மதுரையில் பிரேமலதா போட்டி | தினகரன்

மதுரையில் பிரேமலதா போட்டி

மதுரை மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் பிரேமலதா போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உற்சாகமடைந்துள்ள கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களாகத் திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின் நடைபெறும் மக்களவைத் தேர்தல் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது. அதிமுக அணியில் பாமக, பாஜக இடம்பெற்றுள்ள நிலையில் தேமுதிகவையும் இழுக்க பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேபோல், திமுக அணியில் சேருமாறு திருநாவுக்கரசர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தின் உடல் நலம் விசாரிப்பதுபோல் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. தேமுதிக கேட்கும் ஆசனங்களை வழங்க இரு அணிகளும் தயங்கும் நிலையில், 40 தொகுதிகளிலும் தேமுதிக தலைமை தனது கட்சியினரிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. தங்கள் தொகுதியில் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா போட்டியிட வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் பிரேமலதா போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை விஜய காந்துக்கு சொந்த ஊர் என்பதோடு கட்சி தொடங்கிய இடம் என்பதால் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு மதுரையில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என கட்சி நிர்வாகிகள் கணக்குப் போட் டுள்ளனர். மதுரையில் தேர்தல் பணியைத் தொடங்க கட்சி நிர்வாகிகளுக்கு தேமுதிக தலைமை உத்தரவிட்டுள்ளதால் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் பட்சத்தில் மதுரை தொகுதியை தேமுதிக கேட்டுப் பெறும் எனத் தெரிகிறது. பிரேமலதா மதுரையில் போட்டியிட முடிவு செய்துள்ள தகவலால் கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Add new comment

Or log in with...