தேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம் | தினகரன்

தேசிய வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலையக வீடமைப்புத் திட்டம்

பெருமளவு வளங்களும் வசதிகளும் வீடமைப்பு அதிகார சபை போன்ற நிறுவனங்களையும் கொண்டுள்ள தேசிய வீடமைப்பு அமைச்சு முன்னெடுக்கும் வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக குறைவான வளங்களையும் நிறுவனக் கட்டமைப்புகளையும் கொண்டிருக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு மலையகத்தில் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிரிவித்துள்ளார்.  

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியீட்டத்தில் டிக்கோயா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருபது தனிவீடுகளைக் கொண்ட 'தங்கவேல்புரம்' பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.  

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.ராஜாராம், எம்.ராம் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாட்டில் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கும் மூன்று அமைச்சுகள் உள்ளன. தேசிய வீடமைப்பு விடயங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினாலும் வடக்கு, கிழக்கு மாகாண வீடமைப்பு நேரடியாக பிரதமர் தலைமையிலும் இடம்பெறும் போது அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் வீடமைப்புத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

எனினும் ஏனைய இரண்டு அமைச்சுகளைவிட மலையக வீடமைப்புக்கான வளங்களும் நிறுவன அமைப்புகளும் குறைவாகும்.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினூடாகவே முழு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் தேசிய வீடமைப்பு அமைச்சுக்கு நிகராக மலையக வீடமைப்புத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.  

இன்று அம்பாறையில் 20வீடுகளைக் கொண்ட புதிய கிராமம் ஒன்றை அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்து வைக்கும் அதேநாளில் நாம் டிக்கோயாவில் 20வீடுகளையும் ஆனைத்தோட்டத்தில் 10வீடுகளையும் தலவாக்கலையில் 20வீடுகளையும் கொண்ட மூன்று கிராமங்களை மக்களிடம் கையளிக்கின்றோம். 

  மலையக கல்விச் சமூகம் மலையக அபிவிருத்தி பணிகளை தற்போது அவதானிக்கத் தொடங்கியுள்ளது. மலையக அதிகார சபையை உருவாக்கி நாம் மலையக கல்வியியலாளர்களையும் அதில் உள்வாங்கியுள்ளோம். இந்த அரசியல்  பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய முன்னேற்றப் பாதையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


Add new comment

Or log in with...