இத்தாலி சுற்றுலா கண்காட்சியில் இலங்கை | தினகரன்

இத்தாலி சுற்றுலா கண்காட்சியில் இலங்கை

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பிரசார நடவடிக்கைகள் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக இத்தாலியின் மிலான் மாநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கை சுற்றுலாத்துறை வீதி கண்காட்சி' பிரசார நிகழ்வொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. 

மிலானில் ஏற்பாடு செய்திருந்த பிஐரி சர்வதேச போக்குவரத்து கண்காட்சியில் ஒரு பகுதியாக இலங்கையின் இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபையின் அனுசரணையுடன் இக்கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்றன. இலங்கை காட்சிக் கூடங்களை இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.  

இலங்கையின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நடனத்துடன் ஆரம்பமான திறப்பு விழா அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது. சுற்றுலாத்துறைக்கான கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷன ராயகருணாவும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு இலங்கை நிறுவனங்களை ஊக்குவித்திருந்தார்.  

பி.ஐ.ரி கண்காட்சியானது 1980ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படுவதுடன், உலகளாவிய ரீதியில் உள்ள பல்வேறு சுற்றுலாத்துறை மற்றும் போக்குவரத்து நிறுவனங்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகக் காணப்படுகிறது. சுற்றுலாத்துறையின் பிந்திய நிலைமைகள் தொடர்பில் பல மாநாடுகளும், செயலமர்வுகளும் இங்கு நடத்தப்பட்டுள்ளன. 

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு சபையும், ரோமிலுள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து கண்காட்சிக் கூடங்களுக்கு வெளியே இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வீடியோ காட்சிகளைக் காட்சிப்படுத்தியிருந்தன. இதன் ஒரு அங்கமாக இத்தாலியில் உள்ள ஒன்பது முக்கிய ரயில் நிலையங்களில் இலங்கை சுற்றுலாத்துறை தொடர்பான வீடியோ கட்சிகளும், பாரிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.  


Add new comment

Or log in with...