இந்திய-பாகிஸ்தான் போர் எந்நேரமும் மூளும் அபாயம்! | தினகரன்

இந்திய-பாகிஸ்தான் போர் எந்நேரமும் மூளும் அபாயம்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் விமானமே பறக்காமல் அந்தப் பிராந்தியமே வெறிச்சோடிக் கிடக்கிறது.இந்நிலையில் பாகிஸ்தான் நேற்று இந்திய எல்லைக்குள் நுழைந்து விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இந்திய விமானப் படையினர் ஊடுருவிய அந்நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய தரப்பு தெரிவித்தது.

எனினும் அச்செய்தியை பாகிஸ்தான் உறுதிப்படுத்தவில்லை.

இச்சம்பவங்கள் காரணமாக எல்லையில் தொடர்ந்து பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. மேலும் போர் மூளும் சூழலும் ஏற்பட்டு உள்ளதால் இந்தியா_- பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய_ பாகிஸ்தான் இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டு விட்டது. மறு மார்க்கத்திலும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சிம்லா, குலுமணாலி, பிதாரோகார், பதான்கோட், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஆகிய 8 இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன.

இரு நாடுகளும் இப்படி முட்டிக் கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமானங்களும் இந்த இரு நாட்டு பக்கம் வரத் தயங்குவதாகவும், அச்சப்படுவதாகவும் தெரிகிறது. எனவே எல்லைப் பகுதி வான்வெளி போக்குவரத்து இல்லாமல் அமைதியாக உள்ளது.

இந்தப் பக்கமாக விமானங்கள் பறக்காமல் வேறு மார்க்கத்தில் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வானமே வெறிச்சோடி உள்ளது.

பணயக் கைதியாக தமிழக விமானி:

இந்திய விமானப்படையின் மிக் 21 ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி, விமானி அபிநந்தன் வர்த்தமானை பிணைக் கைதியாக பிடித்து வைத்துள்ளது.

இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் வர்த்தமான் நேற்றுக் காலை ஜம்மு விமானப் படைத் தளத்தில் இருந்து மிக் 21 விமானத்தில் பாதுகாப்புப் பணிக்கு சென்றார். காலை சென்ற அவர் 11 மணிக்கு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. ரேடாரில் அவர் சென்ற விமானம் மர்மமாக பாகிஸ்தான் அருகே மறைந்தது.

இவர் எங்கே இருக்கிறார் என்று உறுதிப்படுத்தக் கூடிய வகையில் எந்த விபரமும் வெளியாகவில்லை. இவர் குறித்து நிறைய தகவல்களும், புகைப்படங்களும், வீடியோக்களும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஆழ்ந்த அமைதி காத்தது.

நேற்றுக் காலை பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, "எல்லை மீறி பாகிஸ்தானுக்குள் வந்த இரண்டு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம். ஒரு விமானம் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் விழுந்து விட்டது. இன்னொரு விமானம் ஆசாத் காஷ்மீரில் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்) விழுந்து விட்டது. நாங்கள் இரு விமானிகளை கைது செய்து பிடித்து வைத்து இருக்கிறோம்" என்று கூறியது.

இந்த இரண்டு விமானங்களும் பாகிஸ்தானுக்கு உள்ளே வந்த பின்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஒரு விமானம் பாகிஸ்தானின் எல்லைக்குள் 3 கி.மீ தூரம் வரை வந்து உள்ளது. அதன் பின்பே அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட விமானியின் பெயர் அபிநந்தன் வர்த்தமான் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

இந்திய இணையத் தளங்கள் இத்தகவலை நேற்று வெளியிட்டன.இந்தியா இந்தச் செய்தியை தொடக்கத்தில் மறுத்தது. "பாகிஸ்தான் பொய் சொல்கிறது. பாகிஸ்தான் இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை. எங்கள் விமானியை பாகிஸ்தான் கைது செய்யவில்லை" என்று இந்தியா கூறியது.

இதையடுத்து அபிநந்தன் வர்த்தமான் இருப்பதாக கூறப்படும் வீடியோ பாகிஸ்தான் தரப்பில் இருந்து வெளியானது. அதில் அபிநந்தன் தன்னுடைய அடையாளங்களை கூறுவது பதிவாகி இருந்தது.

