திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகும் தவக்காலம் | தினகரன்

திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகும் தவக்காலம்

தவக்காலம் நாளை திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில்  ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பதான 40நாட்களை தவக்காலமாக அனுஸ்டிக்கினறோம்

தவக்காலம் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாவதுடன் சாம்பல் புதன் நாளில் ஆலயங்களில் இறைமக்களின் நெற்றியில் அருட்பணியாளர்கள் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட  சாம்பலால் சிலுவை அடையாளம் பூசுவர்.

அதனைத்தொடர்ந்து சிறப்புத் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து வரும் நாட்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் வெள்ளிக்கிழமை தோறும் ஆலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடத்தப்படுவதுடன் வீடுகளிலும் தவக்கால பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.  தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து ஜெபம், தவம், தர்மம், விரதம்  போன்றவைகளை கடைப்பிடிக்கின்றனர்

மனம் வருந்துதல், மனமாற்றம், மன்னிப்பு ஆகியவை வழியாக கிறிஸ்தவர்கள் தங்கள் முகங்களையும் இதயங்களையும் புதுப்பிப்பதற்கு தவக்காலம் வலியுறுத்துகின்றது. இதில் அனைத்துப் படைப்புக்களை ஈடுபடுத்தவும் அழைப்பு விடுக்கின்றது

“கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது” என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தவக்காலச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.படைப்பின் மீட்பு, பாவத்தின் அழிக்கும் சக்தி, மனம்வருந்துதல் மற்றும் மன்னிப்பின் குணமளிக்கும் வல்லமை ஆகிய மூன்று தலைப்புகளில் தவக்கால செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்  கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தயாராக்கும் தவக்காலம் மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் வேளை இந்த மனமாற்றம் படைப்புக்கும் நன்மையைக் கொணரும் எனக் கூறியுள்ளார்.

பாவத்திற்காக மனம் வருந்துதல், மனமாற்றம், மன்னிப்பு ஆகியவை வழியாக கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புதுப்பிப்பதற்கு தவக்காலம் வலியுறுத்துகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை இதன் வழியாக பாஸ்கா பேருண்மையின் அளவற்ற அருளை முழுமையாக வாழ முடியும் என்று தெரிவித்துள்ளார்.பக்தி முயற்சிகள் மற்றும் நற் செயல்கள் வழியாக தவக்காலத்தில் பாரம்பரியமாக மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.  

இந்த அருளின் காலம் வீணாய் போகாமல் உண்மையான மனமாற்றத்தின் பாதையில் நாம் செல்வதற்கு கடவுளின் உதவியை நாடுவோம் எனவும் தன்னலத்தைக் கைவிட்டு தேவையில் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு நம் ஆன்மீக மற்றும் பொருள் உதவிகளை வழங்குவோம் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

நோன்பு, செபம், தர்மம் செய்தல் ஆகியவை, வரலாற்றையும் அனைத்துப் படைப்புக்களையும் உட்படுத்தும் புரட்சியின் அடையாளங்கள் என்றும், நோன்பு என்பது நமது பெரும்விருப்பங்களைத் திருப்திப்படுத்தும். எல்லாச் சோதனையிலிருந்தும் விலகுவதாகும் என்றும் தன்னலத்தை கைவிட செபம் நமக்குக் கற்றுத் தருகின்றது என்றும் தனக்கென அனைத்தையும் வைத்திருக்கும் அறிவற்றதன்மையிலிருந்து தப்பிப்பதற்கு தர்மம் செய்தல் உதவுகின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.  நாம்தொடங்கியிருக்கும் தவக்காலம் மேன்மைதரும் மாற்றங்களை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்கும் வசந்தகாலமாக மாற இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு உள்ளிட்ட சோதனையை வெல்வதற்கு இறையருள் வேண்டி மன்றாடுவோம்.(ஸ)


Add new comment

Or log in with...