இஸ்லாத்தின் அனந்தரக்காரர்களான 'பக்கீர்களை' ப் பாதுகாப்போம் | தினகரன்

இஸ்லாத்தின் அனந்தரக்காரர்களான 'பக்கீர்களை' ப் பாதுகாப்போம்

ஒரு சமூகம் உயிர்ப்புள்ள சமூகமாக செயற்படவேண்டுமாயின்  அது பல பண்பாட்டுக் கூறுகளை தனித்துவமாக கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் முஸ்லிம் சமூக மரபில் தமக்கே உரித்தான ஒரு பண்பாட்டுப் பிரிவினரான பக்கீர்கள்  காணப்படுகின்றனர்.

யார் இந்த பக்கீர்கள் ?

'பக்கீர்' என்ற அறபுப்பதம் ஏழை அல்லது வறுமைப்பட்டவர்களைக் குறிக்கின்றது.  ஆனாலும் சூபித்துவ நோக்கில்  அச்சொல்லின் ஆழம் ஆன்மீகத்தோடு தொடர்புபட்டதாக கருதப்படுகின்றது. சமூகத்தினதும்  பண்பாட்டினதும் தொடர்ச்சிக்காக தம்மை  வெறுமையாக்கிக் கொண்டவர்கள் எனவும் கருத முடியும். சாதாரணமாக  இவர்கள் பக்கீர்வாவா என அழைக்கப்படுவர்.

தனித்துவமும் வரலாறும்

இஸ்லாமிய மரபில் வழிபாட்டு மரபுகளுக்கு அப்பால் உள்ள பண்பாட்டு அம்சங்களை சிறப்பாகக் கொண்டிருக்கும் ஒரு தனித்துவமான குழுவினரே இவர்கள்.   நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தே சூபித்துவ மரபோடு ஒன்றித்திருக்கும் இவர்களது வரலாறு  முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் காலத்தில் இன்னும் உயிர்ப்படைகின்றது. இவர்களது பிரதான அடையாளமாக இருப்பது எளிமையும்  பொறுமையும்.  அதற்காகவே தம் மனதையும் வாழ்வையும் பக்குவப்படுத்திக் கொண்டவர்கள்.

இசையையும்  நுண்கலையையும் தமது பணியாக கொண்டிருக்கும் இவர்கள் இலங்கை,  இந்திய முஸ்லிம்களுக்கே உரித்தான ஒரு இசை மரபை இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது ஆடைகளும்  அணிகலன்களும் இன்றைய கலாசார ஆடைக்கான போராட்டம் நடத்துவோருக்கான மூத்த முன்மாதிரியாகும்.

பாடல்கள்,  பைத்துக்கள்,  கிஸ்ஸா  முனாஜாத்து  போன்ற பல வகை இசைப் பாடல்களுக்கு மட்டுமல்ல  இஸ்லாமிய இசை மரபின்  தனித்துவமான   றபான் முறையை இன்றும் உயிர்வாழ வைத்தவர்கள்.  இன்னும் குத்துவெட்டு எனப்படும் 'வீரக்கலையை'  நடாத்துவதோடு சமூக நிகழ்வுகளில் இஸ்லாமிய மரபிலான இசை முறையை இன்றும் வாழ வைக்கும் இவர்களை சமூகம் வாழவைக்கத் தவறி இருக்கின்றது எனவும் கூற முடியும்.

சமய மட்டத்தில் சர்வதேச ரீதியாக பல பக்கீர்கள் சன்மார்க்கப்பணி புரிந்திருக்கின்றார்கள். தரீக்காக்களான காதிரிய்யா,  ஷாதுலிய்யா,  நக்ஷபந்தியா,  மதாரிய்யா போன்ற பலவற்றின் உருவாக்கங்களுக்கும் இவர்களே பங்களித்தனர். கபீர் றியாய்யி நாயகம்,  சாஹுல் ஹமீத் வலியுள்ளா போன்றோரும்  பக்கீர்களாகவே  வரலாற்றுப் பணி புரிந்துள்ளார்கள்.

தற்கால சமூகத்தில்  நோன்பு , பெருநாட்கள் சமூக நிகழ்வுகள் போன்றவற்றில் இன்றும் தமது பங்களிப்பை வழங்கிவரும் இவர்கள் மின்சாரமோ  நவீனமோ இல்லாத பண்டைய காலத்தில் வணக்க வழிபாட்டிற்காக எம்மை எழுப்பி விடும் 'அலாறங்களாகவும்' கலாசாரத்தின் காப்பாளர்களாகவும் இருந்து   பணி புரிந்ததோடு இன்றும்  இஸ்லாமிய இசைக்கான  இடைவெளியை நிரப்பிக் கொண்டிருக்கும் இவர்களது பணிக்கு நிகராக எவர்களுமில்லை என்றே கூறமுடியும்.

தம்மை வறுமையாளர்களாக  மட்டுமே அடையாளப்படுத்தி  தமக்காக எதுவுமே சேமிக்காது சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் தொடர்புபட்ட ஒரு பண்பாட்டுப்பிரிவினரான இவர்கள்  தமது வாழ்க்கை  ஆடை,  இசை,  பண்பாடு என்ற எல்லாவற்றிலுமே சமயத்தின் வரையறைகளுடனான  அடையாள மனிதர்களாக  பிறருக்கு உதவியாகவே வாழ்ந்ததனால்  இன்று ஒரு விளிம்பு நிலைச்சமூகமாகவே மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் சமூகத்திற்கு செய்த சேவைக்கு சமூகம் வழங்கிய பங்களிப்பு என்ன? என்பது கேள்விக்குறியானதே ஆகும். ஏனைய சமூகங்களில் தமது மரபுக்கும்  பண்பாட்டிற்கும் அதனைப் பாதுகாத்தவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பை இவர்களது விடயத்தில் முஸ்லிம் சமூகம் வழங்க மறந்திருக்கின்றது என்பதே எனது கணிப்பு.

எம்.ஏ.ஆர்.எம். முஸ்தபா

அதிபர், நாவிதன்வெளி


Add new comment

Or log in with...