திருமலை துறைமுகப் பகுதியில் பாரிய தொழிற்பேட்டை | தினகரன்

திருமலை துறைமுகப் பகுதியில் பாரிய தொழிற்பேட்டை

பிங்கிரியவில் அடுத்த மாதம் திறக்கப்படவிருக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான ஒத்துழைப்பை வழங்கும் என அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகப் பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். 

ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,   திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் பாரிய கைத்தொழில்பேட்டையொன்றை அமைக்கவுள்ளோம். இதற்கான முதலீட்டாளர்களைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள ஆரம்பித்துள்ளோம். இதனூடாக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.  

மார்ச் மாதம் 4ஆம் திகதி பிங்கிரிய தொகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயமொன்றை திறந்து வைக்கவுள்ளோம். 2004ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் உருவாகும் முதலாவது முதலீட்டு ஊக்குவிப்பு வலயமாக இது அமையவுள்ளது. முதற்கட்டமாக 164ஏக்கரிலும் இரண்டாவது கட்டத்தில் 284ஏக்கரிலும் மூன்றாவது கட்டத்தின்போது முழுவதுமாக 1200ஏக்கரிலும் இந்த வலயம் அமைக்கப்படும்.  

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அமைக்கப்பட்டதால், பல தொழில்துறைகள் உருவாகின. தற்பொழுது அமைக்கப்படவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் முதலீட்டாளர்கள் நிறைந்துள்ளனர். அவர்களுக்கான இடத்தை ஒதுக்க முடியாமல் உள்ளோம். பிங்கிரியவில் உருவாக்கவிருக்கும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தினால் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய சக்தியாக அமையும்.  

2017- – 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் 45வீதத்துக்கும் அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டுவர முடிந்துள்ளது. கடந்த மூன்றரை வருடங்களில் அரசாங்கம் முன்னெடுத்த பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த முதலீடுகளைப் பெறமுடிந்துள்ளது.  

எஸ். சிறிதரன் (த.தே.கூ) 

வடக்கு, கிழக்கில் நெல்லை ஆதாரமாகக் கொண்டுள்ள விவசாயிகள் நியாயமான விலைக்கு விற்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நெல்கள் மிகவும் குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்யப்படுகிறது. நெல் சந்தைப்படுத்தல் சபை உரிய காலத்தில் நேர்த்தியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட விவசாயிகளிடமிருந்து எந்தவொரு நெல்லையும் நெல் சந்தைப்படுத்தும் சபை இதுவரை கொள்வனவு செய்யவில்லை. விவசாயத்துக்காகப் பெற்ற கடன் அதற்குச் செலுத்தவேண்டிய வட்டி என்பவற்றைக் கொடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. பாதிக்கப்படும் மக்களுக்கான காப்புறுதிகள் சரியாக வழங்கப்படுவதில்லை. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவாசாயத்தை அரசாங்கம் ஏன் புறக்கணிக்கிறது.  

கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தாம் உற்பத்தி செய்யும் கள்ளை போத்தலில் அடைத்து விற்பனை செய்வதாயின் அரசாங்கம் அவர்களிடமிருந்து போத்தலைக்கு 35ரூபாவை வரியாக அறவிடுகிறது. ஒரு கள்ளை 150ரூபாவுக்கே அவர்களால் விற்பனை செய்ய முடிகிறது.

இவ்வாறிருக்க வெளிநாட்டுக் கம்பனிகளிடமிருந்து பெறப்படும் பியர்களை அரசாங்கம் 100ரூபாவுக்கு அனுப்பிவிடுகிறது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா  

எமது நாட்டில் இளைஞர்களில் பெரும்பாலானர்கள் முச்சக்கரவண்டிச் சாரதிகளாக இருக்கின்றனர். அரசாங்க ஊழியர்கள் 10லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கும் நிலையில், பெரும் எண்ணிக்கையான எமது தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்துக்கே பங்களிப்புச் செலுத்துகின்றனர். எமது பொருளாதாரத்துக்குப் பயன்படுத்தக்கூடிய திறமையான தொழிலாளர் வளத்தை நாம் ஒவ்வொரு இடத்துக்கு அனுப்பியிருப்பதால், தொழிலாளர் வளம் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது. இவர்களுக்கு உரிய பயிற்சிகள், தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்துக்குப் பயன்படுத்த வேண்டும். 

