Friday, March 29, 2024
Home » India Vs South Africa 3rd ODI; இந்தியா – தென் ஆபிரிக்கா இன்று மோதல்

India Vs South Africa 3rd ODI; இந்தியா – தென் ஆபிரிக்கா இன்று மோதல்

- தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம்

by Prashahini
December 21, 2023 11:22 am 0 comment

இந்தியா – தென் ஆபிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (21) மாலை 4.30 மணிக்கு பார்ல் நகரில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு 2ஆவது ஆட்டத்தில் தென் ஆபிரிக்க அணி 8 விக்கெட்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ள கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட்போட்டியில் இரு அணிகளும் இன்று பார்ல் நகரில் மோதுகின்றன.

இந்திய அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இரு ஆட்டங்களிலும் முறையே 5 மற்றும் 4 ஓட்டங்களில் நடையை கட்டினார். 3ஆவது வீரராக களமிறங்கும் திலக் வர்மாவிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்படவில்லை. அநேகமாக இன்றைய ஆட்டத்தில் அவரது இடம் பறிபோகக்கூடும். அவர், நீக்கப்படும் பட்சத்தில் ரஜத் பட்டிதார் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

சஞ்சுசாம்சன், ரிங்கு சிங் ஆகியோரும் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முதல் 2 ஆட்டங்களிலும் அரைசதம் அடித்த சாய் சுதர்சன், 2ஆவது ஆட்டத்தில் அரைசதம் அடித்த கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங், அவேஷ்கான் ஆகியோர் கெபர்ஹாவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதேவேளையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார், இரு ஆட்டங்களிலும் விக்கெட் ஏதும் கைப்பற்றாதது பந்துவீச்சு பலவீனத்தை அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க சுழற்பந்து வீச்சில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஜோடி 2ஆவது ஆட்டத்தில் கூட்டாக 14 ஓவர்களை வீசி 70 ஓட்டங்களை விட்டுக் கொடுத்த நிலையில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

இவர்களது பந்து வீச்சு அழுத்தம் கொடுக்காததால் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்கள் 4 பேரை அந்த ஆட்டத்தில் இந்திய அணி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இவர்களில் ஒருவர் நீக்கப்பட்டு யுவேந்திர சாஹல் களமிறக்கப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டுமானால் இந்திய அணி துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT