யாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை | தினகரன்

யாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை

யாழில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் விஐயம் செய்த அமைச்சர் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததுடன் அபிவிருத்தி தொடர்பான நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.  

இந்நிலையில் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்திலுள்ள விகாரைக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் விகாராதிபதியிடம் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.  

அதனைத் தொடர்ந்து அங்கு குடியேறியுள்ள சிங்கள மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.  அதன் போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.  

குறிப்பாக, வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை, மின்சாரம் மற்றும் கல்வி துறையில் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அம் மக்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர். குறிப்பாக அப்பிரதேசத்தில் பாடசாலை அமைப்பதன் அவசியம் குறித்தும் மக்கள் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அங்குள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்து அங்குள்ள நிலைமைகளை அமைச்சர் ஆராய்ந்திருந்தார். யாழில் குடியேறியுள்ள சிங்கள மக்களும் பல குறைபாடுகளுடனே வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

இந் நிலைமையில் அரசுடனும் பேச உள்ளதாகவும் அதனடிப்படையில் அவற்றைச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.  

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து மீளக் குடியேறுகின்ற மக்களுக்குரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆகவே அவற்றை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வடக்கு ஆளுநரிடம் கேட்டுள்ளேன் என்றார். 

(பருத்தித்துறை விசேட நிருபர்)   


Add new comment

Or log in with...