யாழ்ப்பாணத்தில் நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு | தினகரன்

யாழ்ப்பாணத்தில் நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு

நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக நடைபெறவுள்ளது.சர்வதேச தமிழ் இதழியல் இயக்கமும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகியவை இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளது. 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறைத் தலைவர் பேராசிரியர் கோ.இரவீந்திரன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இடம்பெற்று வந்த இந்த மாநாடு முதல் தடவையாக இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது என்று சர்வதேச தமிழ் இதழியல் இயக்கத்தின் இலங்கை ஒருங்கிணைப்பாளர் தே.தேவானந்த் தெரிவித்தார். 

இதழியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்வுகளை உள்ளடக்கியதாக மாநாடு இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தமிழ் இதழியல் துறை சார்ந்து இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளிலும் இயங்கக்கூடிய ஆய்வாளர்கள், புலமையாளர்கள், இதழியல் துறை மாணவர்கள், செயற்பட்டாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமது ஆய்வுகள், அவதானிப்புக்களை முன்வைக்கவுள்ளனர். 

மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் [email protected] என்கிற மின்னஞ்சல் ஊடாகத் தமது ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பி வைக்க முடியும் என்று சர்வதேச தமிழ் இதழியல் இயக்கம் அறிவித்துள்ளது.   

(புங்குடுதீவு குறூப் நிருபர் )


Add new comment

Or log in with...