மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள் | தினகரன்

மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு உபாதைகள்

சுற்றுச்சூழல் மாசடைவதால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும், சுவாசம் தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதும் பரவலாக அறியப்பட்ட விடயம் தான். ஆனால் காற்று மாசடைவதால் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்தும். அதன் விளைவாக உயிரிழப்பும் கூட ஏற்படலாம் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும். இன்று சுற்றுச்சூழல் சீர்கேடு மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. அதனால் இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டிய தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது.  

அந்த வகையில் காற்று மாசடைவதற்கு இன்றைய காலகட்டத்தில் பெரிதும் பங்களிப்பது வாகனங்களில் இருந்து வெளியாகும் அளவுக்கு அதிகமான நச்சுப்புகையாகும். என்றாலும் வாகனத்தில் இருந்து வெளியாகும் புகையால் காற்று சிறுக சிறுக மாசடையத் தொடங்குவதையும் மறந்து விட முடியாது. புகையின் மூலம் வெளிப்படுகின்ற நச்சுத்தன்மை கொண்ட உலோகப் பொருட்கள், கட்மியம் உள்ளிட்ட பல இரசாயனங்கள் உடலுக்குள் செல்வதால்  நுரையீரல் உட்பட பல உறுப்புகளும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க தொடங்கும்.  

அதாவது, மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதன் விளைவாக மூச்சுத்திணறல் போன்ற சுவாசக்கோளாறுகள் ஏற்படும். அத்தோடு குறைப்பிரசவம், நீரிழிவு நோய் போன்றவற்றுக்கும் கூட முகம் கொடுக்க நேரிடலாம். நுரையீரலுக்குள் செல்கின்ற விஷத்தன்மை கொண்ட உலோகப் பொருட்கள், தாதுக்கள் இரத்தத்தில் கலந்து சிறுநீரகங்களுக்குள் செல்லும். இதன் விளைவாக நச்சுத்தன்மை சிறுநீரக நோய் (Toxic Nephropathy) ஏற்படலாம். இதன் காரணத்தினால் சிறுநீரை வடிகட்டி, வெளியேற்றுகின்ற நெப்ரோன்கள் பாதிக்கப்படும். சிறுநீர் கழிக்கும்போது இரத்தமும் கலந்து வெளியேறும்.  

மேலும் சிறுநீர்ப்பையில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதேநேரம் உடலில் உள்ள புரதச்சத்து குறையத் தொடங்கும். அழற்சியும் தோற்றம் பெறும். அதனைத் தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம், இரத்தசோகை என்பனவும் ஏற்படும்.

நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுத்திணறல், ஆஸ்துமா, தொடர் இருமல் என்பனவும் கூட தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.  

மேலும் நுரையீரலில் சயோரகம் (Tuber Culosis) ஏற்படுவதற்கும் வாய்ப்புகளும் உள்ளன. நாளடைவில் இந்த உறுப்பில் COPD எனப்படுகின்ற Chronic Obstructive Pulmonary Disease உண்டாகும். குறிப்பாக மாசடைந்த காற்றை தொடராக சுவாசிக்கும் போது நீரிழிவு நோய் தோற்றம் பெறவும் வாய்ப்பு உள்ளது. அத்தோடு காற்று மாசடைந்தால் இதயப் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன.

இதேவேளை தொடராக புகையைச் சுவாசித்து வருபவரின் இதயம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமுள்ளன.

குறிப்பாக, புகையைத் தொடராகச் சுவாசிப்பதால் தோற்றம் பெறும் ஆஸ்துமாவுக்கு உள்ளாகின்றவர்களை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமையும் கூட உருவாகும்.  

மேலும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடல் ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உண்டாகுமோ அவை அனைத்தும் காற்று மாசடைவதாலும் ஏற்படும்.

குறிப்பாக மரங்களில் இருந்து வெளிப்படுகின்ற கானீரொட்சைட், காற்றில் மிதக்கும் கண்ணுக்கு புலப்படாத துகள்கள் (Particulate Matter) போன்றவற்றை சுவாசிப்பதால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதுமைப் பருவத்தினர் போன்றோர் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் இவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே காணப்படும். தாய்மை அடைந்த பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படவும், குறைப்பிரசவத்தில் சிசுக்கள் பிறக்கவும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு பிறக்கின்ற சிசுக்களின் உடல் எடை மிகவும் குறைவாகவே காணப்படும்.   அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படுகின்ற பாதிப்புகளைக் குறுகிய கால மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் என வகைப்படுத்தலாம். முதல் வகையான குறுகிய கால பிரச்சினைகள் என்ற வகையில் இருமல், சளி, மூச்சுத்திணறல் என்பன உண்டாகும்.  

நீண்ட கால பிரச்சினைகள் என்ற வகையில் நோக்கும் போது 75வயதில் ஏற்படக்கூடிய மரணம் கூட முன்கூட்டியே 55வயதிலேயே ஏற்படவும் சாத்தியங்கள் உள்ளன.

காற்று மாசடைவதால் ஏற்படுகின்ற உடல்நலக் குறைபாட்டைத் தவிர்க்கவென பல வழிமுறைகள் உள்ளன. அதாவது ஒருவருக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.  

ஆகவே காற்று மாசடைவதைத் தவிர்ப்பதிலும் தூய காற்றைச் சுவாசிப்பதிலும் ஒவ்வொருவரும் விஷேட கவனம் செலுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அது அவரவர் ஆரோக்கியமேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் பக்க துணையாக அமையும்.  

(முஹம்மத் மர்லின்)


Add new comment

Or log in with...