தனியார்துறையில் காணப்படும் தொழிற்சந்தைக்குத் தேவையான தொழிலாளர்களை வழங்கவேண்டிய தேவை உள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பட்டதாரிகள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்துகின்றனர்.  

எமது நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வந்து தொழில்துறைகளை ஆரம்பிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதுடன், தேசிய தொழில்துறையினரையும் ஊக்குவிப்தற்கு நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். இவர்களை ஊக்குவிப்பதற்காகவே என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா போன்ற வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.  

மஹிந்த அமரவீர (ஐ.ம.சு.மு) 

நாடு என்ற ரீதியில் முன்னேறுவதாயின், ஏற்றுமதியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்றுமதித்துறை​யை வளர்ச்சியடையச் செய்யாவிட்டால் நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியாது. எமக்குத் தேவையான உணவைக்கூட இறக்குமதி செய்யும் நிலைமையே காணப்படுகிறது. 50ஆயிரம் மெற்றிக்தொன் பழங்களை நாம் இறக்குமதி செய்கின்றோம். சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியுள்ளது. ஆண்டாண்டு காலமாக ஏற்றுமதி செய்துவரும் தேயிலை, இறப்பர் போன்ற பயிர்கள் வீழ்ச்சி கண்டுள்ளன. ஒரு கிலோ மிளகுக்கு 1,000ரூபா பெறும் நிலைமை விவசாயிகளுக்குக் காணப்பட்டது. எனினும், இறக்குமதி காரணமாக மிளகுக்கு உற்பத்தியாளர்கள் அத்துறையிலிருந்து விலகியுள்ளனர். போதிய வருமானம் கிடைப்பதில்லையென்பதால் அவர்கள் அத்துறையிலிருந்து வெளியேறுகின்றனர்.  

மீள் ஏற்றுமதி செய்வதற்காக வியட்நாமிலிருந்து மிளகு இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட மிளகு காரம் குறைந்ததாகக் காணப்பட்டது. இதனை இலங்கை மிளகுடன் கலந்து மீள் ஏற்றுமதி செய்தனர். இதனால் சர்வதேசத்தில் இலங்கையின் மிளகுக்கான நற்பெயரில் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.  

டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (ஜே.வி.பி) 

நாட்டை முன்னேற்ற முடியாமைக்கு இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் காணப்படும் பொருளாதாரக் கொள்கையே காரணம் என பெரும்பாலான பலர் கருத்தை முன்வைத்தனர். எனினும், இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் பொருளாதாரக் கொள்கைக்கு ஈடுகொடுக்கும் அமைச்சர்களும் இருக்கின்றனர். அதாவது சிறிய காலத்துக்கு தமது நிலைப்பாட்டை மாற்றக்கூடியவர்களும் இருக்கின்றனர். கடந்த 17வருடங்களில் ஏற்றுமதி வருமானம் 2மடங்காக அதிகரிக்கும்போது இறக்குமதிக்கான செலவீனம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு உணவு மற்றும் குடிபான இறக்குமதிக்காக மாத்திரம் நாம் ஏறத்தாழ 2பில்லியன் ரூபாய்களை செலவுசெய்துள்ளோம்.  

மஹிந்தானந்த அளுத்கமகே (ஐ.ம.சு.மு) 

இலங்கையின் முதலீடுகள் குறித்து இன்று விவாதம் நடத்தப்பட்டாலும் கூட இந்த ஆட்சியில் பாரிய முதலீடுகள் எவையும் கொண்டுவரப்படவில்லை. ஒரு சில சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்தாலும் கூட அவர்கள் எதோ ஒரு அச்சம் காரணமாக திரும்பி சென்று விடுகின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில் கப்பம் கேட்கும் நிலைமையும் உள்ளது. இந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் எவரும் இலங்கைக்கு வரவில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் செய்துகொண்ட பாரிய வேலைத்திட்டங்கள் மூலமாக இணங்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் தான் இன்றும் நாட்டில் முதலீடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக துறைமுக நகர் மற்றும் சங்கிரில்லா போன்ற வேலைத்திட்டங்களின் மூலமாக நாம் கொண்டுவந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மட்டுமே இன்றும் செயற்பட்டு வருகின்றனர். 

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...