அரசியலமைப்புப் பேரவை முழுமையாக அரசியல் மயம் | தினகரன்

அரசியலமைப்புப் பேரவை முழுமையாக அரசியல் மயம்

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை

19ஆவது திருத்தச்சட்டமென்ற குழந்தை இன்று துஷ்பிரயோகம்

பாராளுமன்றின் தீர்மானத்துக்கமைய செயற்பட தயார்

எம்மால் உருவாக்கப்பட்ட 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற புனிதமான குழந்தை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டினார்.

சட்டத்தின் ஆட்சி, சிறந்த அரச நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கில் 19ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு அதன் ஊடாக அரசியலமைப்புப் பேரவை அமைக்கப்பட்ட போதும் அது முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியலமைப்புப் பேரவை தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணையொன்று ஐ.ம.சு.முவினரால் நேற்றுக் கொண்டுவரப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லையெனச் சுட்டிக்காட்டிய அவர், இது விடயத்தில் பாராளுமன்றம் எடுக்கும் தீர்மானத்துக்கமைய செயற்படத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடுகள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவியுயர்வுகள் போன்ற விடயத்தில் பேரவையின் செயற்பாடு நியாயமானதாக முன்னெடுக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கமைய அரசியலமைப்புப் பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டாலும் அவை செயற்படுவதற்கான ஒழுங்குவிதிகள் பற்றி எந்தவித தெளிவான நிலைப்பாடுகளும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக அரசியலமைப்புப் பேரவையினால் நிராகரிக்கப்பட்ட நீதிபதிகள் தொடர்பில் யார் பொறுப்புக் கூறுவது என்ற பிரச்சினை காணப்படுகிறது. அரசியலமைப்புப் பேரவைக்கு தன்னால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் தெரியப்படுத்தப்படுவதில்லை. இது தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையை சிலர் பிழையாக அர்த்தப்படுத்திவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, உயர் நீதிமன்றங்களுக்கு அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நான் எந்தவொரு விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. எனினும், அரசியலமைப்புப் பேரவையின் நியமனங்களை நான் விமர்சிப்பதாக பிழையாக அர்த்தம் கற்பிக்கின்றனர்.

நான் பாராளுமன்றத்தின் உறுப்பினரல்ல. இருந்தாலும் ஜனாதிபதி என்ற ரீதியில் மூன்று மாதங்களுக்கு ஒருதடவை பாராளுமன்றத்துக்கு சமுகமளித்து உரையாற்றுவதற்கு அரசியலமைப்பில் எனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமையவே நான் இவ் விவாதத்தில் உரையாற்றுகின்றேன்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 49 அமைப்புகள் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டன. தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே நாம் 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தை முன்வைத்தோம்.

நான் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டு மூன்று வாரங்களில் சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டதும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி வித்தியாசமின்றி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் செயற்பட சபை எமக்கு காலமொன்றை வழங்கியது. சபையில் இருந்த கட்சிகள் யாவும் நட்புடன் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்கின. இந்த ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே 19ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றமுடிந்தது. இவ்வாறு உருவாக்கப்பட்ட 19ஆவது திருத்தச்சட்ட மூலம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழியாகும்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் விவாதம் நடத்தி 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்த இரண்டு நாட்களும் நான் பாராளுமன்றத்திலேயே இருந்தேன். இவ்வாறு அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட புனிதமான குழந்தையே 19ஆவது திருத்தச்சட்ட மூலமாகும்.

எனினும், எந்தவித குறைபாடுகளுமின்றி உருவான புனித குழந்தையான 19ஆவது திருத்தச்சட்டமூலம் தற்பொழுது அங்கவீனமான குழந்தையாகி, துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. சிங்கள நாளிதழொன்றில் இது பற்றி சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புப் பேரவையில் சிவில் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைவிட அரசியல் பிரதிநிதிகள் அதிகரித்தமையால் பேரவை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இது உருவாக்கப்பட்டதன் நோக்கத்திலிருந்து வேறு பாதையில் பயணிக்கிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு காணப்பட்ட எல்லையற்ற அதிகாரத்தை அரசியலமைப்புப் பேரவையின் ஊடாக பாராளுமன்றத்துக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் வழங்குவதே 19ஆவது திருத்தத்தின் நோக்கமாகவிருந்தது. இலங்கையில் உள்ள சகல மதத்தினரும் தானம் செய்வதில் சிறந்தவர்களாக உள்ளனர். நாம் உணவு, உடை எனப் பலவற்றைத் தானம் செய்துள்ளோம். யுத்தகாலத்தில் இராணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இளைஞராகவிருந்த காலத்தில் நான் இரத்ததானம் செய்துள்ளோன். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியாகப் பதிவியேற்ற பின்னர் எனது அதிகாரத்தையே நான் தியாகம் செய்துள்ளேன். அதிகாரத்துக்கு வந்த பின்னர் தனது அதிகாரத்தை தானம் செய்த ஒரேயொரு தலைவராக நான் காணப்படுகிறேன். இவ்வாறு உண்மையாகவிருந்து உருவாக்கிய இந்த புனிதக் குழந்தை தற்பொழுது துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதுபற்றிக் கதைக்கும்போது அதிகாரத்தை தானம் வழங்கியவன் என்ற ரீதியில் அரசாங்கத்தை உருவாக்கி பயணிக்கும்போது எதிர்பார்த்த நோக்கத்தை அடையமுடியாமல் முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். அரசியலமைப்புப் பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் கடப்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அதற்கான எந்த கடப்பாடுகளும் உருவாக்கப்படவில்லை.

மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு செயற்படுகின்றபோதும் அவை சரியான முறையில் செயற்படுகின்றனவா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எவரும் ஆய்வுகளைச் செய்யவில்லை. உரிய முறையில் ஆய்வுகளைச் செய்தாலே மாகாணசபையின் செயற்பாடுகளை சரியான முறையில் முன்னெடுக்க முடியும்.

மனசாட்சிக்கு கட்டுப்பட்டே நான் இங்கு உரையாற்றுகின்றேன். எமது கைகளால் ஏதாவது தவறு ஏற்பட்டால் அதனைத் திருத்திக்கொள்ள வேண்டும். வாகனமொன்றை செலுத்திச் செல்லும்போது வாகனம் வீதியைவிட்டு விலகினால் அதனை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவரவேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நான் சபையில் கூறிய கருத்துக்கள் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிழையான அர்த்தப்படுத்தல்களை வழங்கியுள்ளனர். அரசியலமைப்புப் பேரவை போன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் வரையறைகள், வழிகாட்டல்கள் என்பன குறிப்பிடப்படவில்லையென்பதையே நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

பாரிய மோசடிக்காரர்கள், பாதாள உலகக் குழுக்களின் தலைவர்களை வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைத்திருக்க முடியாததாலேயே நாம் அவர்களை அங்குனுகொலபெலஸ்சவுக்கு மாற்றினோம். இதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் கேள்விகேட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் அங்கு பாதுகாப்புக்குட்படுத்தப்பட்டது எவ்வாறு என்பது பற்றி அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். சுயாதீன ஆணைக்குழுவான மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பாதாள உலகக் குழுவினரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயற்படுகின்றனர். அவர்களைவிட நாட்டிலுள்ள 21 மில்லியன் மனிதர்களின் மனித உரிமைகளைப் பற்றி அவர்கள் கவனத்தில் எடுப்பதில்லையா? எனது உரையின் பின்னர் சேவையிலிருந்து விலகிச் செல்லவேண்டும் போல் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருந்தார். இலங்கையில் மாத்திரம் தான் பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பாதுகாக்க மனித உரிமை அமைப்புக்கள் முன்வருகின்றன. அமெரிக்காவிலோ வேறெந்த நாட்டிலோ அவ்வாறில்லை. அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலைகளில் எவ்வாறு கைதிகள் நடத்தப்படுகின்றனர் என்பது பற்றி அனைவரும் அறிந்தது.

அரசியலமைப்புப் பேரவையினால் மேற்கொள்ளப்படும் நீதிபதி நியமனங்கள் குறித்து நான் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. நிராகரிக்கப்பட்டவர்கள் பற்றியே நான் கேள்வியெழுப்பினேன். அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்ட நீதிபதிகள் ஏன் தாம் நிராகரிக்கப்பட்டோம் என்ற காரணத்தை அறிந்துகொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர். தாம் ஏன் நிராகரிக்கப்பட்டோம் என்பதை என்னிடமே கேட்க முடியும். பேரவையிடமோ அல்லது பிரதம நீதியரசரிடமோ அவர்களால் கேட்க முடியாது. இவ்வாறான நிலையில் அரசியலமைப்புப் பேரவைக்கு நான் பரிந்துரைத்த 24 நீதிபதிகளின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சிலருடைய பெயர்களை மூன்று தடவைகளுக்கு மேலும் அனுப்பியுள்ளேன். ஏன் அவர்கள் நிராகரிக்கப்பட்டனர் என்பதற்கான காரணம் கூறப்படவில்லை.

இதனால் எதிர்காலத்தில் பதவியுயர்வு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் நீதிபதிகள் தைரியம் இழந்துள்ளதுடன், தமது எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை இழுந்துள்ளனர். அரசியலமைப்புப் பேரவை முழுமையாக அரசியல் மயமாகியிருப்பதே இந்த நிலைமைக்குக் காரணமாகும்.

பதவி உயர்வுக்குப் பொருத்தமில்லாத நீதிபதிகளின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டால் ஏன் அவர்கள் நிராகரிக்கப்பட்டனர் என்ற காரணத்தை வெளியிடும் பொறுப்பு பிரதம நீதியரசருக்கும் உள்ளது. அரசியலமைப்பு பேரவை வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாயின் மூன்று மாதங்களுக்கு ஒருதடவை எனக்கு அனுப்பப்படும் அரசியலமைப்புப் பேரவை தொடர்பான அறிக்கையில் ஏன் நிராகரிக்கப்பட்டவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படுவதில்லை.

அரசியலமைப்புப் பேரவையானது அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும். அரசியலமைப்புப் பேரவை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான கடப்பாடுகள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தயாரிக்கப்பட்ட கடப்பாடுகளைக் கொண்டே செயற்படுவதாக கூறுகின்றனர். 19ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஏன் 17ஆவது திருத்தத்தினால் தயாரிக்கப்பட்ட கடப்பாடுகளை பேரவை இன்னமும் பயன்படுத்துகிறது.

சட்ட மாஅதிபர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் பதவிகளுக்கு அரசியலமைப்புப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பிலும் விமர்சனங்கள் உள்ளன. சரியான வழிகாட்டல்கள் அல்லது கடப்பாடுகள் தயாரிக்கப்பட்டிருந்தால் இந்த விமர்சனங்கள் ஏற்பட்டிருக்காது.

அதேநேரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகக் கூறியே நான் அதிகாரத்துக்கு வந்தேன். நான் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன். இது விடயத்தில் என்னால் முடிவு எடுக்க முடியாது. பாராளுமன்றமே முடிவுசெய்ய வேண்டும். பாராளுமன்றம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படத் தயாராக இருக்கிறேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...