Tuesday, April 23, 2024
Home » இஸ்லாம் வலியுறுத்தும் மனித நேயம்

இஸ்லாம் வலியுறுத்தும் மனித நேயம்

by sachintha
December 22, 2023 7:41 am 0 comment

ஒரு மனிதன் மற்ற மனிதனோடும், ஏனைய ஜீவராசிகளோடும் உறவாடும் போது கடைப்பிடிக்க வேண்டிய மிகப்பிரதானமான அடிப்படையாக மனித நேயத்தை இஸ்லாம் அடையாளப்படுத்தியுள்ளது. மனித நேயத்தின் கருவூலமாக பார்க்கப்படும் கருணையை இஸ்லாத்தின் மிகப் பிரதானமான அடிப்படையாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான்.

கருணையை அல்லாஹ் அவனுக்குரிய உயர்ந்த பண்பாகவும் அவனுடைய திருநாமமாகவும் ஆக்கியுள்ளான். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்’) என்ற மந்திரத்தை கொண்டே ஒரு முஸ்லிம் தனது அனைத்து விதமான நற்கருமங்களையும் மேற்கொள்ள வேண்டும். இது இஸ்லாத்தின் கட்டளை. அவனுடைய அனைத்து கருமங்களிலும் கருணை கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தையே எடுத்தியம்புகின்றது இஸ்லாம். ‘ரஹ்மான்’ – கருணையாளன் ஆகிய ரப்புடைய எண்ணமும், காருண்ய மனப்பாங்கும் மனித செயற்பாடுகளில் இன்றியமையாதது என்பதுதான் இஸ்லாத்தின் கோட்பாடாகும். ‘ரஹ்மான்’ என்ற கருணையை அல்லாஹ் தனக்குரிய பண்பாக மட்டும் அமைத்துக் கொள்ளவில்லை.

அல்லாஹ்வை நோக்கிப் பயணிக்கின்ற மனிதனை கருணையோடு அணுகுவதை அல்லாஹ் அவன் மீது கடமையாக்கியுள்ளான். ‘நிச்சயமாக ரஹ்மான் ஆகிய அல்லாஹ்வின் கருணை மட்டிடமுடியாதது. அது அனைத்தையும் சூழ்ந்தது. ‘என்னுடைய அருளோ எல்லா வஸ்துக்களிலும் சூழ்ந்து விசாலமாகியுள்ளது’.

(அல் குர்ஆன் அல்-அஃராப்-156) .

இந்த பிரம்மாண்டமான பிரபஞ்ச அமைப்பும், அதன் நியதிகளும், அதில் அவன் படைத்திருக்கும் படைப்பினங்களின் படைகோலங்களும், தொழிற்பாடுகளும் அந்த ரஹ்மானின் எல்லையற்ற கருணையையே பறைசாற்றுகிறது. அடி மனதிலிருந்து ஆர்ப்பரித்தெழுகின்ற மனித நேயத்தின் வெளிப்பாடு தனக்கு என்ன நேர்ந்தாலும் மற்றவர்களது மகிழ்ச்சியிலும் வெற்றியிலும் இன்பம் காண்கின்ற மனப்பக்குவத்தை தான் ஒரு மனிதனுக்கு கற்றுக்கொடுக்கும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், உயிருள்ள ஈரலிப்பான ஒவ்வொரு பொருளிலும் கருணையோடு நடந்து கொள்வதற்கு கூலி இருக்கிறது’ என்றுள்ளார்கள்.’

(ஆதாரம்-: ஸஹீஹ் அல் புஹாரி).

இவ்வாறு மனிதன் அல்லாத ஏனைய படைப்பினங்கள் மீதும் கருணையோடும் அன்போடும் உறவாடும் படி வலியுறுத்தக்கூடிய பல நபிமொழிகளை காணலாம். இஸ்லாமிய ஷரீஆவில் கருணை, அன்பு, இரக்கம் பற்றி குறிப்பிடப்படுகின்ற அறிவுரைகளையும், வழிகாட்டல்களையும் உற்றுநோக்கும் போது ஒரு மனிதனுடைய ஈடேற்றத்துக்குரிய ஆணிவேராக அவை விளங்குகின்றன. அன்பும், கருணையும் இல்லையென்றால் அவன் இஸ்லாமியனாக இருக்க முடியாது.

இதனை, ‘உங்களில் ஒருவர் அவருடைய குழந்தை, பெற்றோர், உலக மனிதர்கள் அனைவரை விடவும் நான் நேசத்திற்குரியவனாக இல்லையென்றால் அவர் ஈமான் கொண்டவராக மாறமுடியாது’ என்ற நபிமொழி எடுத்தியம்புகிறது. ஒரு மனிதனது ஈமான் நபி (ஸல்) அவர்கள் மீது அவர் வைத்திருக்கின்ற அன்பை வைத்து அளவிடப்படுகின்றது என்பது தெளிவாகிறது.

இவ்வுலக வாழ்வு அருள் நிறைந்ததாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற வேண்டுமெனில் பூமியிலுள்ள மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பையும், இரக்கத்தையும் பரிமாறி கருணை உள்ளம் கொண்டவர்களாக வாழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒருவருக்கொருவர் இரக்கத்தோடும் கருணையோடும் வாழ்கின்ற போது அவர்கள் மீது அல்லாஹ் அவனது கருணை மழையைப் பொழிகின்றான். அதனால் நபி (ஸல்) அவர்கள், ‘இரக்கம் காட்டக் கூடியவர்கள் மீது கருணையாளனாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுகின்றான். பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். வானில் உள்ளவர்கள் உங்கள் மீது இரக்கம் காட்டுவார்கள்.’ என்றுள்ளார்கள்.

