இறை நினைவு | தினகரன்

இறை நினைவு

எனது அடியான் நினைவு கூரும்போதும், என் நினைவில் அவனது உதடுகள் இரண்டும் அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன்'  (ஆதாரம் புகாரி)

தன் இறைவனை நினைவு வைக்கும் மனிதன் உயிருள்ள ஒரு மனிதனுக்கு ஒப்பானவன். அல்லாஹ்வை நினைவு வைக்காத மனிதன் உயிரற்ற மனிதனுக்கு ஒப்பானவன்' (புகாரி, முஸ்லிம்)

மனித வாழ்வில் இறை நினைவு மனிதனுடன் இரண்டரக்கலந்த ஒரு விடயமாக அமைதல் வேண்டும். தன்னுடைய பிரதிநிதியாக அல்லாஹ் இவ்வுலகில் மனிதனைப் படைத்து, இவ்வுலக வாழ்விற்கு அவனுக்கு தேவையான சகல வாழ்வாதாரங்களையும் அருளாககொடுத்துள்ளான். அவ்வகையில் மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளான்.

'இத்தகையவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள்.

'எங்கள் இறைவனே நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதைனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக' (அல் குர்ஆன்)

எனவே, நாம் அல்லாஹ் நமக்கு சொறிந்துள்ள அருள்களை எந்நிலையிவுலும் நினைவு கூர்ந்து, அவனுக்கு திக்ர் செய்தல் வேண்டும். இதற்கு நாம் ஒரு இடத்தையும், நேரத்தையும்  ஒதுக்கத்தான் வேண்டுமென்பதில்லை. மாறாக எந்நிலையிலும் திக்ர் செய்யும் அமைப்புக்கேற்ப எம் வாழ்வை மாற்றிக் கொள்ளப் பழக வேண்டும்.

'என்னை ஞாபகப்படுத்த தொழுகையை நிலை நாட்டுவீராக' (அல் குர்ஆன்)

'தன்னை தூய்மைப்படுத்தி தனது இரட்சகன் பெயரை நினைவு கூர்ந்து தொழுபவன் வெற்றியடைந்தான்' (அல் குர்ஆன்)

தொழுகையைப் பேணி உரிய நேரத்திலும், சுன்னத்தான மற்றும் நபிலான தொழுகைகளை நிறைவேற்றுவதும் இறை நெருக்கத்தைப் பெற்றுத் தருவதோடு இறைவனை ஞாபகப்படுத்தும் முக்கிய சந்தர்ப்பமாக அமைகிறது.

எனவே, நாம் இறை நினைவை எம்முள்  அதிகப்படுத்திக் கொள்ள நாம் அதிகமதிகம் குர்ஆனை ஓதுவதோடு,சந்தர்ப்ப துஆக்களையும் ஓதுதல் வேண்டும்.

'.......நீ என்னை இமைப்பொழுதும் என் மனதிடம் ஒப்படைத்து விடாதே. .........'

'யா அல்லாஹ் எனது நாவை என்றும் இறை நினைவில் நனைத்து வைத்திருப்பாயாக'

என்ற துஆக்கள் என்றும் எம்மை இறை நினைவுடன் பிணைத்து வைக்கவேண்டும். அத்துடன் நாம் ஓய்வாக இருக்கும் நிலைகளில் அதிகமதிகம் தஸ்பீஹ்,  தஹ்லீல் மற்றும் தக்பீர் மொழிவதும் இறை நெருக்கத்தைப்  பெற்றுத் தரும்.

மௌலவியா ஜெஸீலா (எம்.ஏ)

சில்மியாபுர.


Add new comment

Or log in with...