துபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது | தினகரன்

துபாய்க்கு 2 கிலோ கஞ்சா கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது

இலங்கையிலிருந்து துபாய்க்கு கஞ்சா கடத்த முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கண்டியைச் சேர்ந்த

48 வயதுடையவரென சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரட்ண தெரிவித்தார்.

இப் பெண்ணின் பயணப் பைக்குள் 2 கிலோ 94 கிராம் கஞ்சா அடங்கிய சிறிய பொதிகள் மீட்கப்பட்டிருப்பதாகவும் சுங்க அதிகாரி கூறினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் (21) மாலை 6.35 மணியளவில் யூ.எல் 225 என்ற விமானம் துபாய் செல்லவிருந்த மேற்படி இலங்கைப் பெண்ணிடம் கஞ்சா இருப்பதாக சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வு பிரிவினரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல் அடிப்படையிலேயே விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் அப்பெண்ணையும் அவரது பயணப் பொதியையும் சோதனையிட்டு கஞ்சா பக்கற்றுக்களை மீட்டுள்ளனர்.

வாசனைத் திரவியங்களின் பக்கற்றுக்களுடனேயே கஞ்சா பக்கற்றுக்கள் இருந்ததாகவும் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் மொத்த பெறுமதி 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

சுங்க அதிகாரிகள் அப்பெண்ணை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

லக்ஷ்மி பரசுராமன்

 

 


Add new comment

Or log in with...