Wednesday, April 24, 2024
Home » மலையக தமிழர் தொடர்பில் பிரிட்டனுக்கு பாரிய கடப்பாடு

மலையக தமிழர் தொடர்பில் பிரிட்டனுக்கு பாரிய கடப்பாடு

by sachintha
December 22, 2023 8:33 am 0 comment

பிரிட்டன் தூதுவரிடம் மனோ MP தெரிவிப்பு

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் நல வாழ்வு தொடர்பில், பிரிட்டனுக்கு பாரிய கடப்பாடு உண்டென தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பிரிட்டன் உயர் ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக்கிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து 1823 இல்,இலங்கைக்கு எங்களை அழைத்து வந்ததும் பிரிட்டன்தான். அதேபோன்று 1948 இல், எங்களை அம்போவென கைவிட்டதும் பிரிட்டன்தான்.

இவற்றைக் கூறி குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க வரவில்லை. இந்த வரலாற்றை நினைவூட்டவே இங்கு வந்ததாகவும் மனோகணேசன் எம்பி,தெரிவித்தார்.

பிரிட்டன் உயர் ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக்கை சந்தித்த போதே தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன் எம்பி மற்றும் பிரதி தலைவர் வி. இராதாகிருஷ்ணன் எம்பி மற்றும் பிரிட்டன் உயர் ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரிட்டன் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கைகளடங்கிய ஆவணத்தை கையளித்த மனோ கணேசன் எம்பி இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வரும்போதெல்லாம், 1948இல் இலங்கையின் வெளிநாட்டு வைப்பு, ஜப்பானுக்கு அடுத்தப்படியாக ஆசியாவில் அதிகமாக இருந்தது என்று சொல்லுவார். அது உண்மை. அன்று இலங்கையில் இருந்த ஒரே ஏற்றுமதி தொழில் தேயிலை, இறப்பர் ஆகிய பெருந்தோட்ட தொழில்துறைதான். எமது மக்களின் உழைப்பு, வியர்வை, இரத்தம் ஆகியவைதான் அந்நியச்செலாவணியை அதிகரித்திருந்தது.இதை, பிரிட்டன் உணர வேண்டும்.

ஆனால், 1948இல் சுதந்திரத்தின் பின்னர் எமக்கு கிடைத்த பரிசு எமது குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு ஆகியவைதான். ஆனால், இங்கேதான் பிரித்தானியாவின் பொறுப்பு தவற விடப்பட்டது. 1948ல் இலங்கை குடியரசு ஆகவில்லை. 1972 வரை எமது நாடு டொமினியன் அந்தஸ்த்தில் இருந்தது. பிரிட்டன் மகாராணிதான் எங்கள் நாட்டு தலைவராக இருந்தார். 1972 வரை,இங்கே அவரது பிரதிநிதி மகா தேசாதிபதி இருந்தார்.

ஆகவே பிரிட்டன் மகாராணியின் அரசாங்கத்தின் கண்களுக்கு முன்தான் இந்த உலக மகா அநீதி நிகழ்ந்து. எமது குடியுரிமையும், வாக்குரிமையையும் பறித்து எம்மை நாடு கடத்திய போது பிரிட்டன் பார்த்துக்கொண்டு இருந்தது. கால்நடைகளை பகிர்ந்து கொண்டதைப் போன்று இந்தியாவும் எமது மக்களை சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் உள்வாங்கிகொண்டது.

இதனால் எங்கள் அரசியல் அதிகாரம் இலங்கையில் பலவீனமடைந்தது. அந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் இல்லாவிட்டால் இன்று இலங்கை பாராளுமன்றத்தில் 25 மலையக தமிழ் எம்பிக்கள் இருந்திருப்போம். வடக்கு, கிழக்கு தமிழ் சகோதர எம்பிகளுடன் சேர்த்து இலங்கையில் 50 தமிழ் எம்பிக்களுக்கு குறையாமல் பலமாக இருந்திருப்போம். இலங்கையின் இனப்பிரச்சினை இந்தளவு மோசமடைந்திருக்காது. இவை அனைத்துக்கும் ஆரம்பம், 1948இல் சுதந்திரத்தின் பின் மலையக தமிழ் மக்களின் குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு ஆகியவைதான்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT