வைகோவை கண்கலங்க வைத்த ஸ்டாலின் பேச்சு | தினகரன்

வைகோவை கண்கலங்க வைத்த ஸ்டாலின் பேச்சு

“அண்ணன் வைகோ எனக்குத் துணையாக இருப்பது மட்டுமல்ல, நான் அவருக்கு எப்போதும் துணையாக இருப்பேன்” என ஸ்டாலின் பேசியதைக் கேட்ட வைகோ மேடையில் கண்கலங்கினார். கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் விழா மதிமுக சார்பில் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் இதில் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய வைகோ, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் உங்களுக்கு நான் எப்படி இருந்தேனோ அது போல் தம்பி ஸ்டாலினுக்கு என் வாழ்நாளெல்லாம் உடன் இருப்பேன் என்று சொன்னதை நினைவுகூர்ந்து பேசினார். அதை தற்போது நிறைவேற்றி வருவதாகவும் வைகோ பேசினார்.

அதன் பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் இதைக்குறிப்பிட்டுப் பேசினார். அவர் குறிப்பிட்டு பேசப்பேச வைகோவின் முகம் மாறியது. அவரது கண்களில் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு சமாளிக்க முயன்றார். ஆனால் ஸ்டாலின் தொடர்ந்து வைகோ குறித்து பேசப்பேச அவரது கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. சட்டென்று துண்டை எடுத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

இதை ஊடக கமராக்களும் அருகிலிருந்த தொண்டர்களும் கவனிக்கத் தவறவில்லை. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கல்லூரி விழாவிலும் வைகோ மாணவர்களிடையே பேசும்போது இன்னும் சில காலம்தான் நான் உயிர் வாழ்வேன், தற்போது நடக்கும் நிகழ்வுகள், காந்தி படத்தைக் கொளுத்துவது, சுடுவதை எண்ணி இதயம் வெடிக்கிறது எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.


Add new comment

Or log in with...