அதிகரிக்கும் மன அழுத்தம் | தினகரன்

அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் உளச்சிக்கல்

இன்றைய நவீன யுகத்தில் மனித வாழ்வு இயந்திரமயமாகியுள்ளது. அவனது செயற்பாடுகளும் பரபரப்பு நிலைக்கு உள்ளாகியுள்ளதோடு, தேவைகளும் எதிர்பார்ப்புக்களும் கூட முடிவிலின்றி அதிகரித்து செல்கின்றன. இதன் விளைவாக இரவு பகல் பாராது உழைக்க வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்பட்டுள்ளான். இருந்த போதிலும் அவனது தேவைகளும், எதிர்பார்ப்புக்களும் முழுமை அடைவதாக இல்லை.  

இந்த வாழ்க்கை அமைப்பும், பரபரப்பு நிலைமையும் மனிதனின் உடல் உள ஆரோக்கியத்திற்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளன. இதேவேளை இன்றைய சமூக அமைப்பில்  உள ரீதியாக முகம் கொடுக்கும் முக்கிய நெருக்கடியாக மன அழுத்தம் (Depression) விளங்குகின்றது. இன்றைய காலகட்டத்தில் எல்லா வயது மட்டத்தினரும் இந்நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றனர். இதனைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது. இருந்தும் இப்பாதிப்பு தொடர்பில் அறிந்து தெரியாதவர்களாக அனேகர் உள்ளனர்.  

அதன் காரணத்தினால் மன அழுத்தம் என்றால் என்ன? அதன் பாதிப்புக்கு யாரெல்லாம் உள்ளாகலாம்? அதற்கான சிகிச்சை முறை என்ன? என்பன தொடர்பில் அறிந்து தெரிந்து செயற்படுவதன் அவசியம் குறித்த கவனம் செலுத்தப்பட வேண்டிய காலம் இது.  

வாழ்க்கையே சவால்கள் நிறைந்தது தான். ஆசைகள் நிராசையாவதும், உறவு பிரிவதும் இயல்பானது. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும் உண்மையை எதிர்கொள்ளும்போது வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித உள்ளம் தடுமாறும். தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணித்தியாலயங்களோ சில நாட்களிலோ உள்ளம் தன் இயல்புக்குத் திரும்பும்.  

ஏமாற்றங்களும் பிரிவுகளும் இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் சோகத்திற்கு உள்ளாகும். இத்தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் இரசாயனப் பதார்த்தங்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.  

பொதுவாக மன அழுத்தம் என்றவுடன் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சோகமாக இருப்பார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ணி விடக்கூடாது. வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைபாடே மன அழுத்தமாகும்.  

ஆனால் மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவர். தனித்திருக்க விரும்புவர். நட்பைத் தவிர்த்து கொள்வதில் ஆவர்ம் கொள்வர். வழமையான செயற்பாடுகளில் ஆர்வமின்றி இருப்பர். அதாவது ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ அல்லது ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பர். வழக்கத்துக்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவிதக் குழப்ப மனநிலையில் காணப்படுவர். கோபமும் வருத்தமும் பயமும் மிகுந்த ஒருவித விளிம்பு நிலையில் உணர்ச்சிகள் வெடித்துவிடும் நிலையில் அவர்கள் காணப்படுவர். தனக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்கும். நீண்டகால நோய்கள், பதற்றம், மனச்சிதைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளோடும் மனஅழுத்தத்துக்கு தொடர்புண்டு.  

முன்பு அதிகம் கவனம் செலுத்தப்படாதிருந்த இம்மன அழுத்தம் கடந்த ஒரு தசாப்த காலதிற்குள் அபரிமித வளர்ச்சியை அடைந்துள்ளது. உலகில் 30கோடிக்கும் மேற்பட்ட மக்கள், அதாவது உலக மக்கள்தொகையில் சுமார் 4வீதத்தினர் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 2015இல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மன அழுத்தத்தால் ஆண்களைவிடப் பெண்கள் தான்அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அப புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

உலகலாவிய ரீதியில் முன்கூட்டிய மரணத்துக்கான காரணங்களில் பத்தாவது இடத்தில் மன அழுத்தம் உள்ளது. 15வயதுக்கும் 29வயதுக்கும் இடைப்பட்டவர்களின் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் மன அழுத்தத்துடன் தற்கொலை உள்ளது. தற்கொலைக்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் ஒரு நிமிடத்துக்கு இருவர் இதனால் உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  

உலகில் அதிக மன அழுத்தமுள்ள மனிதர்களைக் கொண்ட நாடாக அமெரிக்காவே உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொலம்பியா, உக்ரைன், நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. ஆனால் ஜப்பான், நைஜீரியா, சீனா ஆகிய நாடுகளில் மனஅழுத்த பாதிப்பு குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.  

மன அழுத்தத்தின் தாக்கம் கீழை நாடுகளில் குறைவாகவும் மேலை நாடுகளிலும் அதிகமாகவும் இருப்பதால், அது மேலைநாடுகளின் பிரச்சினையாகவோ ஆடம்பரத்தின் வெளிப்பாடாகவோ இருக்கலாம் என்று சிலரால் கருதப்படுகின்றது. மன அழுத்தம் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி பெரும்பாலான நாடுகளில் மன அழுத்தம் ஒரே அளவில்தான் உள்ளது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தத்தின் பாதிப்பு ஆப்கானிஸ்தானில் மிக அதிகமாகவும் ஜப்பானில் மிகக் குறைவாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.  

