Friday, March 29, 2024
Home » மாடிக்குடியிருப்பு வீட்டு உரிமையை மக்களுக்கு வழங்கும் தீர்மானத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

மாடிக்குடியிருப்பு வீட்டு உரிமையை மக்களுக்கு வழங்கும் தீர்மானத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

- 2024 இற்குள் 8,351 வீடுகளுக்கான உரிமைகளை வழங்க தீர்மானம்

by Rizwan Segu Mohideen
December 23, 2023 12:28 pm 0 comment

அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமையை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காணி உரிமை மூலம் மக்களுக்கு அரச மாடிக் குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 2024 ஆம் ஆண்டுக்குள் 8,351 வீடுகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதோடு, அது தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

காணி உரிமை தொடர்பில் எழுந்திருக்கும் பிரச்சினைகள், அதற்கான விடுவிப்பு பத்திரங்கள், சான்றிதழ்கள் தொடர்பிலான பிரச்சினைகள், பிணையாளர் மற்றும் பரிந்துரைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பணிப்பாளர் ஜெனரல் சிரான் ஹேரத், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் என்.பீ.கே,ரணவீர, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் ஜே.எம்.பத்ரானி ஜயவர்தன, கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன, காணி பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசிங்க, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரியந்தா திசாநாயக்க உள்ளிட்டவர்களும் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT