1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம் | தினகரன்


1000 ரூபா சம்பள உயர்வு; வடக்கில் 10,000 கையொப்பம்

வடக்கு ஆளுநர் அறிவிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் வடமாகாணத்திலிருந்து 10ஆயிரம் கையெழுத்துக்களை சேகரித்து அரசுக்கு அனுப்பவுள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

அத்தோடு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்கு என எழுதப்பட்ட ஸ்டிக்கரை சட்டையில் அணிவதுடன்,பொது நாட்களில் கறுப்பு சட்டை அணிவதற்கும் தாம் தீர்மானித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,000ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கை தொடர்பாக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய ஆளுநர்,  200 வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. இலங்கையில் ஏனைய சமூகங்களை விட மலையகம் வாழ் தமிழர்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப வாழ்க்கை படி உயர வேண்டும்.

அதேவேளை எந்த நிபந்தனையும் இல்லாமல் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். வட மாகாண மட்டத்தில் நாம் மலையக மக்களுடைய சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக சுமார் 10 ஆயிரம் கையெழுத்துக்களை பெற்று அரசுக்கு அனுப்புவதற்கு தீர்மானித் திருக்கிறோம் என்றார்.   

(பருத்தித்துறை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...