Friday, March 29, 2024
Home » பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த விரிவான மூலோபாய செயற்பாடுகள்

பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த விரிவான மூலோபாய செயற்பாடுகள்

ஒன்றிணைந்தால் ஓரிரு வருடங்களில் சுபீட்சம்

by Gayan Abeykoon
December 21, 2023 9:55 am 0 comment

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் விரிவான மூலோபாய அடிப்படையில், செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய சவால்களை எதிர்கொண்டால், அடுத்த ஒரு சில வருடங்களில் இலங்கையின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிசெய்யவும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளவும் முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று(20) நடைபெற்ற உள்நாட்டு இறைவரி

ஆணையாளர் சங்கத்தின் 19ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிர்வாகத்தில் 82% இச்சங்கம் அங்கத்துவம் பெற்றுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிர்வாகத்துடன் நேரடியாகப் செயற்படும் பிரதான உத்தியோகத்தர்கள் மாத்திரமே இச்சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். நாட்டின் வர்த்தகத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி எமது அரசாங்கம், இந்தியா, சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்து செயலாற்றி வருகிறது. இதுமாத்திரமன்றி, அதையும் தாண்டிய வாய்ப்புக்களை ஆராய்வதுடன் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே எமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதில் எதிர்கொள்ளும் போட்டியை முறியடிக்கும் வகையில், இலங்கை தற்போது முழுமையான டிஜிட்டல் மயமாக்கலில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, டிஜிட்டல் பரிமாற்ற முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான ஆராய்ச்சி மையமும் (AI) இணைந்து செயல்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் நாட்டை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரிவான திட்டத்தை உருவாக்குவதே, இதன் முதன்மை நோக்கமாகும்.

பசுமைப் பொருளாதாரமாக மாறுவதற்கான முயற்சிகளுடன், உலகளாவிய நிலைபேற்றுத் தன்மை இலக்குகளை அடைவதற்கு, சூழலுக்கு உகந்த நடைமுறைகளை உறுதி செய்வதன் மூலம் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய இலங்கை செயற்பட்டு வருகிறது. இந்த இலக்குகளை அடைய, குறுகிய காலத்தில் குறைந்த முயற்சியுடன் எளிதாக அடையக்கூடிய துறைகளை நாம் கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். அதன்படி, சுற்றுலா, விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை நவீனப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நெல் விளைச்சலை மேம்படுத்துதல், பயன்படுத்தப்படாத நிலங்களை விடுவித்தல் மற்றும் சிறிய அளவிலான விவசாயத்தை ஊக்குவிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொடர்பில், இலங்கையின் இயலுமை குறித்து இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை. இந்தியா உட்பட ஏனைய நாடுகளுக்கு எமது மேலதிக வலுசக்தியை ஏற்றுமதி செய்ய முடியும் என்று கண்டறிந்துள்ள, காற்று மற்றும் சூரிய வலுசக்தித் திட்டங்களில் கணிசமான முதலீடுகளைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT