கள்ளநோட்டு விவகாரம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல் | தினகரன்

கள்ளநோட்டு விவகாரம்; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேகநபரை மீண்டும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஆயிரம் ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் பிணையில் விடுவிக்குமாறும் கெப்பித்திகொல்லாவ நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.  

கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் எச். கே.மாலிந்த ஹர்சன த அல்விஸ் முன்னிலையில் நேற்று (18) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்

அதே இடத்தைச் சேர்ந்த ஜுனைதீன் நஸ்லிம் சறூக்(35வயது) எனவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.  

கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி ஹொரவப்பொத்தான நகர்ப்பகுதியில் 1000ரூபாய் 29போலி நாணயத்தாள்களை கடைகளுக்கு விநியோகம் செய்யும் போது மஹதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.  

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின்படி போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகம் செய்த பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.   

பிரதான சந்தேக நபரான "ரொட்டவெவ நஸ்லிம்" கைதுசெய்யப்பட்டதையடுத்து 29ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கைதுசெய்யப்பட்ட மஹதிவுல்வெவ மூன்று இளைஞர்களுக்கும் தலா 15000ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் சரீரப் பிணையிலும் செல்லுமாறு நீதவான் கட்டளையிட்டார்.  

இதையடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கெப்பித்திகொல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.  

அத்துடன் மொரவெவ பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 175000கள்ள நோட்டுக்களுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின்படி, இவரே பிரதான சந்தேக நபர் எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.  

இதனையடுத்து பிரதான சந்தேக நபரான "ரொட்டவெவ நஸ்லிம்" மை திருகோணமலை நீதிமன்றத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆஜர்படுத்துமாறும் நீதவான் கட்டளையிட்டார். 

ரொட்டவெவ குறூப் நிருபர்  


Add new comment

Or log in with...