Friday, April 19, 2024
Home » மழை வெள்ளம் வழிந்தோட முடியாமல் குடியிருப்புக்குள் தேக்கம்; அவதியுறும் மக்கள்

மழை வெள்ளம் வழிந்தோட முடியாமல் குடியிருப்புக்குள் தேக்கம்; அவதியுறும் மக்கள்

by Prashahini
December 21, 2023 12:16 pm 0 comment

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவருகின்ற பலத்த மழைவீழ்ச்சியால் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்கள் குடியிருப்புக்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும். தொற்று நோய்க் கிருமிகளுக்கும் முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அங்கலாய்க்கின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டாபுரம், முனைத்தீவு, பெரியபோரதீவு, பழுகாமம், கோவில்போரதீவு, உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் உள்ளுர் வீதிகளில் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

முறையான வடிகானின்மையே மழைவெள்ளம் இவ்வாறு தேங்கிக்கிடப்பதற்குக் காரணம் எனவும், சம்மந்தப்பட்டவர்கள் இதனைக் கருத்திற் கொண்டு தேங்கிக் கிடக்கும் வெள்ள நீரை வெட்டி குளத்திற்கு அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மேலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் தாம் பலத்த இன்னல்களை அனுபவிக்க நேரிடும எனவும் அப்ககுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 336 பேர் வெள்ள அனர்த்ததினால் பாதிப்புற்றுள்ளதாகவும், வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ள குடும்பங்கள் அருகிலுள்ள நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளதாகவும். போரதீவுப் பற்றுப்பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அப்பகுதியிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ள இந்நிலையில் பெரிய குளங்களாகவுள்ள நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 31அடியும் தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 17அடி 3அங்குலமும், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 31அடி 8அங்குலமும் உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 7அங்குலமும் கட்டுமுறிவுக்குளத்தின் நீர் மட்டம் 16அடி 11அங்குமும் வெலிக்காக் கண்டிய குளத்தின் நீர்மட்டம 15அடி 5அங்குலமும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பெறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இன்று (21) காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாவட்டத்தில் ஆகக்கூடியதாக உறுகாமம் பகுதியில் 34.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT