மொரட்டுவை, இரத்மலானையில் கழிவுநீர் வெளியேற்றத் திட்டத்துக்கு பிரான்ஸ் உதவி | தினகரன்

மொரட்டுவை, இரத்மலானையில் கழிவுநீர் வெளியேற்றத் திட்டத்துக்கு பிரான்ஸ் உதவி

இரத்மலானை-மொரட்டுவை கழிவுநீர் வெளியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவர் அமைப்பு 15பில்லியன் ரூபாய்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கும், பிரான்ஸ் முகவரமைப்புக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. 

நிதியமைச்சின் சார்பில் அதன் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவரமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் மார்ட்டின் பேரன்ட் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டும் கலந்துகொண்டார். 

இரத்மலானை-மொரட்டுவை கழிவுநீர் வெளியேற்றத் திட்டத்தின் கீழ் அந்தப் பகுதியிலுள்ள 45ஆயிரம் வீடுகளுக்கு வசதிகள் ஏற்பத்திக் கொடுக்கப்படவுள்ளன.

இது 10ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், வர்த்தக மற்றும் தொழில்ச்சாலைகளை இணைக்கும் கழிவுநீர் வலையமைப்பைக் கொண்டதாகவிருக்கும். இது இலத்மலானையில் ஏற்கனவே உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் பராமரிக்கப்படும். 

இத்திட்டத்தின் கீழ் கழிவகற்றல் மற்றும் சுகாதாரம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு வழங்கல், அறிவூட்டல், சாதகமான தொடர்பாடல்களை ஏற்படுத்தல் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.  தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆறு வருடங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.

அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவரமைப்பின் நிதியுதவியில் பொறியியலாளர் ஆலோசனையுடன் ஏற்கனவே தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை திட்டத்தை வடிவமைத்துள்ளது. 

இலங்கையில் பசுமைப் பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுவே இலங்கைக்குப் பெருமளவிலான அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதுடன், வேலைவாய்ப்புக்களையும் வழங்கி வருகிறது.

இவ்வாறான நிலையில் சூழலைப் பாதுகாப்பது பாரிய சவலாக மாறியிருப்பதுடன், நாட்டின் நிலைப்புத் தன்மைக்கு பொருளாதாரம் கணிசமான பங்காற்றிவருகிறது. 2020ஆம் ஆண்டில் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் சுத்தமான கடற்கரைகளைப் பேணுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  


Add new comment

Or log in with...