பச்சிலைப்பள்ளியில் மார்ச்சில் மீள்குடியேற்றம் | தினகரன்

பச்சிலைப்பள்ளியில் மார்ச்சில் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் 70குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளனர். 

இருந்த போதும், கடந்த 2000ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய இடங்கிளிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் கடந்த 19வருடங்களுக்கு மேலாக மீள்குடியேற முடியாத நிலையில் வெளிமாவட்டங்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். 

குறித்த பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக தாங்கள் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ளதாகவும் விரைவாக வெடிபொருட்களை அகற்றி தங்களை மீள்குடியேற்றுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பில் நேற்று பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு வினவிய போது,    முகமாலை இந்திராபுரம், வேம்பொடுகேணி ஆகிய பகதிகளில் தற்போது வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதில் ஒரு பகுதி காணிகளில் வெடிபொருடகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றப்பட்ட காணிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கென 70 குடும்பங்கள் வரையில் தமது பதிவுகளை மேற்கொணடுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், முகமாலை வேம்பொடுகேணி இந்திராபுரம் ஆகிய பகுதிகளில் மீள்குடியேறுவதற்காக இதுவரை 286 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.   

பரந்தன் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...