குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று | தினகரன்

குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று

குழந்தை பிறந்த பிறகு அக்குழந்தையின் ஆரோக்கியத்தில் ஐந்து வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குடல் தொடர்பான ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்.  

ஏனெனில் இளம் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற 'ஷிகெல்லோசிஸ்' என்கின்ற குடல் சம்பந்தப்பட்ட தொற்றுநோயை உண்டாக்கும் ஒரு வகை பக்றீரியா குழுவின் பெயர்தான் ஷிகெல்லா(Shigella) ஆகும். பெரும்பாலும் 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே இப்பக்றீரியா தொற்றுக்கு உள்ளாவர்.  

இந்நோய்த்தொற்றின் முக்கியமான அறிகுறி வயிற்றுப்போக்கு ஆகும். இது ஏனைய வயிற்றுப் பிரச்சினைகளை விடவும் கடுமையானதாக இருக்கும். அடிக்கடி இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தசைகளில் பிடிப்பு, குமட்டல், வாந்தி, அரிதான வலிப்புத் தாக்கங்கள் போன்றவாறான அறிகுறிகளும் வெளிப்படும்.  

இவ்வறிகுறிகள் பெரும்பாலும் கணுக்கால், மூட்டுகள், பாதம், இடுப்புப் பகுதி ஆகியவற்றில் வலி, வீக்கமாகவும் வெளிப்படலாம். சிலருக்கு குடல் அசைவுகளில் பிரச்சினை, மலக்குடல் கீழே சரிந்து போதல் போன்றவாறான பிரச்சினைகளும் ஏற்படும். ஷிகெல்லோசிஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்டதற்கு பின் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தோன்றும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கும்.  

இந்நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு குணமடைந்த பின்பும் ஒரிரு வாரங்கள் வரையில் இந்நோய்த் தொற்று காணப்படும். அதனால் தனிப்பட்ட சுத்தத்திலும் சுற்றுப்புறச்சூழல் சுத்தத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  

கழிவறைக்கு சென்ற பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். வயிற்றுப்போக்கு பிரச்சினை இருக்கும் போது உணவு தயார் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இப்பக்றீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பல வழிகளில் பரவும்.

அதனால் குழந்தைகளுக்கு இப்பிரச்சினை காணப்பட்டால் அது குணமடையும் வரையும் அவர்களைப் பாடசாலைக்கு அனுப்பக்கூடாது. இதன் மூலம் இப்பக்றீரியா குழந்தைகளுக்கு பரவுவதைத் தடுக்கலாம்.  

வெளியிடங்களில் உணவருந்துவதைத் தவிர்த்து வீடுகளில் சுகாதாரமான முறையில் உணவைத் தயார் செய்து சாப்பிட வேண்டும். அதன் மூலம் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் மூலம் இத்தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு பெற்றிடலாம். 


Add new comment

Or log in with...