சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 13 புதிய ஹோட்டல்களுக்கு அனுமதி | தினகரன்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க 13 புதிய ஹோட்டல்களுக்கு அனுமதி

நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் ஹோட்டல்களுக்கான முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 54.7மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஹோட்டல் முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.  

இந்தக் காலப்பகுதியில் 13ஹோட்டல்களை அமைப்பதற்கான முதலீடுகள் வந்திருப்பதாகவும், இதில் 12ஹோட்டல்கள் சிறியவை என்பதுடன் ஒவ்வொன்றும் தலா 49அறைகளைக் கொண்டவை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு ஹோட்டல் திட்டம் 50அறைகளைக் கொண்டதாகவுள்ளது.

இந்தப் புதிய ஹோட்டல் முதலீடுகள் மூலம் ஒட்டுமொத்தமாக 264அறைகள் சுற்றுலாத்துறையில் புதிதாக இணைக்கப்படவுள்ளன. ஹோட்டல்களுக்கான கட்டுமானப் பணிகள் பூர்த்தியடைந்ததும் ஒவ்வொரு ஹோட்டலும் சராசரியாக 20அறைகளைக் கொண்டதாக அமையும் என்றும் அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது. 

அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்களில் நான்கு ஹோட்டல்கள் காலி மாவட்டத்திலும் இரண்டு ஹோட்டல்கள் கம்பஹா மாவட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன.  

இதனைவிட 14.8மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான புதிய ஒன்பது ஹோட்டல்கள் இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் தமது நடவடிக்கைகளை ஆரம்பிபக்கவுள்ளன.  

கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை 36,693ஆகக் காணப்பட்டதுடன், இறுதிக் காலாண்டில் அந்த எண்ணிக்கை 38,214 ஆக உயர்ந்திருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. 


Add new comment

Or log in with...