'ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' | தினகரன்

'ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்'

இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பு

பகைவருக்கு எதிராக அவர்களை அழிக்க கரங்களை உயர்த்துவதற்குப் பதில் அவர்களை அரவணைக்க ஆசீர்வதிக்க நாம் கரங்களை உயர்த்தவேண்டும் என்று  நற்செய்தியில் இயேசு நமக்குஅழைப்பு விடுக்கின்றார்.

நம்மில் எத்தனை பேர் அவ்வப்போது, கடவுளைப்போல் மாற விழைகிறோம். அல்லது, கடவுளை நம்மைப்போல் மாற்ற விழைகிறோம்?

நமக்கெதிராக பிறர் தவறிழைக்கும்போது, நம்மை அவமானப்படுத்தும்போதும் கோபமும் பழிவாங்கும் உணர்வுகளும் நம்முள் பொங்கி எழுகின்றன. அந்த உணர்வுகளை நியாயப்படுத்த கடவுளையும் நம்மோடு கூட்டு சேர்த்துக்கொள்கிறோம். கடவுளைப் போன்ற சக்தி நமக்கிருந்தால் அல்லது கடவுள் நம் பக்கமிருந்தால் நம் பகைவர்கள் அழிந்துபோவர் என்று நாம் எண்ணிப்பார்க்கிறோம்.

'நியாயம்' என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் இவ்வெண்ணங்களை உறுதிசெய்யும் வகையில் நம் மதங்களில் பழி தீர்க்கும் தெய்வங்கள் உள்ளனர். கிரேக்கக் கடவுள் சீயுஸ், ஜெர்மானியக் கடவுள் தோர், என பல பழிதீர்க்கும்தெய்வங்கள் பல வடிவங்களில் இருக்கிறார்கள்.

"பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன" (இணைச்சட்டம் 32:35, உரோமையர் 12:19, எபிரேயர் 10:30) என்று கூறும் கடவுளையும் தீமை செய்த மனிதர்களை வெள்ளத்தினாலும் நெருப்பினாலும் அழிக்கும் கடவுளையும் விவிலியத்தில் பார்க்கிறோம்.

நம் பழமொழிகளில் தண்டனை வழங்கும் கடவுளை நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடுகிறோம். "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியில் பொறுமையாக ஆனால், நிச்சயமாக இறைவன் தண்டனை வழங்குவார் என்று கூறி சமாதானம் அடைகிறோம்.

பழிக்குப் பழி அல்லது தவறு செய்வோரைத் தண்டிப்பது மனிதருக்குள்ள இயல்பு என்ற கருத்தோடு நின்றுவிடாமல் அத்தகைய பண்பு இறைவனிடமும் உள்ளது என்று சொல்லும் அளவு நம் மதங்களும் மரபுகளும் பாடங்கள் சொல்லித்தரும் வேளையில் கடந்த ஞாயிறு வாசகங்கள் இந்த எண்ணங்களுக்கு சவால்களாக ஒலிக்கின்றன.

தன் கண்முன் உறங்கிக்கொண்டிருக்கும் எதிரியைக் கொல்லாமல் அமைதியாகச் செல்லும் தாவீதை முதல் வாசகத்தில் (1சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23) சந்திக்கிறோம்.

தாவீதைக் கொல்லும் வெறியுடன் அலைந்து திரிந்த மன்னன் சவுல் களைப்புற்று ஓரிடத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கருகே அவரது ஈட்டியும் நிலத்தில் குத்தப்பட்டு நிற்கிறது. இதைக் கண்ட தாவீதின் மனதில் கட்டாயம் போராட்டம் எழுந்திருக்கும். அவருடைய போராட்டத்தை இன்னும் கடினமாக்கும்கையில் அவருடன் சென்ற தோழர் அபிசாய் "இந்நாளில், கடவுள், உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார். ஆதலால், இப்பொழுது, நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்" (1சாமு. 26:8) என்று கூறுகிறார். உறங்கும் எதிரி ஊன்றப்பட்ட ஈட்டி கொலை செய்ய தயாராக இருந்த கூலிப்படை என அனைத்தும் தனக்கு ஆதரவாக இருந்தாலும் தாவீது சரியான முடிவெடுக்கிறார். பழிக்குப்பழி என்ற உணர்வால் மட்டும் தாவீது ஆட்கொள்ளப்பட்டிருந்தால் தனக்குக் கிடைத்த வாய்ப்பை இறைவன் தந்த அடையாளமாக எடுத்துக்கொண்டு சவுலைக் கொன்றிருக்கலாம்.   ஆனால் மன்னன் சவுலை உயிரோடு விட்டுவிட்டுச் சென்றார் தாவீது. அத்துடன் நின்றுவிடாமல் சவுல் தன் தவறை உணர்ந்து நல்வழி திரும்பவேண்டும் என்ற ஆவலில் சவுலின் ஈட்டியை தன்னுடன் எடுத்துச்சென்றார் தாவீது. அவர் தூரத்திலிருந்து எழுப்பிய குரலால் தூக்கம் கலைந்து கண்விழித்த மன்னன் சவுல் தாவீதின் குரலைக் கேட்டதும் அவரைக் கொல்லும் வெறியுடன் தன் ஈட்டியைத் தேடியிருக்க வேண்டும். அதே ஈட்டியை சமாதானத்தின் அடையாளமாக மாற்ற விழைந்த தாவீது, அவரிடம் பேசினார். 1சாமுவேல் 26: 22-23

தாவீது, "அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக்  கொண்டு போகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப, ஆண்டவர் உம்மை ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை" 1 (சாமுவேல் 26: 22-23)என்றார்.

"உம்மேல் நான் கை வைக்கவில்லை" என்று தாவீது கூறும் சொற்களை "உமக்கெதிராக என் கரத்தை உயர்த்தவில்லை" என்று ஒரு சில மொழிபெயர்ப்புகளில் காண்கிறோம். பகைவருக்கு எதிராக அவர்களை அழிக்க கரங்களை உயர்த்துவதற்குப் பதில் அவர்களை அரவணைக்க ஆசீர்வதிக்க நாம் கரங்களை உயர்த்தவேண்டும் என்று நற்செய்தியில் இயேசு அழைப்பு விடுக்கிறார்.

'பகைவருக்குப் பகைமை; வெறுப்போருக்கு வெறுப்பு; சபிப்போருக்குச் சாபம்' என்பது இவ்வுலகம் சொல்லித்தரும் மந்திரம். ஆனால் இயேசு நற்செய்தியில், "பகைவரிடம் அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி..." என்று சவால்களை ஒன்றன்பின் ஒன்றாக, அடுக்கி வைக்கிறார்.

'மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' (லூக்கா 6:29) என்று இயேசு கூறிய சொற்களை மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் போன்றோர் தங்கள் அறவழி,அகிம்சை வழிப் போராட்டங்களின் தாரக மந்திரம்.

மறுகன்னத்தைக் காட்டுதல் மேலாடையுடன் அங்கியை வழங்குதல் என்ற செயல்களால் பிறருக்குள் உருவாகும் மாற்றங்களைக் கூறும் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று:

பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன் மறுகன்னத்தைக் காட்டும் பல உன்னத உள்ளங்கள் இன்றும் வாழ்கின்றனர்.

மன்னிப்பதால் மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களை மாற்றும் கனிவையும்  துணிவையும், இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.


Add new comment

Or log in with...