இந்தியா - பாகிஸ்தான் இராணுவ பலத்தின் விவரம் | தினகரன்

இந்தியா - பாகிஸ்தான் இராணுவ பலத்தின் விவரம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை இராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை நேற்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

செர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கிடையே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் விமானப்படை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எல்லைப்பகுதியில் நுழையலாம் என்பதால் பதிலடி கொடுப்பதற்கு இந்திய இராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடுமுழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் நாசவேலைகளை தடுக்க உளவுத்துறை தகவல் அடிப்படையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பதான்கோட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் திகதி இந்திய இராணுவத்தின் சிறப்பு கொமாண்டோ படையினர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது குறிப்பிடத்தக்கது. தற்போது நடத்தப்பட்டது 2வது செர்ஜிக்கல் ஸ்டிரைக்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மிராஜ் 2000 ரக போர் விமானத்துக்குப் பல சிறப்புகள் இருக்கிறது. ரபேல் விமானத்தை உருவாக்கும் Dassault -ன் தயாரிப்புதான் இந்த விமானம். மிராஜ் என்றால் தமிழில் கானல்நீர். அதாவது பொய்த் தோற்றம். இருக்கிற மாதிரி இருக்கும். பக்கத்தில் சென்றால் மாயமாகிவிடும் என்பது மிராஜ் ஸ்பெஷல்.இதன் இன்னொரு சிறப்பு துல்லிய கெமரா. மிக உயரத்தில் இருந்து லேசர் நுட்பத்தில் குண்டு போடும் ஆச்சரியம் இந்த விமானத்தின் சிறப்புகளில் ஒன்று.

1986-ஆம் ஆண்டுக்குப் பின் இந்திய விமானப்படைக்கு இந்த விமானம் வந்ததற்கு காரணம் பாகிஸ்தான்! அந்த நாடு அமெரிக்காவிடம் இருந்து F16 ரக போர் விமானங்களை வாங்கியதும் அதைவிட சக்தி வாய்ந்த மிராஜ் 2000 ரக போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து இறக்குமதி செய்தது இந்தியா!

கார்கில் வெற்றியின் கிங் இந்த விமானம். அந்த போரில் பாகிஸ்தான் படைகளையும் பயங்கரவாதிகளையும் துவம்சம் செய்ததில் இந்த விமானத்துக்குப் பெரும் பங்கு உண்டு.

மிகவும் பாதுகாப்பான இந்த விமானத்தில் விபத்துகள் குறைவுதான் என்றாலும் 1989 ஆம் வருடம் நடந்த விபத்து எதிர்பாராத ஒன்று. இந்திய விமானப்படை நாளான ஒக்டோபர் 8 அன்று டெல்லியில் நடந்த சாகச நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியது இந்த மிராஜ்!

அந்த விபத்தில் விங்க் கமாண்டர் பக்ஷி விமானம் மக்களை நோக்கி செல்வதைக் கண்டதும் அருகில் இருந்த இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன் கிட்டங்கியில் விழுந்து விடக் கூடாது என்றும் காலி மைதானம் நோக்கி விமானத்தை திருப்பி விட்டுவிட்டு தன் உயிரை இழந்தார் என்பது அவரது தியாகமாகும்.

இந்தியா- பாகிஸ்தான் ஆயுதங்கள் மற்றும் இராணுவ பலம் குறித்து வொஷிங்டனில் உள்ள சர்வதேச ஆய்வுகள் மைய (CSIS) தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:-இந்தியாவில் 9,000 கிமீ (1,864 மைல்கள்) முதல் 5,000 கிமீ (3,106 மைல்கள்) வரை பாயும் அக்னி -3 உள்ளிட்ட ஒன்பது வகை ஏவுகணைகள் உள்ளன.பாகிஸ்தானின் ஏவுகணைகள் சீன உதவியுடன் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் எந்தப் பகுதியையும் அடையக்கூடிய மொபைல், குறுகிய மற்றும் நடுத்தர அளவிலான ஆயுதங்களை உள்ளடக்கியதாக உள்ளது என CSIS தெரிவித்துள்ளது.

2,000 கி.மீ. (1,242 மைல்கள்) வரை ஷாஹீன் 2 மிக நீண்ட தூரம் ஏவுகணை உள்ளது. இந்தியாவின் 130-140 அணு ஆயுதங்களை ஒப்பிடும்போது பாகிஸ்தான் 140 முதல் 150 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என SIPRI தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 1.2 மில்லியன் இராணுவ வீரர்கள் உள்ளனர்.

3565 போர் தாங்கிகள் உள்ளன. 3,100 காலாட்படை போர் வாகனங்கள், 336 கவச வாகனங்கள் மற்றும் 9,719 பீரங்கிகள் உள்ளன. பாகிஸ்தானிடம் 5,60,000 போர்வீரர்கள், 2496 தாங்கிகள், 1605 கவச வாகனங்கள், 4472 பீரங்கிகள், 375 தானியங்கி பீரங்கிகள் உள்ளன.127,200 பணியாளர்களும் 814 போர் விமானங்களுடன் இந்தியாவின் விமானப்படை கணிசமாக பெரியது.

பாகிஸ்தான் 425 போர் விமானங்களைக் கொண்டுள்ளது, இதில் சீன-எப்என்ஜி 7 மற்றும் அமெரிக்கன் எப் -16 சபோர் பல்கோன் விமானங்கள் உள்ளன.

இந்தியாவின் கடற்படை ஒரு விமானத்தையும் 16 நீர்மூழ்கிக் கப்பல்களையும் 14 அழிக்கும் கப்பல்களையும் 13 போர்க்கப்பல்களையும் 106 ரோந்து மற்றும் கடற்கரை போர் கப்பல்களையும் 75 போர் திறன் கொண்ட விமானத்தையும் கொண்டுள்ளதுடன் 67,700 கடற்படை வீரர்கள் உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் சிறிய கடலோரப்பகுதி கொண்ட பாகிஸ்தான், 9 போர் கப்பல்கள், 8 நீர்மூழ்கிக் கப்பல்கள், 17 ரோந்து மற்றும் கடலோரக் கப்பல்கள் மற்றும் 8 போர் திறன் கொண்ட விமானங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவை விட பாகிஸ்தான் இராணுவ பலம் குறைவுதான். இந்தியா இராணுவ பலத்தில் 4வது இடத்திலும், பாகிஸ்தான் 17வது இடத்திலும் உள்ளது.


Add new comment

Or log in with...