எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் | தினகரன்

எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்

முப்படை அதிகாரிகள் கூட்டாக பேட்டி

அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் டெல்லியில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முப்படை அதிகாரிகளின் செய்தியாளர் சந்திப்பு நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இந்த சந்திப்பில், ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், டி.எஸ் குஜ்ரால் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அதில்,விமானப்படை துணை மார்ஷல் ஆர்.ஜி.கபூர் கூறுகையில்,

அபிநந்தன் விடுதலை செய்யப்பட இருப்பது இந்திய விமானப்படைக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பெப். 27ம் திகதி காஷ்மீர் ரஜோரி பகுதியில் பாக். இராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம் இந்தியாவின் மிக்-21 ரக விமானத்தின் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. 2 இந்திய விமானிகளை கைது செய்ததாக பாக். பொய் கூறியது, ஆளில்லா இடங்களில் தான் தாக்குதல் நடத்தியதாக பாக் கூறியது, ஆனால் அவர்கள் இந்திய தளவாடங்களை குறிவைத்து தான் தாக்கியுள்ளனர். மேலும் பாக். எஃப்-16 ரக விமானத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூறியது, ஆனால் அதை தான் நாம் சுட்டு வீழ்த்தினோம்.

எல்லையில் உள்ள அனைத்து படைகளும் தயார் நிலையில் உள்ளது. பால்கோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கையை தற்போது சரியாக கூற முடியாது. எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய இராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின. விமான தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பல தவறான தகவல்களை கூறிவருகிறது.

அதனை தொடர்ந்து கப்பற்படை அதிகாரி டி.எஸ் குஜ்ரால் கூறுகையில்,

இந்திய இராணுவம் எந்த சவாலையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருக்கிறது. இந்திய கடற்படை முழு எச்சரிக்கையுடன் இருக்கிறது. இந்திய நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பது தான் முப்படை தளபதிகளின் நோக்கம் என்றார்.

மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் மெஹல் கூறுகையில்,

பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன, உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து குறிப்பிட்டு கூறமுடியாது. பாகிஸ்தான் விமானப்படை குண்டுகள் வீசி தாக்கினாலும் இந்திய தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்திய விமானப்படை தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு தொடர்ந்து குறி வைக்கப்படும். இந்திய ராணுவம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள முழு அளவில் தயாராக உள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தால் பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் தொடரும். இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் சக்திகள் மீது எங்கள் நடவடிக்கை தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்திய படைகள் சுட்டுவீழ்த்திய பாகிஸ்தான் விமானத்தின் பாகங்கள் செய்தியாளர்களிடம் காட்டப்பட்டன.


Add new comment

Or log in with...