வளர்ச்சியடையாத நாடுகளில் வாழும் மக்களுக்கு மன அழுத்தத்தை ஒரு குறைபாடாகக் கருதும் மனமுதிர்ச்சி இல்லை. தங்கள் உணர்வுகளையும் எண்ண ஓட்டங்களையும் வெளிப்படையாகப் பேசினால் சமூகத்தில் தங்களுக்குக் களங்கம் ஏற்படும் என்று அஞ்சி, வெளியில் உதவி பெறத் தயங்கி, அவர்கள் தங்கள் குறைபாட்டைத் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்பவர்களாக உள்ளனர்.  

கடந்த காலங்களில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பேய் பிடித்துள்ளது எனக் கருதி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தல் அல்லது மந்திரவாதிகள் எனக் கருதி தூக்கிலிடுதல் போன்றன இடம்பெற்றன

.அந்தக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இன்று மனநோய் குறித்த விழிப்புணர்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மன அழுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இன்றும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றனர். அதனால் மனநல மருத்துவரொருவர், 'மன அழுத்தம் வலுவானவர்களின் சாபம்' என்று குறிப்பிட்டுள்ளார்.  

அவரது கூற்றுப்படி, மூளையின் ஒரு பகுதி தான் உடலின் செயல்பாடுகளையும் மனநிலையையும் கட்டுப்படுத்துகின்றது. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளுக்குப் பின் மனநிலையை இப்பகுதியே சமன்படுத்துகின்றது. மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு சில இரசாயன சுரப்புகள் குறைவாக காணப்படும். அதனால் மன அழுத்தம் என்பது மனநோய் அல்ல அது உடல் நோயின் வெளிப்பாடேயாகும்.  

நிதி நெருக்கடி, தனிப்பட்ட இழப்புகள், உறவுகளின் பிரிவுகள், நீண்ட நாள் நோய், தாங்க முடியாத வலி, போதைப் பொருட்களின் பயன்பாடு, கடந்த கால அதிர்ச்சிகள், அவமானங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படலாம். அதீத மன அழுத்தமோ, சிலவகை நோயோ உடலின் நோயெதிர்ப்பு சக்தியை தேவைக்கு அதிகமாக இயங்க வைக்கும். இதனால் மூளையில் வீக்கமும் அதன் விளைவாக மன அழுத்தமும் ஏற்படும் என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கின்றது.  

என்றாலும் உடலின் இரசாயன சுரப்புக்களது குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தத்தைத் 'தீவிர மன அழுத்தம்' என்றும், வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை 'மிதமான மன அழுத்தம்' என்றும் மற்றொரு உளநல மருத்துவரொருவர் குறிப்பிட்டுள்ளார்.  

இம்மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென மருந்துகள் உள்ளன. இதில் ஒரு வகை மருந்து நோயுற்றவரின் பரபரப்பைக் கட்டுப்படுத்தி அவரை அமைதிப்படுத்தும். மற்றைய வகை மருந்துகள் இந்நோய்க்கு உள்ளானவரின் சோர்வையும் அசதியையும் நீக்கி சுறுசுறுப்பை அதிகரிக்கும்.  என்றாலும் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்பான எண்ணங்களோ முயற்சிகளோ அதிகமாகக் காணப்படுமாயின் அவர்களை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதே சிறந்தது.  

மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளால் நா உலர்தல், மலச்சிக்கல், பசியின்மை, அதிகப் பசி, இலேசான மயக்கம், வயிற்றில் எரிச்சல், மாதவிலக்கு தள்ளிப்போகுதல், மாதவிலக்கில் அதீத  குறைவான இரத்தப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.  

அதேநேரம் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்ப கட்ட உள நல ஆலோசனை பயனளிக்காது. ஆனால், அவர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்த ஆலோசனையை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். மிதமான மன அழுத்தத்துக்கு உள வள ஆலோசனை மிகவும் அவசியம். அதனால் ஏற்படும் உறக்கமின்மை, பதற்றம் ஆகிய இரண்டையும் குறைப்பதற்காக ஆரம்ப கட்டங்களில் சில மாத்திரைகள் தேவைப்படும்.  

மன அழுத்தத்துக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும் உலகில் மன அழுத்தம் குறைந்தபாடில்லை. மனிதர்களின் மீதான அதன் பிடி இறுகிக்கொண்டு தான் இருக்கின்றது. 2015-க்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20சதவீதம் அதிகரித்துள்ளது. 1945-க்குப் பிறகு பிறந்தவர்கள் 10மடங்கு மேல் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக 60,- 74வயதுடையவர்கள் ஏனைய வயதினரை விடவும் மன அழுத்தம் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இந்நோய் அதிகரித்து காணப்படுவதற்கு ஒரு காரணமாகும்.  

அதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து தமது பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசி, உதவி கோரும் அளவுக்கு ஓர் ஆரோக்கியமான சமூகத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இப்பொறுப்பை உணர்ந்தால், மன அழுத்தத்தால் களையிழந்த வாழ்வுக்கு மீண்டும் உயிரூட்ட முடியும்.

(முஹம்மத் மர்லின்)


Add new comment

Or log in with...