"என் பெயர் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், ​ேசர்வீஸ் எண் 27981. நான் வேறு எதுவும் விஷயங்களை சொல்ல முடியாது" என்று அதில் அவர் கூறி இருந்தார். அந்த வீடியோ பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

"என்னை பாகிஸ்தான் இராணுவம் பிடித்து வைத்துள்ளது" என்றும் அவர் அதில் கூறி இருந்தார். "என் அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் எயார்மார்ஷலாக இருந்தார்" என்று வீடியோவில் அபிநந்தன் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அபிநந்தன் முகத்தில் அடிபட்டு, காயங்களுடன் இருந்த புகைப்படமும் இணையத்தில் வெளியானது

இந்த நிலையில் இந்த புகைபடமும்,செய்திகளும் பெரிய சர்ச்சையை உண்டாக்கின. இவர் இந்திய கமாண்டோ கிடையாது. இந்திய விமானப்படை அதிகாரிகள் மீசை வைத்து இருக்க மாட்டார்கள். அதற்கு அனுமதி இல்லை என்று விவாதங்கள் செய்யப்பட்டன. அதேபோல் அபிநந்தன் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேறு வேறு புகைப்படங்களும் வெளியாகின.

அதன்பின், வீடியோவில் அபிநந்தன் கூறி இருக்கும் செய்திகள் உண்மைதானா என்று சார்பார்க்கப்பட்டது. இந்திய விமானப்படையின் அதிகாரபூர்வ 'பாரத் ரக்ஸாக்' தளத்தில் அவரின் விபரங்கள் இருந்தன. வீடியோவில் அபிநந்தன் கூறிய ​ேசர்விஸ் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் மிக சரியாக விமானப்படை பக்கத்தில் இருந்தன.இது இந்திய தரப்பிற்கு அதிர்ச்சியை அளித்தது. ஆனால் இந்த இணைய பக்கம் சில நிமிடத்தில் முடக்கப்பட்டது.

அதேபோல் அபிநந்தன் பயன்படுத்தும் கண்ணாடி, பாகிஸ்தான்- இந்தியா வரைபடம், துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டு அது புகைப்படமாக இணையத்தில் வெளியானது. அதில் இருந்த ஆவணங்களின்படி அபிநந்தன் 51 ஸ்குவாடை சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கூறினார்கள்.

அதன்பின் இந்திய தரப்பில் இருந்தும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. நேற்றுக் காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று தகவல் வெளியானது. விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதையடுத்து பாகிஸ்தான் பிடித்து வைத்து இருப்பது அபிநந்தன்தான் என்பதை நிரூபிக்க இன்னொரு வீடியோ ஆதாரமும் அந்த நாட்டில் இருந்து வெளியானது. யூ டியூபில் 2016ல் வெளியான Inside India's SU-30' என்ற விவரணச் சித்திர வீடியோவில் இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் அபிநந்தன் இருக்கும் காட்சிகள் கொண்ட வீடியோவையும் பாகிஸ்தான் தரப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்தியா நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.அபிநந்தனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

இந்தியா_ - பாகிஸ்தான் இடையே நடக்கும் வான்வெளி சண்டையில் மிக முக்கியமான நபராக, மிக முக்கியமான திருப்பமாக அபிநந்தன் மாறியுள்ளார். அவரை மீட்க ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா நாடவுள்ளது.

இந்தியா_ பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். பாகிஸ்தான் விமான படையும், இந்திய விமான படையும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத சண்டையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றன.

இது போக காலையில் இன்னொரு பக்கம் சண்டை நடந்து இருக்கிறது. அதன்படி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானம் துரத்தி அடிக்கப்பட்டதா இந்திய செய்திகள் தெரிவித்தன. நேற்றுக் காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் எப் -16 போர் விமானங்கள் நுழைந்தன. 2-3 விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. அதேபோல் காஷ்மீரின் ராஜூரி பகுதியில் பாகிஸ்தான் குண்டுகளை வீசியுள்ளது.

ஆனால் இந்திய விமானப்படை இதை திறமையாக சமாளித்தது. இந்திய விமானப்படையின் தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.இதில் பாகிஸ்தான் விமானி எங்கே சென்றார் என்ற விபரம் வெளியாகவில்லை என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...