Friday, April 19, 2024
Home » இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரம் கையளிப்பு

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரம் கையளிப்பு

by Rizwan Segu Mohideen
December 22, 2023 2:28 pm 0 comment

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தனது நற்சான்றுப்பத்திரத்தை கையளித்தார்.

சந்தோஷ் ஜா இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் 2020 ஜூலை முதல் 2023 டிசம்பர் வரை பிரேசிலுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றினார்.

அது மாத்திரமன்றி 2019-2020 வரை உஸ்பெகிஸ்தானுக்கான இந்திய தூதராகவும், 2017-2019 வரை வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராகவும் பணியாற்றினார்.

புதுதில்லி வெளியுறவு அமைச்சில், மனித வளங்கள் மற்றும் முகாமைத்துவ விவகாரங்களுக்கான பிரிவு, மேற்கு ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளுக்கான பிரிவு, கொள்கை திட்டமிடல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.

உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா 2007-2010 காலப் பகுதியில் கொழும்பில் உயர் ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராக பணியாற்றியிருந்ததோடு, வர்த்தக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான பணிகளுக்கு பொறுப்பாக இருந்தார். இந்த காலகட்டத்தில், குறிப்பாக, இந்தியா-இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

சந்தோஷ் ஜா இந்தியா – இலங்கை மற்றும் இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அவரது மனைவியின் பெயர் ஸ்ரீமதியை தனுஜா என்பதோடு, அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்காக, தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக, ஜனாதிபதி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு குறிப்பேட்டில் இட்டுள்ள குறிப்பின் மூலம் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நட்பை மேலும் வலுப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு மற்றும் வலுசக்தி உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு, தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக புதிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

இரு நாடுகளின் தலைவர்களும் இணங்கிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப செயற்படுவது தனது எதிர்பார்ப்பு என்று கூறிய புதிய இந்திய உயர் ஸ்தானிகர், இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் பரஸ்பர செழிப்பு, முன்னேற்றம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT