல்வாதிகளே.

தாமே அத்தவறை செய்துகொண்டு சாதாரண மக்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என அவர்கள் நினைப்பது எவ்விதத்தில் நியாயமாகும்.  

ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும்போது நாம் குற்றமற்றவர்களா அல்லது பிறரைக் குற்றஞ்சாட்டும் அருகதை எமக்குள்ளதாஎன சிந்திப்பது அவசியம்.

சில தினங்களுக்கு முன்பு சிறுவர்கள் தின நிகழ்வுக்காக நாம் தயாரானபோது பிள்ளைகளுடன் இரண்டு மறையாசிரியர்கள் மட்டுமே எமது பங்கில் அதற்குச் செல்வதற்கு வருகை தந்திருந்தனர்.

அது தொடர்பில் அங்கு கருத்துத் தெரிவித்த பெற்றோர் ஒருவர் மறையாசிரியர்கள் இப்படித்தான் அவர்களின் செயற்பாடுகளும் இவ்வாறு தான் என குறை சொன்னார். பின்னர் ஆராய்ந்து பார்த்தபோது அவரது மகளான மறையாசிரியையும் அங்கு வருகை தராமை தெரியவந்தது.  இவ்வாறு தான் நம்மில் பெரும்பாலானோர் தம்மில் குறைகளை வைத்துக்கொண்டு பிறர் மீது சர்வசாதாரணமாக குற்றம் சாட்டுவதில் வல்லவர்கள்.  

‘பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற மற்றவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவர் அல்லவா? என பரிசுத்த வேதாகமத்தின் லூக்கா நற் செய்தி எமக்குத் தெரிவிக்கின்றது.  

நாம் நமது பிழைகளைத் திருத்திக்கொள்ளாமல பிறரின் பிழைகளையே எப்போதும் ஆராய்கிறோம். அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்? சிலவேளை அவர் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதையும் நாம் தேடிப்பார்க்க முற்படுவோம். நாம் திருந்தினால் சமூகம் தாமாகவே திருந்தும் என்ற எண்ணத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்.  

நமது கண்ணில் இருக்கின்ற மரக்கட்டையைப் பார்க்காமல் பிறரது கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? என யேசு நம்மிடம் கேட்கிறார். மற்றவர்களில் உள்ள சிறு சிறு தவறுகளை பெரிதுபடுத்தும் நாம் நம்மில் காணப்படும் பெரிய தவறுகள் தொடர்பில் பார்த்து அதிலிருந்து மாறுவோம்.

பிறரைப் பற்றி விமர்சனங்களை பரப்பித் திரியாமல் நம்மை நாம் மாற்றிக்கொள்ளும்போது ஆண்டவருக்கு விருப்பமான வகையில் வாழமுடியும்.  

சீராக் – ஞானநூல் வாசகம் எமக்கு சிறந்த சிந்தனைக்கு வித்திடுக்கிறது. ‘சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கி விடுகிறது. அவ்வாறே மனிதனின் பேச்சில் மாசுபடிந்து விடுகிறது. குயவரின் கலன்களை சூளை பரிசோதிக்கின்றது. மனிதரை உரையாடல் பரிசோதிக்கின்றது. கனி மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது. சொல் மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகிறது.'

எம்மை நாம் மாற்றிக்கொள்ளும்போது தான் நாம் மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும்.  

(எல். செல்வா)


Add new comment

Or log in with...