மறைந்து விடாத சினிமா | தினகரன்


மறைந்து விடாத சினிமா

இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால் தனது தந்தைக்கு பாதணி களவு போன விடயம் தெரிந்துவிடும் எனும் பயத்தில் அலி, ஜகராவினுடைய உரையாடல்கள் எழுத்து மூலமாக நிகழும் அக்காட்சியானது இத்திரைப்படத்தின் மிக உச்சமான ரசனையினை நுகர்வோர்ப் பரப்பினில் ஏற்படுத்தியது என்பதினை நாம் உணரலாம்.

ஈரானிய இயக்குனரான மஜீத் மஜீதியின் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளிவந்து உலகப் புகழ் பெற்ற ஓர் உன்னதாமன திரைப்படம்தான் The Children Of Heaven ஈரானியத் திரைப்படச் செயற்பாட்டினை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வழியினை ஏற்படுத்திய இத்திரைப்படம் 1997ஆம் ஆண்டு மொண்ரில் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான கிரோண்ட் பரிசினை தன்வசமாக்கியது. அது மட்டுமல்லாமல் சர்வதேச உலகத் திரைப்படங்களில் அதிகம் திரையிடப்பட்ட இத்திரைப்படம் பல சினிமாக் கல்லூரிகளில் முதன்மைப் பாடமாக இருந்து கொண்டிருப்பதினை நாம் அவதானிக்கலாம்.

அலி, ஜகார எனும் பெயர் தாங்கிய இரண்டு சிறுவர்களின் வறுமை வாழ்வினை ஒரு பாதணி மூலம் காட்சிப்படுத்திய படைப்புத்தான் The Children Of Heaven தன்னுடைய தங்கையின் பாதணியினை தைப்பதற்காக கொடுத்த கடைக்காரனிடமிருந்து பாதணியினை அலி வாங்கி வருகின்றபோது அதனை ஒரு பிச்சைக்காரன் திருடிவிடுகிறான்.

இது தனது தந்தைக்குத் தெரிந்தால், தன்னைத் தண்டிப்பார் என்ற பயத்தில் இவ்விடயத்தினை வீட்டிற்குச் சொல்லாமல் இருவரும் மறைக்கின்றனர். இப்பாதணிக்காக படம் முழுவதும் போராடி வறுமை வாழ்வின் யதார்த்த நிலையினையும், உணர்வுகள் பறிமாறப்படும் உறவின் போராட்டத்தினையும் மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தி, சினிமாப் பண்பினை ஒரு பாடமாக கற்பித்துத் தந்த இத்திரைப்படம் நேர்த்தியான கதையமைப்புக்களில் முதன்மையானது எனலாம், இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் சத்தமாகப் பேசினால், தனது தந்தைக்குப் பாதணி களவு போன விடயம் தெரிந்துவிடும் எனும் பயத்தில் அலி, ஜகராவினுடைய உரையாடல்கள் எழுத்து மூலமாக நிகழும் அக்காட்சியானது இத்திரைப்படத்தின் மிக உச்சமான ரசனையினை நுகர்வோர்ப் பரப்பினில் ஏற்படுத்தியது என்பதினை நாம் உணரலாம்.

ஒரு காலகட்ட ஈரானிய மக்களின் வாழ்வியல் துன்பங்களினை இரண்டு சிறுவர்களின் துயரங்களோடு பொருத்தி அதனுள்- ஒரு ஹாஷ்யமான  கதையமைப்பினை வெளிப்படுத்திய The Children Of Heaven மஜீத் மஜீதியின் மிக நுணுக்கமான சினிமாவின் நுட்பமாகும்.  இத்திரைப்படத்தினை பார்க்கின்றபோது, ஈரானிய நிலப்பரப்பின் வாசத்தினை நுகர்ந்தது போன்ற ஒரு விம்பத்தினை எம்மில் ஏற்படுத்தும். ஒரு உணர்ச்சிமிக்க திரைப்படம் கொண்டிருக்கவேண்டிய அனைத்து அம்சங்களினையும் உள்வாங்கி இயக்கப்பட்ட இத்திரைப்படம் காலத்தின் நினைவுகளில் மங்காத பாக்கியத்தினை பெற்றுத் தற்காலம்வரைக்கும் பேசு பொருளாக இருப்பது வியப்பிற்குரியதே. இவ்வறான உலக சினிமாவின் முழுதான பண்புடன் இயக்கப்பட்ட The Children Of Heaven ஓர் உன்னதமான படைப்பாகும்.


Add new comment

Or log in with...