இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு சொந்தமென டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு | தினகரன்

இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு சொந்தமென டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

குக்கர் சின்ன வழக்கிலும் தினகரன் தோல்வி

இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்குத்தான் சொந்தம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை அதிமுக பயன்படுத்துவது சரிதான், எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இந்த சின்னத்தை பயன்படுத்தலாம் என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு மொத்தமாக அகற்றி விடப்பட்டது. இதையடுத்து சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒன்றாக சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை முடக்கியது.

2017 மார்ச் மாதம் அந்த சின்னம் முடக்கப்பட்டது. இதனால் தற்காலிகமாக தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னம் கிடைத்தது. எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதன் மீதான வழக்கு 5 மாதங்களுக்கு மேலாக தேர்தல் ஆணையத்தில் நடந்தது. கடைசியாக தேர்தல் ஆணையம் 2017 நவம்பர் மாதம் வழங்கிய தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது.

அதன்பின் டிடிவி தினகரன் தரப்பு ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதில அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். அதே சமயம் இந்த இரட்டை இலை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றார்.

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன் மீதான விசாரணை கடந்த 1 வருடமாக நடைபெற்றது. இதில் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு வாதம் வைத்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்குத்தான் சொந்தம். இரட்டை இலை சின்னத்தை அதிமுக பயன்படுத்துவது சரிதான், எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இந்த சின்னத்தை பயன்படுத்தலாம். தினகரன், சசிகலாவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இது டிடிவி தினகரனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் இவர் தோல்வி அடைந்தார். குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...