(ஆதாரம்: சுனன் அத் திர்மிதி)

இந்நபிமொழியின் ஊடாக இரக்கம் காட்டுவதற்கும், கருணை கொள்வதற்கும் இனம், மதம், மொழி என்ற எந்த அடையாளமும் தேவையில்லை என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ‘பூமியில் உள்ளவர்கள் மீது’ என்று பொதுப்படையாகவே கூறியுள்ளார்கள். இங்கு குறிப்பிட்ட ஒரு சாராரை நபி (ஸல்) அவர்கள் முற்படுத்தவில்லை. உயிரினங்களுக்கிடையில் அன்பு காட்டுவதில் எவ்வித பாகுபாடோ, பக்கச்சார்போ இல்லாத சமநிலையைப் பேணி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. எதிலும் எல்லை மீறிச் செயல் படுவதையோ அல்லது பொடுபோக்காக செயல்படுவதையோ இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒரு சமூகம் மனிதப் பண்பாடும் நாகரிகமும் கொண்ட சமூகமாக மாற வேண்டுமெனில் அச்சமூகத்தில் மனித நேயம் கொண்ட மனிதர்கள் உருவாக்கப்படவேண்டும். மனிதர்கள் தொடர்புபடுகின்ற ஒவ்வொரு விடயத்திலும் கனிவும், கசிவும், இனிமையும், இங்கிதமும் இருக்கவேண்டும். இது ஓரு பிராணியை அறுப்பதாக இருந்தாலும் சரியே என்ற இஸ்லாத்தின் உயரிய வழிகாட்டலை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு இயம்புகிறார்கள். ‘நிச்சயமாக அல்லாஹுதஆலா ஒவ்வொரு வஸ்துக்களும் கருணையுடன் நோக்கப்பட வேண்டும் என்பதை கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் (பிராணிகளை) அறுக்கும் போது கருணையை கடைபிடியுங்கள், (பிராணிகளை அறுக்க முற்படுபவர்) கத்தியை நன்றாகக் கூர்மையாக்கி, அறுக்கப்படும் பிராணியை ஆற்றுப்படுத்தவும்.’ (ஆதாரம்-: ஸஹீஹுல் முஸ்லிம்)

கருணையின் மறுவுருவான காருண்ய நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய வெற்றிகரமான சமூகப்புரட்சிக்கு ஆணிவேராக அமைந்தது அன்பும், கருணையுமே ஆகும். எனவே நாம் காணும் இன்றைய இரக்கமற்ற, கொடுமையும், வன்மமும் நிறைந்த உலகிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில் மனித மனங்கள் அன்பும், கருணையும் நிறைந்ததாக மாற வேண்டும். மனித வாழ்வோடு தொடர்புபடுகின்ற ஒவ்வொரு செயற்பாடுகளிலும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் இனம், மதம், மொழி என்ற அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ‘அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வின் குடும்பத்தினர்’ என்ற நபிமொழியை அளவுகோலாகக் கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பும், யுத்தமற்ற, மோதல்கள் அற்ற அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு உலகை காணலாம். இறைத்தூதரின் இலக்கு மனித குலத்திற்கு அருளும் கருணையுமாகும். ஒரு தடவை நபிகளார் ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இணைவைப்பவர்களுக்கு எதிராக பிராத்தியுங்கள் என்று கூறப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை, நான் அருளாகவே அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று கூறினார்கள்’. (ஆதாரம்-: முஸ்லிம்)

இன்றைய வேகமான உலகின் போக்கு மனித நேயமற்ற, கல்நெஞ்சங்கொண்ட ஜடப்பிண்டங்களாக மனிதர்களை மாற்றி விடுவதில் முனைப்பாக உள்ளது. தன்னோடு ஒன்றாக வாழ்கின்ற தனக்காக உழைக்கின்ற, தனக்காகவே வாழ்கின்ற மனிதர்களுடன் கூட கருணை கொள்வதற்கோ, அன்பை பரிமாறிக் கொள்வதற்கோ எந்த அவகாசத்தையும் இன்றைய உலக ஒழுங்கு பெரும்பாலான மனிதர்களுக்கு வழங்குவதில்லை, கண்முன்னே ஒரு மனிதன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாலும் அவன் உயிர் காக்க தன்னாலான உதவிகளை செய்வோம் என்ற அடிப்படை மனித உணர்வு கூட இல்லாதவர்களாகவே எம்மில் பலர் வாழ்கின்றனர். இது முற்றிலும் மாற்றிக்கொள்ளப்பட வேண்டிய பண்பாகும்.

அன்பு, கருணை, இரக்கம், பரிவு முதலான உயரிய பண்புகள் மூலமாகத்தான் இஸ்லாத்தின் தூதை எடுத்தியம்ப முடியும். லெபனானிய அறிஞர் பய்ஸல் மௌலவி அவர்கள் குறிப்பிடுவது போன்று ‘முஸ்லிம் அல்லாதவர்கள் மீது, எனக்கு அன்பும், இரக்கமும் இல்லையென்றால் நான் எப்படி இஸ்லாத்தின் தூதை எத்தி வைக்க முடியும்? என்னைச் சூழ உள்ளவர்கள் என்னை எதிர்த்தாலும் நான் அவர்கள் மீது அன்பைப் பொழிந்தே ஆகவேண்டும்.

கலாநிதி, அல்ஹாபிழ்

எம்.ஐ.எம். சித்தீக்…

(அல்-ஈன்ஆமி)

B.A.Hons,(Al- Azhar university, Egypt) M.A.& PhD (International Islamic university, Malaysia)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT